26 சிவ மூர்த்தங்களின் தரிசனப் பலன்

 1. லிங்கோத்பவர் - மோட்சம் சித்திக்கும்.

2. திரிமூர்த்தி - குழந்தைப்பேறு கிட்டும்.

3. கல்யாண சுந்தரர் - திருமணப் பேறு கிடைக்கும்.

4. சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்.

5. கங்காதரர் - பாவங்கள் விலகும்.

6. நடேசர் - மகப்பேறு கிட்டும்.

7. சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்.

8. ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

9. நீலகண்டர் - விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்.

10. ஹரிஹர மூர்த்தி - வழக்குகளில் வெல்லலாம்.

11. ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே  ஒற்றுமை நிலவும்.

12. உமாசகாயர் - மனைவியின் உடல்நலம் சீராகும்.

13. அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்.

14. தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்.

15. சோமாதி நாயகர் - சகலமும் சித்தியாகும்.

16. சோமாஸ்கந்தர் - குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்.

17. சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்.

18. வீரபத்ரர் - எதிரி பயம் நீங்கும்.

19. காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது.

20. காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்.

21. கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்.

22. திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.

23. பிட்சாடனர் - மோகமாயை விலகும்.

24. ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்.

25. சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்.

26. பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.

எண்ணம் போல் வாழ்க்கை

 ஒரு வீட்டு வாசலில் யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்.

"அம்மா... தாயே... ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா !"


அந்த வீட்டுப் பெண்மணி வெளியே வந்து பார்த்தாள். அங்கே வீதியில் விளையாடிக்

கொண்டிருந்த, தனது ஐந்து வயது மகளை அழைத்து, அவளது கைகளால் அரிசியை,

அள்ளிக் கொடுத்து, யாசகனின் பாத்திரத்தில் இடச் சொன்னாள்.


பெற்று கொண்ட யாசகனும், பக்கத்து வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டான். அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தனது மகளை கூப்பிட்டு, அவளது கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள்.


காலங்கள் உருண்டோடின..


இரண்டு பெண்மணிகளுக்கும் வயது முதிர்ந்து போனது. இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர்களாகினர். அவரவர்கள் தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன..


ஒரு நாள், அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர்.


அங்கே, அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது. மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது.


உடனே, அவள், இறைவனிடம் பதறிக் கதறி முறையிட்டாள். "இருவருமே ஒரே மாதிரி தானே தானம் செய்தோம். எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம்??

ஏற்ற இறக்கம்??" என்று வாதிட்டாள்.


அதற்கு இறைவனோ...

"முதலாமவளோ, தனக்கு பிறகு, தன் குழந்தையும், இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், குழந்தையின் கையில் அரிசியைக் கொடுத்து தானம் செய்யச் சொன்னாள்.

ஆனால் நீயோ... உன் கைகளால் எடுத்தால், அரிசி நிறைய செலவாகும் என்ற எண்ணத்திலே, உன் குழந்தையின் கையால் எடுத்து தானமிடச் செய்தாய்.


இருவரது 'செயலும்' ஒன்றே..

எனினும் 'எண்ணங்கள்' வெவ்வேறு!" என்றார்.


எனவே, எந்த செயலைச் செய்தாலும், மேலான எண்ணங்களோடு செய்யும் செய்தால் தான் நம் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் ஆத்ம திருப்தி தரும். மனநிறைவான உணர்வுக்கும் வழி காட்டும். சுயலாபத்துக்காக செய்யும் செயல்களை விட, பொது நலத்துக்காக செய்யும் செயல்களே வலிமை வாய்ந்தவை; மேலானவை. அதுவே இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்து நிற்கும்.


ஸ்ரீதேவி மாஹாத்மியம் - ஓர் அறிமுகம்

"கலெள சண்டி வினாயகெள" அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும் விநாயகருமே ஆவார்கள்.


துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது. 


சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.


சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து  அறியலாம்.


சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர் எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும் பாஸ்கர ராயர் எழுதிய குப்தவதீ தனிச்சிறப்பு பெற்றவைகளாகும்.


டாமர தந்த்ரம், காத்யாயனீ தந்த்ரம், க்ரோட தந்த்ரம், மேரு தந்த்ரம், மரீசி கல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மாஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.


யக்ஞங்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமர தந்திரம் கூறுகிறது. சிதம்பர ரஹசியத்தில் ஸ்ரீ பரமேஸ்வரர் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தின்  பெருமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கிறார்.


"யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா " என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. 

அதாவது வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என்பது அதன் பொருளாகும்.


இந்த தேவீ மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி உபதேசித்ததாக கூறுவர்.


தான் நம்பிய அமைச்சர்கள் மற்றும் உறவினர்களாலே ஏமாற்றப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்ட சைத்ரிய வம்ஸத்தை சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், தன் சொந்த மனைவி மக்களாலேயே சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஸமாதி என்ற வைச்யனும் காட்டில் சந்திக்கின்றனர்.


இருவரும் கானகத்தில் அலைந்து கடைசியாக ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகின்றனர். இருவரும் தாங்கள் இப்படி தங்கள் சுற்றத்தாராலே ஏமாற்றப்பட்டும்  தங்கள் மனம் அவர்களின் பாலே செல்வதற்கு காரணம் யாது என வினவினர். அப்பொழுது தான் ஸுமேதஸ் நீங்கள் மாயையினால் கட்டுண்டு கிடப்பதாலே இவ்வாறு நிகழ்கிறது என்று கூறினார். மேலும் தேவர்கள் மற்றும் தேவர்களின் தலைவரான ஸ்ரீஹரியும் கூட அம்பிகையின் மாயைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதையும் விளக்கி கூறினார். 


ஒரு சமயம் இப்படி விஷ்ணு மாயையினால் பீடிக்கப்பட்ட மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்து விட அவருடைய காதின் அழுக்கிலிருந்து மது, கைடபன் என இரு அசுரர்கள் தோன்றினர். பின்னர் க்லிம் என்ற ஸப்தத்தை கடலில் ஆடும் போது கேட்டு அது தேவி பீஜம் என்பதை அறியாமலேயே அதன் வசப்பட்டு அதை விடாது ஜபித்து தேவியின் தரிசனம் கண்டு தாங்கள் விரும்பும் போதே தங்கள் மரணம் நிகழ வேண்டுமென்ற வரத்தை பெற்றனர். 


பலம் கொண்ட அந்த அசுரர்கள் பிரம்மாவை துன்புறுத்த அவர் அம்பிகையை பிரார்த்தித்து விஷ்ணுவை யோக நித்திரையிலிருந்து எழுப்புகிறார். பின்பு விஷ்ணு அவ்விரு அரக்கர்களோடு ஐயாயிரம் ஆண்டுகள் போரிட்டும் வெல்ல முடியாமல் அம்பிகையை சரணடைய , தேவீ மோகினியாக தோன்றி அவ்வசுரர்களை தன் வசம் மயக்கி விஷ்ணுவிற்கு வரமளிக்க தூண்டுகிறாள். மஹாவிஷ்ணு நீங்களிருவரும் என்னாலே மரணமடைய வேண்டும் என வரம் பெற்று அவர்களை ஸம்ஹரிக்கிறார்.  இதனால் தேவி மதுகைடபஹந்தரி என்று விஷேச நாமம் பெற்ற சரிதத்திலிருந்து ஒவ்வொன்றாக கூறத் தொடங்குகிறார்.


இப்படி 13 அத்தியாயங்களில்  மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப வதம் ஆகியவைகளை விவரிக்கிறார். இதில் சும்ப நிசும்ப வதத்தின் போது தேவி சிவனையே தூதராக சும்ப நிசும்பர்களிடம் அனுப்பி சிவதூதீ என்ற பெயரை பெற்ற சரிதமும் அடக்கமாகும். இவ்வாறு தேவியின் பெருமையை பலவாறு கூறி சுரதன் மற்றும் ஸமாதியை தேவியை உபாஸிக்கும் படி அறிவுறுத்துகிறார்.


அவரின் அறிவுரையை ஏற்று தேவியை உபாஸித்தன் பலனாக சுரதன் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்று மகிழ்வுடன் ஆட்சி நடத்தி அடுத்த பிறவியில் மனுவாக பிறந்தான், வைச்யனான ஸமாதி ஞானமடைந்து மோக்ஷ ப்ராப்தம் அடைந்தான் என்று தேவீ மாஹாத்மியம் சரிதம் முடிகிறது. இதில் சுரதன் ஆற்றுக் களிமண்ணால் அம்பிகையின் பிரதிபிம்பத்தை செய்து பூஜித்து இகபர சுகங்களை அடைந்ததால் களிமண்ணால் செய்த பொம்மைகளைக் கொண்டு நவராத்திரியின் போது தேவியை ஆராதிக்கிறோம். 


இவை வெறும் சரிதம் மட்டுமல்ல. இவை அனைத்தும் மந்திர பூர்வமானது. இந்த 700 ஸ்லோகங்களைக் கொண்டே சண்டீ மஹாயாகம் நடத்தப்படுகிறது.


முறையாக குருவிடம் நவாக்ஷரி உபதேசம் பெற்றவர்களே தேவீ மாஹாத்மியத்தை பாராயணம் செய்ய வேண்டும்.நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது. 


இவ்வாறு குரு உபதேசம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து ஸப்தாஹ முறைப்படி ஏழு நாட்களில் மேற்கூறிய கணக்கில் ஸமஸ்கிருத மந்திர மூலத்தை படிக்காமல் உரையை மட்டுமே சரிதமாக (கதையை போல) படித்து தூப தீப நைவேத்யத்தோடு பூஜை செய்யலாம். அம்பிகை பக்தியை மட்டும் தான் பார்ப்பாள், ஸமஸ்கிருதம் தெரியவில்லை, நவாக்ஷரி ஆகவில்லை என்றெல்லாம் பார்க்க மாட்டாள். இவ்வாறு படித்தாலும் கை மேல் பலனுண்டு. அசாத்தியமான நம்பிக்கையே அவசியம்.

ஸர்வ ரூபமயீ தேவீ ஸர்வம் தேவீ மயம் ஜகத் ||

- ஜிதேஷ் ஸுப்ரஹ்மண்யம்

ஸ்ரீ புவனேஸ்வரி பீடம்.

ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ

தேவீ மஹாத்ம்யம் - ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் உள்ள மகத்தான, சக்திமிக்க அதிர்வுகளைக் கொண்ட ஸ்லோகங்கள். சக்தியின் மஹிமைகளை 700 ஸ்லோகங்களில் (மந்திரங்களில்) துதித்துள்ளனர். மகிமை மிக்க இந்த ஸ்துதியை சொல்வதால், அம்பிகை அகம் மகிழ்ந்து அன்பர்களுக்கு அருள்கிறாள் என்கிறது புராணம்.

மூன்று சரிதங்கள் கொண்ட இதன் ஸ்லோகங்கள்,
ப்ரதம சரிதம் - மதுகைடபன் என்ற அரக்கனை வதம் செய்ததையும்,
மத்யம சரிதம் - மகிஷாசுர வதம் மற்றும் உத்தம சரிதம் - சும்ப-நிசும்ப வதம் பற்றி விவரிக்கின்றன.

மனனம் செய்வோரைக் காப்பதே மந்திரம் எனப்படும். இந்த "தேவி மஹாத்மியம்" - இதிலுள்ள அனைத்து ஸ்லோகங்களுமே மந்திரம் என்றே ஆன்றோர் கூறுவார்கள். இந்த மந்திரங்களில் பகையை வெல்லுதல், பிணி நீக்கம், கல்விப் பேறு, மகப் பேறு, ஞானப் பேறு, தன வ்ருத்தி, லோக க்ஷேமம் என்ற 700 வகையான பிரயோகங்கள் பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதனை பாராயணம் செய்வது ஆகச் சிறப்பு மிக்கது.

தினமும் ஸப்த ஸதி பாராயணம் எல்லோராலும் சொல்லமுடியாது. அதனால் தான், பெரியோர்கள், ஸப்த ஸதியின் சாரமான 'துர்க்கா ஸப்த ஸ்லோகி' என்று ஏழு ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அவற்றைச் சொன்னாலே அனைத்துப் பலனும் கிட்டும், எனச் சொல்லி வைத்துள்ளனர் ஆன்றோர்.

அதேபோன்று அவரவர் கோரிக்கைகள் நிறைவேற சொல்லவேண்டிய ப்ரத்யேக ஸ்துதிகளும் உண்டு.

' துர்க்கா ஸப்த ஸ்லோகீ ' - ஏழு ஸ்லோகங்களையும் , எட்டாவதாக அவரவர் வேண்டுகோளுக்குரிய ஸ்துதியும், தினமும் சொன்னாலே போதும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி, இன்பம் நிறையவும் நிலைக்கச் செய்வாள் அன்னை துர்க்கை.

மனம் ஒன்றி, நிதானமாக, அனுபவித்து, வாய்விட்டு சொன்னால் சிறந்த பலன்களை தரும்.

ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ

ஓம் அஸ்ய ஸ்ரீ துர்கா ஸப்தச்'லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
நாராயண ருஷி: || அனுஷ்டுப்சந்த:
ஸ்ரீ மஹாகாளி, மஹாலக்ஷ்மீ, மஹா சரஸ்வத்யோ தேவதா: |
ஸ்ரீ ஜகதம்பா ப்ரீத்யர்த்தே ஜபே (பாடே) விநியோக: ||

க்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா ।
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி ॥ 1 ॥

மகாமாயையான பகவதி தேவி ஞானியரின் சித்தங்களையும் பலவந்தமாக தன் மாயா சக்தியால் இழுத்து மோகத்தில் செலுத்துகிறாள்.

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசே'ஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சு'பாம் ததாஸி ।
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா ॥ 2 ॥

கடக்க முடியாத பெரும் துன்பத்தில் ஸ்மரிக்கப்பட்டால் ஸ்ரீ துர்க்கா தேவி,சகல பிராணிகளின் அச்சத்தையும் போக்குகிறாள் (அல்லது) துர்கே உனை ஸ்மரித்த மாத்திரத்தில் எல்லா உயிரினங்களின் பயத்தையும் போக்குகின்றாய். இன்ப நிலையில் இருந்து கொண்டு ஸ்மரிக்கப்பட்டால் பரம மங்களமான நல்லறிவை நல்குகிறாய். வறுமை, துன்பம், பயம் ஆகியவற்றை நீக்குபவளே ! ஸகலருக்கும் ஸர்வ உபகாரங்களையும் செய்வதற்காக ஸதாகாலமும் காத்திருக்கும், கருணையால் நிரம்பிய நெஞ்சுடையவர் உனையன்றி எவர் உண்டு?

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ।
ச'ரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

மங்கள வஸ்துக்கள் அனைத்தினும் பரம மங்களமானவளே! மங்களமே வடிவான சிவனின் சக்தியே! சகல புருஷார்த்தங்களையும் சாதித்துத் தருபவளே! சரணாகத நிலையமே! முக்கண் படைத்த (அல்லது மூம்மூர்த்தியருக்கும் அன்னையான) த்ரயம்பகியே ! வெண்பொற் சோதியாம் கௌரி! நரருக்கெல்லாம் ஆசிரயமாம் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

ச'ரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

'சரண்' என வந்த தீனரையும் துன்புற்றோரையும் மிக அருமையாகக் காப்பதையே தொழிலாகக் கொண்ட தேவி! அனைவரின் துன்பங்களையும் நீக்கும் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

ஸர்வஸ்வரூபே ஸர்வேசே' ஸர்வச'க்தி ஸமந்விதே ।
பயேப்யஸ்த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

காணும் உருவனைத்தும் நீயே! அனைத்தையும் ஆளும் தேவி நீயே! சர்வ‌ சக்தியும் ஒன்றிய இடம் நீயே! தேவி துர்கே! உனக்கு வந்தனம்! எங்களை அச்சங்களினின்று ரட்சித்தருள்வாய்!

ரோகா நசே'ஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலான-பீஷ்டான் ।
த்வாமாச்'ரிதானம் ந விபந்நராணாம்
த்வாமாச்'ரிதா ஹ்யாச்'ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥

(பக்தியினால்) நீ திருப்தியடைந்தால், சகல ரோகங்களையும் அறவே அகற்றுகிறாய். கோரும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்கிறாய். உனை அரண் போல பாதுகாப்பாகக் கொண்ட மனிதருக்கு இடர் என்பதே இல்லை. அவர்களே பிறருக்கு அரணாகின்றனர் அன்றோ?

ஸர்வா பாதா ப்ரச'மனம் த்ரைலோக்ய-ஸ்யாகிலேச்'வரி ।
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாச'னம் ॥ 7 ॥

அகிலாண்டேசுவரி! உன்னால் எமது பகைவர்கள் அழிக்கப் பெற வேண்டும். இவ்வாறே மூவுலகிலும் உள்ளவர்களின் சகல துன்பங்களையும் நீ அடியோடு அகற்றி அருள வேண்டும்.

மனமது செம்மையானால்...

 ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. 


அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.


கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.


"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன. 


தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை, எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு, மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. 


"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே". 


குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.


நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. உணவும், நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.


அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். 


குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.


சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில், தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. 


அவர் நெருங்கி வந்து சொன்னார், "எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.


குரங்கோ, "ஐயய்யோ, பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்" என்றது. 


அவர் மீண்டும் சொன்னார், " பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு". அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது. 


அட நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா…


குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே" என்றபடி ஞானி கடந்து போனார்.


நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.


கவலைகளை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்…


ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்.

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்.

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.