பசுமை உலகம்


பிரியாணியும் பீட்சாவும் சாப்பிட்டு விட்டு
பிளாஸ்டிக்கை பூமிக்கு கொடுக்கிறோம்.

கலர் கலராய் ஆடைகளை நெய்து விட்டு
கழிவுகளை ஆற்றில் கலக்கிறோம்.

காடுகளை வெட்டி கட்டடம் கட்டி விட்டு
கார் நிறுத்த நிழல் தேடுகிறோம்.

இலவசமாய் கிடைத்த குளிர் காற்றைக் கூட
ஏசி வைத்து சூடேற்றி விட்டோம்.

எத்தனை இன்னல்கள் நம்மால் இயற்கைக்கு!
ஆனாலும், இத்தனைக்கும் ஈடு கொடுத்து
எங்கோ தன் எதிர்ப்பை பதிவு செய்கிறது!

உன்னிடத்தில் மழையில்லை என்பதால்
உலகத்திலே மழையில்லை என அர்த்தமில்லை.

எங்கோ ஒரு இடத்தில் இன்னமும்
மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த இயற்கையை வரவேற்கும் வசதிகள் தான்
உன்னிடத்தில் இன்னமும் வரவில்லை.

மனிதா, நீயில்லாமல் மரங்கள் வாழ முடியும்.
மரங்கள் இல்லையென்றால்,
உன் மண்ணிற்கு கூட மறுவாழ்வு கிடையாது.

மரங்களை வெட்டும் போது
வீழ்வது மரங்களல்ல,
உன் மனித குலத்தின் உயிர்கள் தான்.

காஃபி குடிக்க வேண்டுமென்றால்
காராம் பசுவும் வளர்க்க ஆசைப்படு!

வேளா வேளைக்கு உண்ண வேண்டுமெனில்
வேளாண்மை செய்யவும் ஆசைப்படு!

இவைகளெல்லாம் புதுமையான வழிகளல்ல,
இப்படியெல்லாம் வாழ்ந்தவர்கள் தான் நாம்!

ஆளுக்கொரு கூலிங் கிளாஸ் அணிந்தால்
உலகம் குளுமையாகி விடாது!

உலகம் பசுமையாக வேண்டுமென்றால்
உன் உள்ளங்கள் வெள்ளையாக வேண்டும்.

உள்ளம் வெளுப்பது,
உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

இயல்பாய் வாழுங்கள்!
இயற்கையும் உங்களை நேசிக்கும்!

உள்ளத்தின் தூய்மை!
உலகத்தின் பசுமை!

*C. விஸ்வநாதன்