செல்லும் பாதை சரிதானா?

முல்லா நஸ்ருதீன் வெளியூர் பயணம் புறப்பட்டிருந்தார். படகைப் பிடிக்க எண்ணி அவசரமாக ஓடினார். படகைத் தவறவிடக் கூடாத நிலையில் இருந்தார்.

அவர் படகுத்துறையை அடைந்தபோது, படகு, நகர்ந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து எட்டிக் குதித்துப் படகில் காலூன்றினார். அப்போது, நிலைதடுமாறி, படகினுள் குப்புற விழுந்துவிட்டார். முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. ஆடை கிழிந்து போயிற்று.

ஆனாலும் மகிழ்ச்சியாக எழுந்தார்.

வியப்போடு அவரைப் பார்த்த பயணிகளிடம், "நான் தாமதமாக வந்தாலும் படகைப் பிடித்துவிட்டேன்." என ஆனந்தித்துக் கொண்டே கூறினார்.

பயணியருள் ஒருவர், "உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை முல்லா!! இந்தப்படகு புறப்பட்டுப் போகவில்லை. கரையை நோக்கியல்லவா வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் என்ன அவசரம்?" என்றார்.

எங்கோ சென்றுசேர நினைத்து, வாழ்நாளெல்லாம் ஓடி, இறுதி சமயத்தில், உங்களது ஓட்டம் வீண் என்று தெரியவந்தால், அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமிருக்காது. புறப்பட்டுச் செல்லும் படகிற்குப் பதிலாக, திரும்பவரும் படகில் உட்கார்ந்தது போலாகிவிடும்.

அடுத்தவர் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்காதீர்கள். அவர் சென்றுசேர வேண்டிய இடம் வேறாக இருக்கலாம். உங்கள் இலக்கை நோக்கிய பாதையில் பயணிப்பவர்களோடு செல்லுங்கள். அதுவே இருவருக்கும் உதவிகரமாக இருக்கும்.

அவசரகதியில் என்ன ஏதென்று தெரியாமல் பயணிக்காதீர்கள். முல்லா அந்தத் தவறைத் தான் செய்தார். படகு எங்கு செல்கிறதென்று, சரியானவரிடம் கேட்டு உறுதி செய்திருந்தால், அவர் தவறான படகில் ஏறி ஆடையை கிழித்திருக்க மாட்டார். ஆகவே, உங்கள் இலக்கிற்கான, சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்களா என்று அவ்வப்போது உறுதி செய்து கொண்டு பயணியுங்கள். சற்று நேரமானாலும் பரவாயில்லை; சரியான பாதையில் பயணியுங்கள்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, முல்லா கதை, முல்லா நஸ்ருதீன், சரியான பாதை, வாழ்க்கை பயணம், படகு.

குறுந்தொகையில் கொஞ்சம்


குறுந்தொகை, காதலர்களுக்குப் பிடிக்கும் நூல் என்பார்கள். ஏனென்றால், அது பழந்தமிழரின் காதல் இன்பத்தை பதிவாக்கி கொண்டுள்ளது. அது காதலால் பீடித்தவர்களுக்கு மட்டுமல்ல, காதலைப் பிடித்தவர்களுக்கும் விருப்பமான நூல் தான். காலம் காப்பாற்றிக் கொடுத்த பொக்கிஷங்களில் குறுந்தொகையும் ஒன்று. அந்த காதல் கடலில் நான் ரசித்த சில நீர்த் துளிகளை 'தேனித் தென்றல்' வாயிலாக உங்களிடம் பகிர்கிறேன். "குறுந்தொகையில் கொஞ்சம்" எனும் தலைப்பில் ஒவ்வொரு பாடலாக எழுதுகிறேன். எல்லோரும் ரசியுங்கள்.
______________________________________________

திணை: குறிஞ்சி
செய்யுள் எண்: 08

மூங்கில்கள் அடர்ந்து செழித்த மலைநாடு அது. ஓங்கி நிமிர்ந்திருந்த பசும் மூங்கிலொன்றை யானை வளைத்துத் தின்கிறது. அப்பொழுது, பிடியிலிருந்து நழுவிய மூங்கில், சட்டென்று நிமிர்ந்து விடுகிறது. இது எப்படி இருக்குமென்றால், பூட்டிய குதிரையை அவிழ்த்து விட்டால், எப்படி விருட்டென்று துள்ளிக் குதித்து ஓடுமோ, அதுபோலிருக்கும்.

இப்படிப்பட்ட மலைநாட்டு இளைஞன் ஒருவன், பெண்ணொருத்தியைக் கண்டான்; காதல் கொண்டான். அவளும் இவன் மீது காதலுற்றாள்.

ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லிக்காமல் இருந்தனர். பெண் மட்டும், அவள் தோழியிடம் தெரியப்படுத்தி இருந்தாள். அவன் எப்பொழுது சொல்லுவான் என தோழியை அனுதினமும் நச்சரிப்பாள். அவளும் பெண் தானே!

ஒரு நாள், அவன், தோழியிடம் வந்து அந்தப் பெண்ணை காதலிப்பதாக தெரிவித்தான். தோழி அவனிடம், "அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து கேட்டு விட்டாய். நானும் அவளிடம் கேட்டுச் சொல்கிறேன்." என்று வந்து விட்டாள்.

தோழி, "அடியே, நீ காத்திருந்தது வீண் போகவில்லை. அவனே வந்தான். உன்னை காதலிப்பதாகச் சொன்னான். காதல் வலி தாங்க முடியாமல் தவிக்கிறானாம். நீயும் தவிப்பது அவனுக்கு தெரியாதல்லவா!! இத்தனை நாள் கழித்து, மூங்கில் போல, அவன் வளைந்து வந்திருக்கிறான். பகுமானம் பண்ணாமல் ஏற்றுக்கொள். இல்லையென்றால், பிடி நழுவி, சென்று விடுவான். அப்பறம் நீ தான் கிடந்து அல்லாட வேண்டும். ஒழுங்காக சம்மதித்து விடு.." என்றாள்.

அந்த குறுந்தொகைப் பாடல் இதோ,

விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப - நம் மாண் நலம் நயந்தே.

இச்செய்யுளை இயற்றியவர் பெயர் கிடைக்காததால், செய்யுளிலிருந்தே எடுத்து, 'விட்ட குதிரையார்' என்று பெயரிட்டுள்ளனர்.

எவ்வளவு அழகான உதாரணத்துடன் புத்திமதி சொல்லியிருக்கிறாள், தோழி! தாம் சார்ந்த நிலத்திலிருந்தே உதாரணத்தை எடுத்திருக்கிறாள். ஏனென்றால், பார்த்துப் பழக்கப்பட்ட விஷயங்களை, உதாரணமாகச் சொல்லும் போது, எளிமையாக மனதில் ஏறி விடும். அதிலும், இந்த உதாரணம், காதலுக்கு மிகப் பொருத்தம்!

நெடுநாளாக கட்டிவைத்த குதிரையை அவிழ்த்து விட்டால், திரும்ப பிடித்துக் கட்டுவது சற்று சிரமம் தான். அது போல, நெடுநாளாக மனதில் பூட்டி வைத்த காதலை, ஒருவர் கூறும் போதே (உங்களுக்கும் பிடித்திருந்தால்) ஏற்றுக் கொள்வது தான் உசிதம். இல்லையெனில், யானையின் வாய்ப் பிடியிலிருந்து நழுவிய மூங்கில் போல ஆகிவிடும். திரும்பவும், அதை வளைத்து, பிடிக்குள் கொண்டு வர, ரொம்ப நேரமாகி விடும்.

அதனால், உங்களுக்குப் பிடித்தவர் ப்ரபோஸ் செய்தால், ரொம்ப பிகு பண்ணாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், பிறகு, அவருக்காக நீங்கள் அலைய வேண்டும்.




____________________________________________
Keywords: குறுந்தொகை, Kurunthogai, விட்ட குதிரையார், மூங்கில், யானை, காதல் உரைத்தல், தோழி கூறுதல், குறிஞ்சி திணை.

நிம்மதியாக வாழ்வது எப்படி?


கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.

அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். 

அங்கிருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே! இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே!! என்ன நடந்தது?'' என்று கேட்டார். 

வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார்: ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு தான் போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? 

அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''.

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

நம் பிள்ளைகளை அளவு கடந்து நேசிக்கிறோம். ஆனால், அதே அளவு நேசத்தை, பிள்ளைகள், நம்மிடம் திரும்பச் செலுத்தாவிட்டால் வருத்தப்படுகிறோம். பொருளின் மீதான ஆசையோ, உறவின் மீதான பாசமோ, எதுவாயினும் அளவுடன் இருப்பதே சிறந்தது. அளவிற்கு மீறினால், அதற்கான எதிர்பார்ப்பும் கூடி விடும். எதிர்பார்த்தது பூர்த்தியடையா விட்டால், மனம் துன்பப்படும். ஆகவே அளவோடு பழகுங்கள், மன அமைதியுடன் வாழுங்கள். மனத்தின் அமைதி தான் வாழ்வை நிறைவாக வாழ்ந்ததன் அடையாளம்.

இளமையில் எதிலெல்லாம் ஆசை வைத்திருந்தோமோ, முதுமையில் அதிலிருந்தெல்லாம் ஒதுங்கி வாழவும் பழக வேண்டும். 40 வயதில் உங்கள் மகன் மீது பாசத்தைப் பொழிவது நல்லது. ஆனால், அவனுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை முடித்த பிறகும், அதே பாசமழையைப் பொழிவதும் அதை அவனிடம் இருந்து எதிர்பார்ப்பதும் தவறு.

சரி, மனசை எப்படி அடக்குவது?

மனசை அடக்கும் வித்தை புத்திக்கு மட்டும் தான் உண்டு. மனம் ஒன்றிற்கு ஆசைப்படும் பொழுது, புத்தியிடம் ஆலோசனை கேளுங்கள். நல்லது எது என்பதை புத்தி சொல்லிவிடும்.

புத்தி என்றால், எல்லோருக்கும் இருக்கின்ற சிற்றறிவு அல்ல. புத்தி என்பது தெளிந்த ஞானத்தை குறிக்கும். தண்ணீரை விடுத்து பாலை மட்டும் அருந்தும் நல்லறிவே, ஞானம். அதுவே புத்தி. அப்படிப்பட்ட புத்திக்கு மனம் அடிமையானால் நிம்மதியாக வாழலாம்.






____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, ஆசை, துன்பம், நிலையாமை, பந்தபாசம், மனம், புத்தி.

குடும்பத்தின் தலைவர் யார்?


இரவு நேரம். மலையோரத்தில் அழகான குடிசை வீடு. அந்த வீட்டில் பெட்ரோமேக்ஸ் விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சம், வீடு முழுவதும் நிறைந்திருந்தது.

விளக்கைச் சுற்றி விட்டில் பூச்சிகளும் சிறு சிறு வண்டுகளும் பறந்து கொண்டிருந்தன. விளக்கு பிரகாசமாக சுடர் விட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த எலி, விளக்கைப் பார்த்து, "விளக்கே, நீ சுடர் விட்டு எரிவதால் தான் இந்த இடமே வெளிச்சமாக இருக்கிறது. இதற்கு யார் காரணம்?" என்று கேட்டது.

விளக்கு பக்கத்தில் இருந்த தீப்பெட்டி, "நான் தான் காரணம். நான் தான் இந்த விளக்கைப் பற்ற வைத்தேன். நான் இல்லாவிட்டால் ஏது இந்த வெளிச்சம்!" என்றது.

"இல்லை இல்லை... விளக்கு எரிய நான் தான் காரணம். ஏனென்றால் நான் தான் விளக்கெரிய எண்ணெய்யை இழுத்துக் கொடுக்கிறேன்." என்றது திரி.

இதை கவனித்த எண்ணெய் சொன்னது: "அதுஎப்படி?? நான் இருந்தால் தானே உங்களுக்கு வேலை. விளக்கு எரிய நான் தானே முக்கியம். எனவே விளக்கு எரிய நான் தான் காரணம்." என்று அதட்டலாகவே கூறியது.

"சும்மா பிதற்றாதீர்கள்... நீங்களெல்லாம் நிற்பதற்கு நான் தான் உதவுகிறேன். நான் இல்லாவிட்டால் எண்ணெய் வழிந்து விடும். அப்புறம் எப்படி விளக்கு எரியும்?? உங்கள் எல்லோரையும் தாங்கி நிற்பது நான் தான். எனவே விளக்கு எரிய நான் தான் காரணம்" என்றது குடுவை.

இப்படி எல்லோருமே, விளக்கு எரிய 'நான் தான் காரணம்! நான் தான் காரணம்!' என்று சொல்ல, எலி குழப்பமடைந்தது.

இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த புறா, "எலியே, நீ நாளைக்கு காலையில் வா. விளக்கு எரிய யார் காரணம் என்று சொல்கிறேன்." என்றது.

மறுநாள் காலை, அந்த வீட்டுக்காரர் விளக்கை கழற்றித் துடைத்து வெயிலில் காய வைத்திருந்தார். தீப்பெட்டி, திரி, எண்ணெய், குடுவை யாவும் தனித்தனியாகக் கிடந்தன.

எலியும் புறாவும் வந்தன.

தனித்தனியாகக் கிடந்த தீப்பெட்டி, திரி, எண்ணெய், குடுவை இவற்றைப் பார்த்து புறா, "உங்களில் யாரால் தனியாக இப்பொழுது விளக்கை எரிய வைக்க முடியுமோ, அவங்க முன்னாடி வரலாம்." எனச் சொன்னது.

நான்கு பேரும் திருதிருவென முழித்தனர்.

"நீங்கள் நான்கு பேரும் ஒற்றுமையாக இருந்தால் தான் விளக்கு எரியும். உங்களில் ஒருவர் இல்லையென்றால் கூட விளக்கு எரியாது." என்றது புறா.

உண்மைதான். குடும்ப வாழ்க்கையும் அப்படித் தான். ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருப்பது தான் குடும்பம். அதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்புமே முக்கியமானது. என்னுடைய பங்களிப்பு தான் பெரியது, என்ற அகங்காரம் வந்துவிட்டால், அது எல்லோரையும் பாதிக்கும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, மகன், மகள், சகோதரன், சகோதரி என ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலிருக்கும் கடமைகளை இறுமாப்பில்லாமல் செய்தாலே போதும். குடும்பம் தழைக்கும், நிம்மதி கிடைக்கும். ஒருத்தருக்கொருத்தர் அனுசரித்து வாழ்வதே நிம்மதியான குடும்பம்.

குடும்பம் என்பது மக்களாட்சி போன்றது. அதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. அதனால், ஒவ்வொருவரும் தலைவர்களே!




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, petromax light, ஒற்றுமை, குடும்பம்.

கடவுள் ஏன் சோதிக்கிறார் ?


குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது.

"யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்." என்றார் குரு.

ஒரு மாணவன், "குருவே, அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல்,
கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?" என்று கேட்டான்.

"நல்ல கேள்வி. இதற்கான பதிலை உனக்கு நாளைய தினம் விளக்குகிறேன்" என்றார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வந்தார்கள். மாணவர்களுக்கு முன்பாக, மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள் இரண்டு வைக்கப்பட்டன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.

"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" மாணவர்களை கேட்டார்.

மாணவர்கள், ஒரு கணம் கழித்து, "இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவைதான்."

"இவற்றுக்குள் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" என்று குரு கேட்டார்.

'தெரியவில்லை' என்று கூறிய மானர்களிடம், "இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றார் குரு.

மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியைக் கீழே தள்ளிக் கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியைக் கவிழ்த்தார். அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

"ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாதல்லவா? இரண்டும் ஒன்றே தான் என நினைத்துக் கொண்டீர்கள். ஆனால், உள்ளே இருந்த பொருளில் வித்தியாசம் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டி விட்டது." என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார்.

"இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித்தான். நாம் சோதனைகளைச் சந்திக்கும் வரை சகஜமாக, நல்லவர்களாக, இருக்கிறோம். ஆனால் சோதனையைச் சந்திக்கும் போதுதான் நம்முள்ளே இருக்கும் உண்மையான குணம் வெளியே வருகிறது. நமது உண்மையான எண்ணங்களும் மனப்பான்மையும் சோதனையில் தான் வெளிப்படுகிறது. நமதுஉண்மையான குணத்தைப் பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளைத் தருகிறார். சோதனைகள் தான் நம்மை நமக்கே தெரியப்படுத்துகின்றன." என்றார்.

"மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக் கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என குரு கேட்டதும்,

அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடி!" என்றனர்.

"இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே!! இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்றுயோசித்து பாருங்கள்!... கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோளிற்கு அவன் செவி சாய்ப்பதில்லை.

இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறிவதற்கே!! அவன் அறிந்து கொள்ள அல்ல. அவனுக்குத்தான் உள்ளே இருப்பது சந்தனமா, சாக்கடையா, என்று நன்றாக தெரியுமே!!

அவன் சோதிப்பது நம்மை நாமே தெரிந்து கொள்ளதான். நம்மை நாம் அறிந்து கொண்டால்தான் நம்மை நாம் திருத்திக் கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய் விடும்."





____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது.

வாழ்வின் சுவை


மூன்று ஞானிகள் ஓரிடத்தில் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்.

ஒரு ஞானி, கண்மூடி அமர்ந்திருப்பார்; பேசமாட்டார். இரண்டாவது ஞானி, கண்திறந்து அமைதியாக அமர்ந்திருப்பார்; ஏதாவது கேட்டால் பதில் சொல்வார். மூன்றாமவரோ, சிரித்தபடி இருப்பார்; மிக இயல்பாக இருப்பார்; தாம் சொல்வதே சரி என்று எவரிடமும் வாதிட மாட்டார். ஆனால் முகத்தில் மாறாத சிரிப்பு.

ஒருநாள் அவர்களுக்கு முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. அதன் கையில் அழகான கிண்ணம். கிண்ணம் நிறைய பழச்சாறு.

முதல் ஞானி கண் மூடி அமர்ந்திருந்தார். தேவதை ஒருத்தி வந்திருக்கிறாள் என்பதை தன் ஞானத்தால் அறிந்து கொண்டார்.

இரண்டாவது ஞானி தேவதையை பார்த்தார். அதன் கையில் இருந்த கிண்ணத்தையும் பார்த்தார். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

சிரித்தபடி அமர்ந்திருந்த மூன்றாவது ஞானியோ தேவதையை பார்த்து கேட்டார்: "தேவதையே கையில் என்ன கிண்ணம். அதில் என்ன இருக்கிறது?".

தேவதை கூறியது: "ஐயா, ஞானிகளே! இந்த கிண்ணம் நிறைய 'வாழ்க்கை' என்கிற பழச்சாறு நிரம்ப இருக்கிறது. சுவைத்துப் பாருங்கள்." என்றது.

கண் மூடியே அமர்ந்திருந்த முதல் ஞானி, "முதலில் இதை எடுத்துக் கொண்டு போய்விடு. இதன் வாடையே எனக்கு பிடிக்காது. வாழ்க்கை என்றாலே எத்தனை வேதனை. இந்த பழச்சாறு கொஞ்சம் அருந்தினாலும் போதும் மீண்டும் மீண்டும் நான் பிறந்து துன்பப்பட வேண்டும். போ போ போய்விடு." என்றார்.

தேவதை சிரித்துக்கொண்டே இரண்டாவது ஞானியைப் பார்த்து, "நீங்களாவது சுவைத்துப் பாருங்கள்", என்றது.

