சருகும் மண்ணாங்கட்டியும்


மலையூர் என்ற கிராமத்தில் மண்ணாங்கட்டியும் இலைச் சருகும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களது ஒற்றுமையைக் கண்டு ஊரோர் அனைவரும் பிரமிப்பு அடைந்தனர். இவர்களது உடல் எடை வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தில் மிகுந்த ஒற்றுமை கொண்டுள்ளனர். காலையில் இருந்து மாலை வரை மரத்தடியில் அமர்ந்து பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பர். இரவு வரும் முன்னர் அவரவர் தங்களது வீட்டிற்குச் சென்று உறங்கிடுவர். இப்படியே இவர்களது பொழுது வழக்கமாக சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த கிராமத்தில் வயது முதிர்ந்தவர்கள் சிலர் காசிக்குப் பயணம் செல்வதை மரத்தடியில் பேசிக் கொண்டிருந்த மண்ணாங்கட்டியும் சருகும் கவனித்தன. உடனே சருகு மண்ணாங்கட்டியிடம் "ஏன் அவர்கள் காசிக்கு செல்கிறார்கள் ?" என்று கேட்டது.

"வாழ்க்கையில் தங்களது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னர் மனிதர்கள் தங்களது இறுதிக்காலத்தில் காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி தங்களது பாவங்களை நீக்கிக் கொள்வார்கள். அதோடு தாங்கள் மறுபிறவி இல்லாத வீடுபேறு நிலை அடைய வேண்டுமாறு சாமியிடம் வேண்டிக் கொள்வார்கள்." என்று மண்ணாங்கட்டி கூறியது.

"நாமும் வாழ்ந்து முடித்தவர்கள் தானே! அப்படியானால் நீயும் நானும் காசிக்குச் சென்று நமது பாவங்களை நீக்கி விட்டு வரலாமா ? " என்று சருகு கேட்டது.

இதைக் கேட்ட மண்ணாங்கட்டி, "சரி, இங்கு வெட்டியாக அமர்ந்து கொண்டு இருப்பதற்குப் பதிலாக காசிக்கு சென்று புண்ணியமாவது அடையலாம்!" என்று சம்மதம் தெரிவித்தது.

யாரிடமும் யோசனை கேட்காமல் இருவரும் பிரயாணத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் காசிக்குச் செல்வது ஊரில் யாருக்கும் தெரியாது. பசிக்கும் பொழுது கிடைத்த உணவுகளை உண்டு பசியாறினர்.

இரண்டு நாட்கள் கடந்ததில் பாதி தொலைவு கடந்தது. அப்பொழுது காற்று வேகமாக வீசியது. மண்ணாங்கட்டியால் காற்றின் வேகத்தைத் தாங்கி நிற்க முடிந்தது. ஆனால் இலைச் சருகு காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் அலைமோதிக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட மண்ணாங்கட்டி சருகின் மேல் அமர்ந்து கொண்டது. அதனால் இருவரும் காற்றில் பறக்காமல் தப்பித்துக் கொண்டனர். ஒரு வழியாக காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை வந்தது. தன்னைச் சரியான நேரத்தில் காப்பாற்றிய மண்ணாங்கட்டிக்கு நன்றி சொல்லி விட்டு தங்களது பிரயாணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.

சிறிது தூரம் கடந்ததும் பெரும் மழை பொழிய ஆரம்பித்தது. மழைக்கு ஒதுங்கி நிற்க அங்கு ஒரு இடம் கூட இல்லை. ஒரே ஒரு மரமும் சிதைந்த கூரைவீடும் மட்டுமே இருந்தன.

மழை பெய்யும் பொழுது மரத்தடியில் ஒதுங்கக் கூடாது என்று சருகு அறிவுறுத்தியது. அதனால் சிதைந்த கூரை வீட்டுக்குள் சென்று ஒதுங்கின. ஆனால் வீடு முழுவதும் மழைநீர் ஒழுகிக் கொண்டு இருந்தது. இருவரும் சற்று உயரமான இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். இருப்பினும் கூரையில் இருந்து ஒழுகும் நீரை மண்ணாங்கட்டியால் சமாளிக்க முடியவில்லை. உடனே மண்ணாங்கட்டியின் மேல் சருகு அமர்ந்து கொண்டது. இருவரும் தப்பித்துக் கொண்டனர். இப்பொழுது மண்ணாங்கட்டி சருகுக்கு நன்றி சொன்னது.

இறுதியாக இருவரும் காசி வந்தடைந்தனர். அங்கே மனிதர்கள், கங்கை நதியில் மூழ்கி எழுந்து பாவங்கள் நீக்குவதை மண்ணாங்கட்டியும் சருகும் பார்த்தனர். தாங்களும் கங்கையில் மூழ்கி எழுவதற்கு படித்துறையில் இறங்கினர்.

அப்பொழுது தான் அவர்களுக்குத் தங்களது அறியாமை நினைவிற்கு வந்தது. காசிக்கு வரும் வழியில் காற்றிலும் மழையிலும் பட்ட அனுபவம் புரிந்தது.

காசியில் கங்கை நதி தனது இருகரைகளை தொட்டுக் கொண்டு மிகுந்த வேகத்துடன் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது.

கங்கை நதியில் மண்ணாங்கட்டி இறங்கினால் தண்ணீரில் கரைந்து விடும். சருகு இறங்கினால் வெள்ளத்தின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடித் செல்லப்பட்டு விடும். இதை உணர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் நொந்து கொண்டனர். பின்னர் இருவரும் சாமியை மட்டும் தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்பினர்.

கதை உணர்த்தும் நீதிகள் :-
**************************************
1. நட்பு என்பது நண்பர்களில் ஒருவருக்கு ஆபத்து நேரும் பொழுது இன்னொருவர் சென்று தகுந்த நேரத்தில் உதவுவதாகும்.

2. ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் முன்பு அதில் அனுபவம் வாய்ந்த நபர்களிடம் இலக்கைப் பற்றி ஆலோசனை மேற்கொண்ட பின்னர் அதற்கு ஏற்ற நபர்களைக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

3. நமது இலக்கு சரி தானா? அதை நம்மால் அடைய முடியுமா? என்று அறிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்பு அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

- C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக