கண்ணன் என் காதலன்


செய்தவை குற்றமோ? செய்பவை குற்றமோ?
தேறுமோர் அறிவிலேன் பேதை!
கொய்த என் மலர்களை குப்பையில் மூடினேன்
குற்றமென்று அறிகிலேன் ஏழை!
கை தவழ் பேரருள் காற்றிடை வீசினேன்
காரணம் காண்கிலேன் பாவி!
மை தவழ் மேனியாய் மயக்கினை தீர்ப்பது
உன் வார்த்தையே கண்ணபிரானே!

நன்றி இல்லாமல் யான் நடந்திருந்தேன் எனில்
நாயினும் கீழ் எனப்படுவேன்
அன்றி யான் செய்தவை அறம் எனப்படுமெனில்
அரசனுக்கு அரசனாய் மகிழ்வேன்
வென்றி யான் கொண்டவை மேன்மை யான் கண்டவை
வியத்தகும் எனதால் அல்லேன்
அன்று எனது அன்னையும் தந்தையும் செய்ததோர்
அறத்தினால் கண்ணபிரானே!

நீண்டதோர் ஆயுளும் நிறைந்ததோர் செல்வமும்
நீ தரக் கேட்டிலேன் தலைவா!
தோண்டும் ஓர் கைக்கு எலாம் சுரப்பதால்
உன்னடி தொழுகிறேன் என்னுயிர் கண்ணா!
ஈண்டு நான், ஆண்டு நீ, என் செயக் கூடுமோ
என்னுயிர்க் கண்ணபிரானே!

முட்டையில் என்னை நான் மூடினேன்
அன்று உனை முழுமையாய்க் கண்டிலேன் ஐயா!
பெட்டையாய் சேவலாய் பொய்யாய்
கட்டையாய் வாழ்க்கையை கழித்த பின்
இன்று உனைக் காண்கிறேன் – என்னையே நானே!
அட்டையாய் ஒட்டினேன் அண்ணலே!
இன்று எனக்கு அருள்புரி கண்ணபிரானே!

**”கவியரசு” கண்ணதாசன்

நதியினைப் போலே நடந்திடுவோமே!


காட்டினில் பிறந்து கடலினை அடையும்
நதியினைப் போலே நடந்திடுவோமே.

ஆயிரம் சொந்தம் ஆறுதல் கூறும்
சேற்றினை நீரால் துடைப்பவர் யாரோ?
வாழ்த்துரை வார்த்தை வளர்ச்சியை மயக்கும்
தூற்றுவர் எச்சம் தூய்மையைக் கெடுக்கும்
கன மழையென்ன? சுடும் வெயிலென்ன?
கடமையைச் செய்வேன், பலனவன் கையில்.

கதிரவன் கோபம் வெயிலாய் தகித்து
கவலைகள் நீங்க பொழுதினைக் கழிப்பான்
ஆழ்கடல் பசித்தால் அலைகளை எழுப்பி
அனைத்தையும் விழுங்கி அமைதியில் தங்கும்
வேதனை வந்தால் விழிதரும் நீரை
விலக்கிடு, அன்று விடியல் தெரியும்.

மண்ணில் தாகம் வாழ்கின்ற பொழுது
மழையது பொய்த்தால் தரை என்ன செய்யும்?
மலை போல் நீ எழுந்து நின்றால் – பின்
மழை முகில் கூட்டம் உன்னுடன் தவழும்
தோல்விகள் முன்னால் தோற்று விடாதே
வெயில் தரும் அவனே, மழை சுகம் தருவான்.


**C. விஸ்வநாதன்

ஒளி விளக்கின் நிழல்



வாழ்க்கையே ஒரு வர்த்தக உலகம்
வாழும் வரை வரவுகள் சேரும்
வயது முடிந்தால் அனைத்தும் செலவினமாகும்

நடந்ததை மட்டும் நினைத்திருந்தால் நிம்மதி பிறக்காது
நடப்பதை எண்ணி செயல் புரிந்தால் நல்லது விலகாது
வந்ததை எல்லாம் வைத்திருந்தால் வரவுக்கு இடமேது?
வருவதை வடிக்கத் தெரிந்திருந்தால் வாழ்வு கசக்காது

பணத்திற்காக பாதை மாறினால் பெரும் பைத்தியக் காரனடா
கொள்கைக்காக வேடம் போட்டால் கொள்ளையடிப் பானடா
சொல்லுக்காக உயிரை விட்டால் அவன் சுத்த தெய்வமடா
சோற்றுக்காக வளைந்து போனால் சொற்கள் நிலைக்காதடா