இரண்டாவது ஞானி, "என்ன இது?? அவர், நீ, கொண்டு வந்த பழச்சாற்றை ஒரு துளி கூட சுவைத்துப் பார்க்காமல் இப்படிச் சொல்லிவிட்டாரே!! நான் அவர் போல் இல்லை. சுவைத்துப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்." என்று, தேவதை கொடுத்த பழச்சாற்றை ஒரு வாய் குடித்தார்.

மறுநொடி அப்படியே துப்பி விட்டார். "அப்பப்பா!! என்ன கசப்பு.. என்ன கசப்பு.. இதை எப்படி சுவைத்துக் குடிக்கச் சொல்கிறாய்? அவர் சொன்னது சரிதான் போல இருக்கிறது. வாழ்க்கை என்றாலே முடிவில் கசப்புதான் போலும்!" என்றார்.

இப்பொழுது தேவதை மூன்றாவது ஞானியைப் பார்த்தது. அவர் சிரித்தபடியே அமர்ந்து இருந்தார். அவரிடம் கிண்ணத்தை நீட்டியது. ஞானி, கிண்ணத்தை எடுத்தார்; பழச்சாற்றை மடமடவென்று குடித்து விட்டு கிண்ணத்தை வைத்தார். அப்புறம் பரவசமும் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாக வாய்விட்டு சிரித்தார்.

மற்ற இரண்டு ஞானிகளுக்கும் வியப்பு... "என்ன இது?? எந்தக் கருத்தையும் சொல்லாமல் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே!!" என்றார்கள்.

அதற்கு மூன்றாவது ஞானி சொன்னார்: "கருத்து சொல்ல இதிலென்ன இருக்கிறது? வாழ்க்கை என்கிற பழச்சாற்றை அப்படியே குடித்து விட வேண்டியதுதானே! அப்போதுதான் அதன் முழு சுவையும் தெரியும். அந்த சுவையை நான் உங்களுக்கு எப்படி உணர்த்த முடியும்? உங்களில் ஒருவர் ஒரு துளி பழச்சாற்றை கூட சுவைக்கவில்லை. இன்னொருவரோ ஒரு வாய் குடித்துவிட்டு முழு சாறும் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டிவிட்டார். நான் முழுவதும் குடித்ததால் என்ன சுவை என்பது எனக்கு தானே தெரியும். நான் தானே அதை உணர்ந்தவன். நீங்களும் அதை உணர வேண்டுமென்றால் பழச்சாற்றை முழுவதும் குடியுங்கள்" என்றார்.

நம்மில் பல பேர் அந்த முதலிரண்டு ஞானிகளைப் போலத் தான் வாழ்க்கையைப் பார்க்கிறோம். எதையும் நாம் முழுமையாக அனுபவித்துப் பார்ப்பதில்லை. வாழ்க்கையை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கிற பொழுது தான் அதன் சுவையை நாம் அறிய முடியும். சொற்களால் விளக்க முடியாத அந்த அற்புதத்தை முழுமையாக வாழ்ந்தால் தான் உணர முடியும்.

இந்த உலகம் நல்லதா? அல்லது, கெட்டதா? என்று கேட்டால், அது வாழ்பவரின் கையில் தான் இருக்கிறது, என்று சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கான உலகத்தை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது தான் உண்மை. ஒவ்வொருவரும் அவரவருக்கான உலகத்தையும் வாழ்க்கையையும் அவரவர்களே உருவாக்கிக்கொள்ள முடியும்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது.

துணிவே துணை


அரசர் ஒருவர் வேட்டையாட காட்டுக்குச் சென்றார். சென்றபோது, தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார்.

அவர், வேட்டையில் மும்முரமாக இருக்க, நாய், அங்குமிங்குமாக பாய்ந்து பாய்ந்து வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது. பல நிமிடங்களுக்குப் பிறகுதான், அது, வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது.

அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது, நாய். அது தன்னை வேட்டையாடத்தான்  வருகிறது என்பதையும் உணர்ந்தது.

தப்பிப்பது எப்படியென எண்ணியபோது, எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது, அந்த நாய். புலிக்கு முதுகைக் காட்டிய வண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்து கொண்டது.

புலி அருகில் வந்ததும், "ஆஹா... புலியின் மாமிசம் என்ன சுவை... என்ன சுவை.. இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே!!", என நாக்கைச் சுழற்றியபடி தனக்குத்தானே பேசியது.

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை.. இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்!' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் புறம் சென்றது. 

இந்த சம்பவத்தைக், குரங்கு ஒன்று, மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. நாயைக் காட்டிக் கொடுத்தால், புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பும் வெகுமதியும் தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலியை நோக்கி விரைந்தது.

இதைப் பார்த்த நாய், ஏதோ விவகாரம் எனப்புரிந்து கொண்டதோடு, இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.

நாய் செய்த தந்திரத்தை புலியிடம் ஒப்பித்தது குரங்கு.

கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து, அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்.", என்று உறுமிவிட்டு, குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது. நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும், புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்தபடியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து கொண்டு,
"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக அலுத்துக் கொண்டது.

பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்களே யூகித்துக் கொள்ள முடியும்.

எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையையும் முயற்சியையும் விட்டுவிடக் கூடாது. தைரியம் தான் பயத்தை அகற்றி நம்பிக்கையை கொடுக்கும். இக்கட்டான ஒரு நிகழ்வு நடந்து விட்டால், அதையே நினைத்து கவலைப்படுவதாலோ, சண்டையிடுவதாலோ, எந்த மாற்றமும் நிகழ்ந்திடாது. அதற்குப் பதிலாக, 'அடுத்தது என்ன செய்யலாம்?', என்று யோசித்து செயல்பட்டால் நடக்கவிருப்பதாவது நல்லவையாக விளையும்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது.

மகிழ்ச்சியான மனம்


அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம் தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான். சந்தோஷம் கிடைக்கவில்லை. மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான்... மனம் மகிழ்ச்சியே அடையவில்லை.

'துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும்' என்று யாரோ சொல்ல... அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான்.

தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு, "ஸ்வாமி இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன். இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே!", என்று சரணடைந்தான்.

அந்த யோகியோ, செல்வந்தன் சொன்னதைக், காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும் வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி, தன் தலையில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி. 'அடடா... இருந்திருந்து ஒரு போலிச் சாமியாரிடம் போய் நம் செல்வத்தை ஏமாந்து கோட்டை விட்டு விட்டோமே!', என்ற துக்கம், ஆத்திரமாக மாற, அந்த யோகியைத் துரத்த ஆரம்பித்தான்.

யோகியின் ஓட்டத்திற்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, கடைசியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கு வந்து நின்றார்.

மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக் கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி, "என்ன பயந்துவிட்டாயா ? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள்.", என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.

கைவிட்டுப் போன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டது என்பதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத சந்தோஷம்.
அப்போது அந்த யோகி, செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார்: "இங்கே வருவதற்கு முன்னால்கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தான் இருந்தன. ஆனால், அப்போது உனக்குச் சந்தோஷம் இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது."

மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியே இல்லை; மனதில்தான் இருக்கிறது. பக்குவப்பட்ட மனத்திற்கு எந்நாளும் ஆனந்தமே!




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

திரோதானம்


கோயிலுக்கு வந்திருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அர்ச்சகர்கள் சிலர், "கடவுளுக்கு படைக்க வைத்திருக்கும் பிரசாதங்களையெல்லாம் எறும்புகள் மொய்த்து விடுகின்றன. இதனால், கடவுளுக்கும் படைக்க முடியவில்லை; பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை." என முறையிட்டனர்.

இதைக்கேட்ட பரமஹம்சர், "இனிமேல் பிரசாத தட்டுகளைச் சுற்றிலும் சர்க்கரையைப் தூவி விடுங்கள். எறும்புகள் உள்ளே வராது." என்றார்.

அதேபோல செய்ததும், எறும்புகளெல்லாம் அந்தச் சர்க்கரையை மட்டும் மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. தட்டின் மேலே பிரசாதங்கள், எறும்பு மொய்க்காமல், அப்படியே இருந்தன.

அப்போது பரமஹம்சர் சொன்னார்: "இந்த எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்கள், வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கின்ற அற்ப சந்தோஷத்தில் மயங்கி மேற்கொண்டு முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்."




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

கடவுள் படையலை சாப்பிடுவாரா?


சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா?" என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவிப் பார்த்துவிட்டு "நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்" என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது, எனப் பொருள் கொண்ட "பூர்ணமிதம்" எனும் ஈஷாவாஸ்ய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார், குரு. அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போடத் தொடங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு, கேள்வி கேட்ட சிஷ்யனை, சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி
நின்றான்.

குரு, "எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா?".

சிஷ்யன், "முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் குருவே".

"எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்" என்றார், குரு.

கண்கள் மூடி, மனதை ஒருநிலைப்படுத்தி, 'கணீர்' குரலில் "பூர்ண மித பூர்ண மிதம்..." எனத் தொடங்கி முழுமையாக முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. "நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே!! எங்கே, உனது புத்தகத்தை காட்டு..??”

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. "குருவே, தவறு இருந்தால் மன்னியுங்கள்! ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதைப் போலவே கூறினேன்."

"இந்தப் புத்தகத்திலிருந்து படித்துத் தான் மனதில் உள்வாங்கினாயா?" என குரு கேட்டதற்கு 'ஆம்' என பதிலளித்தான்.

"இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால், மந்திரம் இதில் இருக்கிறதே!! நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்கக் கூடாதல்லவா?" என குரு கேட்டதும் சிஷ்யன் குழப்பமாகப் பார்த்தான்.

குரு தொடர்ந்தார்.. "உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ
உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? குறையவில்லை அல்லவா!! அது போலத்தான், இறைவன் சூட்சமமாக உட்கொண்ட பிரசாதமும் அளவில் குறையாமல், நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாக நைவேத்யத்தை உட்கொள்கிறோம். சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாக நைவேத்யத்தை உட்கொள்கிறான்."



____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

இது தான் வாழ்க்கையா..!!??


சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது, "என்னை காப்பாற்று, காப்பாற்று" என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறியது.

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விட்டது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பித்தான்.  அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .

”பாவி முதலையே, இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க..

“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இது தான் உலகம். இது தான் வாழ்க்கை.” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான், "இதுதான் உலகமா?".

அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்.” என்று சொல்லின.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்!” என்றன.

ஆடுகளை கேட்கிறான்.. "எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்." என ஆமோதித்தன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்டான்... "இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது." என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,

’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாகப் பேசு..’ என்றது முயல்.

'காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான்!!' என்று முதலை சொன்னதும், முயல் பெரிதாக சிரித்தது.

"உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால்.." என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.

சிறுவன் ஓடிவிட்டான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. வலையிலிருந்து வால் பகுதி விடுவிக்கப்படாதது, அப்போது தான் முதலையின், நினைவுக்கு வந்தது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம்.. இதுதான் வாழ்க்கை!!” என்றது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றனர்.

அதே நேரத்தில், சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடித்தது. சிறுவன் முயலைக் காப்பாற்றுவதற்குள் நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே  வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை...

முன்னுக்குப்பின் முரணனானதாகவும்,  எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை..!!

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது; புரிய வைக்கவும் முடியாது. எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான்  வாழ்க்கை.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

'நான்' யார் ?


ஆத்மாவிலிருந்து தோன்றுகின்ற ஓர் அற்புதமான சக்தியே மனம். மனம் தான் நினைவுகளைத் தோற்றுவிக்கிறது.

இவர் நல்லவர், அவர் கெட்டவர்;
இது சரி, அது தவறு;
இது உயர்வு, அது தாழ்வு;
என்று விதவிதமான நினைவு அடுக்குகள் இருக்கின்றன. அந்த நினைவுகளை நீக்கினால்,
மனம் என்ற ஒரு பொருள் அறவேயில்லை.

நினைவுகளின் அடுக்குதான் மனம். அந்த நினைவுகள் உன்னால் சிருஷ்டிக்கப்பட்டவை. நினைவுகளின் ஊடாகவே நீ இந்த உலகத்தைப் பார்க்கிறாய்.

ஆழ்ந்த தூக்கத்தில் நினைவுகள் இல்லை. எனவே, அங்கு உலகமும் இல்லை.

உன் மனதால் உலகத்தை சிருஷ்டி செய்கிறாய். பிறகு, நீயே அதை உனக்குள் இழுத்தும் கொள்கிறாய்.

'இது தான் உலகம்’ என்று நினைக்கிறாய்.
அவர்கள் நல்லவர்கள், இவர்கள் கெட்டவர்கள், என்று இரண்டு விதமாகப் பிரிப்பது நீயே. உண்மையில் அவர்கள் யார் என்று நீ பார்ப்பதேயில்லை.

நீ தீர்மானிப்பது பல தீர்மானங்களை உனக்குள் உருவாக்குகின்றது. நல்லவர்- கெட்டவர் என்று சிருஷ்டித்து, இன்னும் பன்மடங்கு பெருகி, இந்த உலகம் அதன் இயல்பாக இல்லாமல் உன் உலகமாக,
நீ சிருஷ்டித்த உலகமாக மாறுகிறது.

நீ 'கெட்டது' என்று தீர்மானித்ததை, வேறு ஒருவர் 'நல்லது' என்று தீர்மானிக்கிறார்.
அவருடைய உலகத்தில், நீ, நல்லவர் என்று சொல்பவரைக் கெட்டவராகக் கருதுகிறது.

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமான உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு, உண்மையான உலகத்தை, அதனுடய சுய இருப்பை உணர முடியாமல் அவஸ்தைப் படுகிறார்கள்.

தன் 'மனத்தை ஒடுக்கிய' ஞானியால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு பார்க்க முடிகிறது.

'நான்’ என்பதுதான் மனம்.
'நான்’ இல்லையெனில் மனம் இல்லை.
'நான் யார்’ என்ற விசாரணையில் மனம் அழியும்.

மனமே இந்த மனதை, நீ யார்?, என்ன செய்கிறாய்?, என்று உற்றுக் கவனித்து விசாரித்து, அப்படி விசாரிக்கின்ற 'நானு'ம் அழிந்துபோகும்.

பிணத்தைப் புரட்டி புரட்டிச் சுடுகின்ற தடி, பிணம் முற்றிலும் எரிந்துபோன பிறகு, அதுவும் நெருப்பில் போடப்படுவது போல, விசாரித்த மனமும் காணாது போகும்.

எண்ணங்களோடு போகாமல்,
எண்ணங்களை எப்படிச் செயலாக்குவது என்று சிந்திக்காமல், எண்ணங்களின் விளைவு பற்றி ஆராயாமல், எதற்கு இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன என்று விசாரித்தால், மனம் தன் ஆரம்ப நிலைக்கு வந்துவிடும். அந்த எண்ணமும் அடங்கும்.

இவ்வாறு பழகப் பழக, மனம் உதித்த இடத்திலேயே ஒடுங்கியிருக்கின்ற சக்தி அதிகரிக்கின்றது. நினைவுகள் அழிந்து, மனம் காணாமல் போன பின், ஆசை எதுவும் எழுவதில்லை. அதுவே முற்றும் துறந்த நிலை. அங்கே தான், ஆன்மா, ஞான வெளிச்சத்தை அடைகிறது; எப்பொழுதும் நிலைத்திருக்கும் பொருளைத் (பரம்பொருள்) தேட ஆரம்பிக்கிறது.

'நான்’ என்ற எண்ணம் உதிக்கும் இடத்திலிருந்து அது இல்லாமல் போவதுவே அற்புதம்!

அதுவே மௌனம்.
அதுவே ஞானதிருஷ்டி.
அதுதான் நம் உண்மை இருப்பு.
அதுதான் ஆன்ம சொரூபம்.

உப்பு - தேவையான அளவு


அந்த ஊரில் மிகவும் பிரபலமான ஒரு குரு இருந்தார். அவர் முற்றும் துறந்த முனிவர். அனைத்து சாஸ்திரங்களையும் வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தவர்.

அவரை ஒரு ஊரில் பிரசங்கம் செய்வதற்காக அழைத்திருந்தனர். கூட்டத்திற்கு எப்படியும் 10 ஆயிரம் பேராவது வருவார்கள் என்று அந்த ஊர் பெரியவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் அங்கு வந்தார், குரு. அவரை ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர ஒரு குதிரைக்காரர் வந்திருந்தார்.

அன்றைக்கோ அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தில் கூடியிருந்த அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். குரு அங்கு வந்தபோது யாருமே இல்லை. அவரும் குதிரைக்காரரும்தான் அங்கே இருந்தனர்.

மழையின் காரணமாக தண்ணீர் குளம்போல் தேங்கியிருந்தது. கூட்டத்தை இனி நடத்த முடியாது என்ற நிலையைக் கண்டதும், குருவுக்கு பெரிய ஏமாற்றம்.

‘இங்கே குதிரைக்காரன் மட்டும்தான் இருக்கிறான். அவன் ஒருவனுக்காக நாம் பிரசங்கம் செய்ய வேண்டுமா?’ என்று நினைத்தார்.

பின்னர் குதிரைக்காரரை நோக்கி, “இப்போது என்னப்பா செய்வது?” என்று கேட்டார், குரு.

அதற்கு அந்த குதிரைக்காரர், “வேண்டுமானால் எனக்கு மட்டும் பிரசங்கம் செய்யுங்கள், சாமி. நானும் ஏதோ நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வேன். உங்களுக்கும், வந்ததற்கு வெறுப்பில்லாமல் திரும்ப, மனசு வரும்.” என்றார்.

குரு, குதிரைக்காரருக்கு ஒரு சபாஷ் சொல்லிவிட்டு, தன்னுடைய பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்.. என்று சரமாரியாக பல விஷயங்களைப் பற்றி பேசிப் பிரமாதப்படுத்தினாா்.

ஒரு வழியாக பிரசங்கம் முடிந்தது. உடனே குதிரைக்காரரைப் பார்த்து, “எப்படியப்பா இருந்தது என் பேச்சு”ன்னு பெருமை பொங்க கேட்டார், குரு.

“ஐயா.. நான் குதிரைக்காரன். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா ஒன்று.. நான் புல்லு வைக்கப்போற இடத்திலே ஒரு குதிரை தான் இருக்கிறது என்றால், அதுக்கு மட்டும்தான் புல்லு வைப்பேன். 30 குதிரைக்கான புல்லையும் அந்த ஒரே குதிரைக்கே கொட்டிட்டு வந்துவிட மாட்டேன்..” என்றார், அந்த குதிரைக்காரர்.

குரு அதிர்ந்துபோய்விட்டார்.

ஆம்.. மற்றவர்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னால் அவர்களுக்கு புரியுமோ, அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத அல்லது வேண்டாத விஷயங்களை மெனக்கிட்டு சொல்வது, நம்மைதான் முட்டாளாக சித்தரிக்கும். அதை குருவும் உணா்ந்துகொண்டாா்.

எதுவுமே தேவையான அளவு இருந்தால் தான் ருசியாக இருக்கும். தேவைக்கு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாது. அதனால், ஒவ்வொன்றிலும் தேவையை அறிந்து செயல்படுவோம்.



____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

செய்வன திருந்தச் செய்


ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்.

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொன்னார். தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!

சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்த முடியவில்லை.

ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோ தானோவென்று வீடு கட்டினார்.

‘வேலையிலிருந்தே ஓய்வுபெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.

வாசலிலேயே நின்று வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார்.

‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. 'என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே’ என்று மனதுக்குள் ஏகமாகப் புழுங்கினார்.

நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில், நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்!

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம், ஆணி அடிக்கிறோம், ஜன்னல் பொருத்துகிறோம். ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனையை தரும் என்பது யாருக்குத் தெரியும்!!




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

அவன் பார்த்து செய்யட்டும்!

ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தான். அவர் பாதம் கழுவி கும்பிட்டு பணிந்து வணங்கி நின்றான்.

அவனை மேலும் கீழுமாக பார்த்த குரு, "ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய்  போல..!", என்று முகத்தை பார்த்து கேட்டார்.

அவன் மௌனமாக 'ஆமாம்' எனத் தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான்.

"நான் நினைப்பதெல்லாம்  நடக்க வேண்டும். இதற்கு என்ன வழி?" என்று ஒரு கேள்வியை கேட்டான்.

குரு, புன்முறுவலுடன் சிரித்துக் கொண்டே,
அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு, கன்னங்களை தட்டிக்கொடுக்க, அவனுக்கு முணுக்கென கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு, 'என் சிஷ்யன் கலங்கக்கூடாது' என்று ஆறுதல் படுத்தினார்.

குரு, "நான் ஒரு கதை சொல்லப் போகிறேன். பொறுமையாகக் கேள்.", என்று மெல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறிப் போய் விட்டான்.

அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போயினான். ரொம்பக் களைப்பு, பசி, தாகம், கொஞ்சம் பயம் வேறு.

சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அது ஒரு கற்பக மரம். நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது. ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.

ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால், அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி! அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்தது. தாகம் தீர குடித்தான்.

சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான். அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும் களைப்பிலும், என்ன ஏதென்று, நினைக்க நேரமில்லை. அந்தப் பழங்களை உண்டு பசி ஆறினான்.

பிரயாணக் களைப்பு, உண்ட மயக்கம், தூக்கம் கண்ணை சொக்க வைத்தது. அடடா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான். உடனே அது கிடைத்தது.

ஏறிப் படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது; பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும்!! என்று நினைத்தான். 'டங்'கென்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள்.

அசந்து தூங்கினான். திடீரென்று முழிப்பு வந்து விழித்துக் கொண்டான்.

என்னடா இது.. நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே!! ஒரு வேளை இது ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ!! அந்தப் பிசாசு இங்க வந்துட்டால்..? என்று நினைத்தான். 'டங்'கென்று ஒரு பெரிய பிசாசு வந்தது. (கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே!!)

'ஐயோ, இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ!!' என்று நினைத்தான். அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது.

"இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம்." என்று கூறி நிறுத்தினார்.

சற்று நிமிர்ந்தவனைப் பார்த்து, குரு, மேலும் பேசத் தொடங்கினார்.

நல்ல பெண் என்று தான் நினைத்து திருமணம் செய்து கொள்கிறான். இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கிறான். திருமணம் முடிந்தவுடன், ஐயோ, இவளுக்கா ஆசைப் பட்டேன் என்று நொந்து கொள்கிறான்.

ஆசை ஆசையாக வீட்டை வாங்குபவன், அக்கம் பக்கம் தொல்லை கொடுத்தால், ஏண்டா இங்க வந்தோம்??, என்று சிந்திக்கிறான்.

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள், திரும்பிப் பார்க்காமல் போய் விட்டால், மனம் கிடந்து கவலையில் உழல்கிறது.

இப்படி 'வேண்டும் வேண்டும்' என்று கேட்டதெல்லாம், பின்னாளில் 'வேண்டாம் வேண்டாம்' என்று மறுதளிக்கும் படி ஆகி விடுகிறது.

"கடவுளுக்குத் தெரியாதா, நமக்கு என்ன வேண்டும் என்று..??" என அவனைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டார்.

அவனுள் ஞானம் பிறந்தது.

பிறகு, அவருக்கான பணிவிடைகளை செய்து வணங்கி விட்டு, அவன் இருப்பிடம் நோக்கி திரும்பினான்.

இதைத்தான் மாணிக்கவாசகர், "அவன் பார்த்து செய்யட்டும் என்று எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விடு", என்கிறார்.

"வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே."




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

நதியின் மாற்றம்


கடலோடு கலக்கும் முன்
அச்சத்தால் நடுங்குகிறாள், நதி.
நடந்த பாதையைத்
திரும்பிப் பார்க்கிறாள்.

நெடிய சிகரங்களிலிருந்து இறங்கி
காடுகளின், கிராமங்களின் ஊடாக
வளைந்து நெளிந்து நடந்த
பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்.

அவள் எதிரே விரிந்து கிடக்கிறது
பெருங்கடல்.
அதில் கலந்தால்
அடையாளமற்றுப் போவாள்
என்றென்றும், நிரந்தரமாக!

ஆனால்,
அவளால் திரும்பி நடக்க முடியாது.
அவளுக்கு மட்டுமல்ல, எவருக்கும்!
வாழ்தலில் திரும்பிச் செல்லல்
எவருக்கும் இல்லை.

கடலுக்குள் கலந்துதான் ஆக வேண்டும்.

அப்போதுதான்,
அவளுக்கு அச்சம் தெளிந்தது.
அனைத்தும் புரிந்தது.

நாம் அடையாளமற்றுப் போகவில்லை.
இதுநாள் வரை
நதியாக இருந்த நாம்
இனி
கடலாக ஆகிறோம் என!

____________________________________________
கலீல் ஜிப்ரான் இயற்றிய கவிதையொன்றின் தளர்வான மொழிபெயர்ப்பு.

வேருக்கு நீர்


மகான் ஒருவரை சந்தித்த அரசன், "சுவாமி, எனக்காக இறைவனிடம் வேண்டுங்கள்!' எனக் கோரிக்கை வைத்தான்.

"ஆண்டவா... அகிலத்தில் உள்ள அனைவரையும் நன்றாக வை!' என வேண்டினார் மகான்.

அரசனுக்கோ, தனக்காக தனிப்பட்ட முறையில் வேண்டவில்லையே, என்று மனக்குறை எழுந்தது.

அதனை உணர்ந்த மகான், "மன்னா, வயலில் நீர் பாய்ச்சும்போது செடிகளின் வேரில்தான் நீர் விடப்படும். ஆனால் அது செடியின் முழுமைக்கும் பயன்படுகிறதல்லவா... அப்படித்தான் இதுவும். உலகில் உள்ள 'எல்லோரும்' எனும்போது அதில் நீயும் இருக்கிறாய் அல்லவா!! அப்புறம் ஏன் தனியாகப் பிரார்த்திக்க வேண்டும்?", எனச் சொன்னதும் உணர்ந்தான் அரசன்.