விளைந்த நிலத்துக்கு விழுந்த பயிரே சொந்த மாகும்
அலையும் கடலுக்கு அலுப்பு நுரையே கரையை தொடும்
பழுப்பு நிறத்துக்கு வெளுத்த நிறமே கவலை தரும்
எரியும் விளக்குக்கு இருட்டு நிழலே தரையில் விழும்


**C. விஸ்வநாதன்

மகிழ்ச்சியின் முயற்சி



மகிழ்ச்சி ஒரு மந்திரச் சாவி...
புன்னகை தேசத்தின் அத்தனைப் பூட்டுகளையும்
மொத்தமாய்த் திறந்து விடும் ஒற்றைத் திறவுகோல்

பூட்டிய இதயங்களைப் புன்னகையால் திறந்து காட்டும்
மனித மனதில் இருந்தால் மழலைப் பள்ளியாக்கும்
வாடிய முகங்களையும் பௌர்ணமி நிலவாக்கும்
வானத்து முகில்களையும் புது வண்ண மயமாக்கும்

மங்கை மடியினிலும் மழலை மொழியினிலும்
கங்கை அலைகளிலும் கலைகள் அனைத்தினிலும்
நீக்கம் அற நிறைந்திருக்கும் அன்பை
நின்று ரசித்தால் நிம்மதியாய்க் கரை சேர்க்கும்

கால் கடுக்க ஓடி வரும் காற்று
கடல் நீரில் களைப்பு நீங்க குளிக்கிறது
மெல்ல கரையேறி மேகத்தை முத்தமிட
தன் மேனி சிலிர்த்து மேகம் கரைகிறது

உச்சி குளிர்ந்து ஓடி வந்த மழைநீர் - மண்ணின்
மிச்ச மானத்தை மீட்டெடுத்து உதவியது
கட்டி வைத்த மானத்தைக் காத்தவனுக்கே
ஒட்டு மொத்தமாகத் தந்து ஊடுருவ விட்டது

மண்ணும் மழைநீரும் மனமாரக் கூடி மகிழ்ந்தன
மரம்செடிகொடிகள் யாவும் மழலையாய் சிரித்தன
பூரித்த மொட்டுகள் பொழுதில் பூப்பெய்தி மணந்தன
பூஞ்சோலை அடர்த்தியில் புத்துணர்வு பரவின

காணும் இடமெல்லாம் பச்சை காலோச்சி நின்றது
காணும் மனத்தை கண் வழியே சென்று நிறைத்தது
ஒன்று மகிழ்ந்ததும் மற்றொன்றை மணக்கிறது
இரண்டும் சேர்ந்த பின் இன்னொன்று பிறக்கிறது

மூன்று சிரிப்பிற்கும் மொத்த அடிப்படை மகிழ்ச்சி
ஒன்று பெற்றதும் இன்னொன்றை ஒட்டுவது முயற்சி
உள்ளம் மகிழ்ந்ததும் உதட்டில் வருவது சிரிப்பு
உன்னையும் என்னையும் அறியா உணர்வின் வெடிப்பு

உன்னையும் என்னையும் ஒருங்கிணைக்கும் கருவி
உணவின் ருசியை உதட்டோரம் காட்டும் அருவி
உழைத்த களைப்பை ஓட விரட்டும் பயிற்சி
உலகத்தை இயங்க வைக்கும் உன்னதமான முயற்சி

உண்பவன் இடத்தில் மட்டுமே இல்லை மகிழ்ச்சி
ஊட்டுபவன் உள்ளத்தையும் உயர்த்துவதே முயற்சி

**C. விஸ்வநாதன்

வேலியில்லாத் தோட்டம்

தாசி என்றும் வேசி என்றும்
தரணியிலே எனக்குப் பல பெயர்கள்
இவை தரம் கெட்ட சொற்களென்றும்
தகாதவள் இவள் என்றும்
தள்ளி வைத்து தான் படிக்கிறார்கள்.

வாசிக்க விலை பேசுபவர்கள் என்னை
வாங்கிக் கொள்ள விருப்பப் படுவதில்லை
வாடிக்கையாய் படிப்பவர்கள் கூட – நான்
வாடி நிற்கையில் வருத்தம் தெரிவிப்பதில்லை

மலரில் கூட ஒரு முறை தான்
மகரந்தச் சேர்க்கை நடைபெறும் – என்னுள்
மணிக்கு ஒரு முறை மகரந்தம் சேர்ந்தாலும்
மலட்டுத் தன்மைக்கே மரியாதை தருகிறார்கள்

வானம் விடிந்தாலும் வாகா இணைந்தாலும்
வாங்கிய துட்டுக்கு வருத்தம் தீர்க்கும் வரை
அமாவாசையும் பௌர்ணமியும் – என்
அகராதிக்கு அப்பாற் பட்டவையே

அகத்தையும் அறிவையும் அப்புறப்படுத்தி விட்டு
சுகத்தையும் மானத்தையும் சுலபமாக இழக்கிறேன்
மறுபிறப்பு ஒன்று கடவுள் விதித்திருந்தால்
அதிலாவது என் மானத்தை மீட்டுத் தரட்டும்

வருவோர் சோகங்களை எல்லாம்
வாங்கிக் கொண்ட பின்னும் புனிதமடைய
நான் கங்கையுமில்லை காவிரியுமில்லை
கால் வயிறு சோற்றுக்கு கற்பை விற்பவள்

பிழையாக பிழைப்பதால் பேச்சுரிமை அற்றவள்
விலை கொடுத்து வாங்கி விருப்பப்படி ஆட
வேசி ஒரு விளையாட்டுப் பொருளல்ல
வேங்கைக்கும் பசியுண்டு வேசிக்கும் வலியுண்டு

வரிக்குதிரையின் கோடுகளை விட – நான்
வாங்கிய கீறல்களுக்கு வலி அதிகம்
விடியாத இரவுகளில் வேலியை உருவாக்க
வியர்வையும் கண்ணீரும் விட்டதுவே மிச்சம்

மேய வரும் காளைகளே,
கொஞ்சம் மெதுவாக வாழ்ந்திடுங்கள்.
வேலியில்லா தோட்டத்திற்கும்
வேதனைகள் இருக்கிறது.

**C. விஸ்வநாதன்


கலைமகள் திருமகிமை



வெண்கடி மலர்க்கமலம் மீட்டும் அகில்வீணை
தளிர்இலை அன்ன பாதம்
தண்ணொளி வீசிடும் பொன்னெழிற் பூமுகம்
பூட்டிய தாயுனைப் போற்றுகிறேன்
எண்ணிய எண்ணங்கள் எழிலுலகைச் சேர்ந்திட
வண்ணங்கள் செய்திடும் வண்ணமயிலே!
எண்ணிலும் எழுத்திலும் எழுதிடா இயல்பிலும்
ஏழிசைக் கூட்டிலும் வசிப்பவளே!

வெண்பனிக் காலையிற் வேதமும் கானமும்
விரவிடக் கண்டிடும் ஞானமயிலே!
தண்ணீர் இருந்திடினும் தளர்த்தி நுகர்ந்திட
சந்ததம் கூறிடும் அன்னமயிலே!
பண்புலம் காட்டிடும் நன்நடை நல்கிட
நின்புலம் ஏட்டினில் ஏற்றியவளே!
வண்டமிழ் நாடெங்கும் வாசமிடும் பூந்தமிழே!
கலைவாணி, அருள்வாய்நீ, அருள்வாணி!

பாவகை: எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

**C. விஸ்வநாதன்


கூட மேல கூட வச்சு...


ஈரக்காத்து வீசையில
நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு
நெருடாம நெருப்பேத்துதே!
கட்டுத்தறி சத்தம் போல
விட்டு விட்டு விக்கல் வந்து
கலங்காம நெனப்பூட்டுதே!

மறுத்துப் பேசாம
மனசு நோகாம
கிறுக்க சரி பண்ணுற

பகுமானமாகத்தான் பேசுற
பனிமூட்டம் போல குளிரூட்டுற
நான் கேக்காத கேள்விக்கும்
தானாவே பதில் சொல்லுற!

மேகத்தோட நெஞ்சுக்குள்ள
மின்னல் வந்து தச்சுருச்சு
மின்சாரத் தடையே இல்ல...
வாழும் வர உந்தன் நெஞ்சில்
வக்கனையா சாய வேணும்
சுகமாக, சுமையாயில்ல...

வயசு போனாலும்
விருப்பம் போகாத
மனசு தா வேணுமே..

தடுமாறிப் போகையில தாங்குற
தள்ளிப் போகும் போது உயிர் வாங்குற
சட்டம் போடாம என் நெஞ்சில்
சரிபாதி நீ ஆளுற....

* C. விஸ்வநாதன்