____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், படித்ததில் பிடித்தது.

குரு என்பவர் யார் ?

முன்னொரு காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த ஞானம் பெற்ற குரு ஒருவர் இருந்தார். அவரிடம், ஒரு நாள், அவரின் சீடர்கள் ஒரு கேள்வி எழுப்பினார்கள்.

"எங்களுக்கெல்லாம் நீங்கள் குருவாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் குரு?" என்று கேட்டனர்.

அந்த குரு சிரித்துவிட்டார். எனக்கு ஆன்மீகத்தில் எண்ணற்ற குருமார்கள் இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மூன்று பேரை கட்டாயம் சொல்ல வேண்டும்.

என் முதல் குரு ஒரு 'நாய்'.

ஒருமுறை நான் ஆன்மீகத்தை தேடி, எல்லாவற்றையும் துறந்து அலைந்து கொண்டிருந்த சமயம். அது ஒரு காடு. அப்போது எனக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. அருகிலேயே ஒரு சிறிய நீரோடை இருந்தது. சரி நீர் குடிக்கலாம் என அதன் அருகே சென்றேன்.

அப்போது அங்கே ஒரு நாய், நீரோடைக்குப் போவதும் திரும்புவதுமாக இருந்தது.

உற்று கவனித்தேன் அது மிகவும் களைப்பாக இருந்தது. அதற்கும் நிறைய தாகம் போலும்.

ஆனால் நீரோடைக்கு போனதும் அங்கே நீரில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து பயந்துபோய் திரும்பி வந்துவிட்டது.

தாகம் துரத்தியது. திரும்பவும் நீரோடைக்கு செல்கிறது. இப்படி போவதும் வருவதும், போவதும் வருவதுமாக இருந்தது.

நாய் களைத்துப் போய் விட்டது. இருந்தும் தாகம் மேலிடவே அந்த நாய் சரேலென தண்ணீருக்குள் பாய்ந்தது. பயம் தெளிந்தது. தாகத்தைத் தீர்த்துக் கொண்டது.

அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். நம் தாகத்தை தணிக்க விடாமல் செய்வது பயம் மட்டுமே. ஆனால் தாகம் மேலிடும் போது நமக்குள் உருவாகும் தைரியமானது பயத்தை உடைத்து விடுகிறது என அறிந்து கொண்டேன். அதனால் அந்த நாய் தான் என் முதல் குரு.

சீடர்கள் வியந்தனர். இரண்டாவது குரு யார் என அந்த ஞானியைக் கேட்டனர்.

அவர் சொன்னார் எனது இரண்டாவது குரு ஒரு 'திருடன்'.

"என்ன, திருடன் குருவாக முடியுமா?", என்றனர்.

அவர் புன்னகையுடன் பதில் சொல்லத் தொடங்கினார்.

அந்தக் காட்டில் பசி மிகுதியால் நான் மிகவும் களைப்புற்று சோர்ந்து கிடந்தேன். அப்போது ஒருவர் வந்து என்னை கைத்தாங்கலாக தூக்கி அருகிலிருந்த தன் குடிசைக்கு அழைத்துச் சென்றார்.

'சாமி, நீங்க யார்?' என்று என்னை கேட்டார்.

அதைத்தான் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன் என பதில் சொன்னேன்.

அவருக்கு அது புரியவில்லை.

சற்று தயக்கமாக, ‘நீங்கள் யார்?’, என்று கேட்டேன்.

‘நான் ஒரு திருடன்.’ என பதில் சொன்னார்.

'உங்களுக்கு தயக்கம் இல்லை என்றால் உங்களுக்கு விருப்பம் இருக்கும் வரை இங்கேயே தங்கலாம்.' என்று கூறினார்.

நானும் வேறுவழியின்றி ஒத்துக் கொண்டேன்.

அன்று இரவு அவர் தன் தொழிலுக்கு கிளம்பினார். மறுநாள் காலையில் வந்தார். என்னப்பா தொழில் எப்படி? ஏதாச்சும் கிடைச்சதா? என்றேன்..

இன்னைக்கு கிடைக்கல சாமி நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும் என்றார்.

மறுநாளும் தொழிலுக்குச் சென்றார். திரும்பி வந்ததும் மீண்டும் அதே கேள்வியை கேட்டேன். இன்னைக்கு இல்ல சாமி நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும் என்று அதே பதிலைச் சொன்னார்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் எனது அதே கேள்வியும், அவரது அதே பதிலும் தொடர்ந்தது.

அன்றுதான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். சாதாரண பொருளை தேடக்கூடிய (திருடக்கூடிய) திருடனுக்கே இவ்வளவு பொறுமையும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது என்றால்....

மிகப்பெரிய செல்வமாகிய ஞானத்தை தேடக்கூடிய எனக்கு எவ்வளவு நம்பிக்கையும் பொறுமையும் தேவை என்பதை தெரிந்து கொண்டேன்.

அதனால் அந்த திருடன் தான் எனது இரண்டாவது குரு.

சீடர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது.

அப்போ அந்த மூன்றாவது குரு யார்? என்று கேட்டனர்.

அந்த ஞானி சொன்னார்..நான் தேவையானவற்றை கற்றுக் கொண்ட பிறகு, ஒரு ஊரில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன்.

அப்போது அவ்வீட்டிலிருந்த 5 வயது குழந்தையொன்று வீட்டிலிருந்த விளக்கையே பார்த்துக் கொண்டிருந்தது.

அந்த குழந்தையிடம் என் புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காக...

"பாப்பா இந்த விளக்கில் வெளிச்சம் இருக்கிறதே.. அது எங்கிருந்து வந்தது எனத் தெரியுமா?" என கேட்டேன்.

அந்த குழந்தை சட்டென விளக்கை ஊதி அணைத்து விட்டு, 'தாத்தா ! இப்போ இந்த வெளிச்சம் எங்கே போச்சோ.. அங்கிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது.' என பதில் சொன்னது.

ஆஹா!!... ஞானம் எனக்கு மட்டும் சொந்தம் என கர்வம் கொண்டிருந்தேன்.

அதை தகர்த்த அந்த குழந்தைதான் என் மூன்றாவது குரு என்றார்.

எனவே குரு என்பவர் ஒரு நபர் அல்ல. குரு என்பது ஒரு தன்மை. இருளை அகற்றும் மின்னல் கீற்று..

அஞ்ஞானம் போக்கும் அறிவு...!

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகள் எல்லாம் செய்ய முடியாது..!

அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதா உபதேசத்தை,
ஒழுக்கத்தில் சிறந்த பீஷ்மனுக்கு கூறவில்லை.
வித்தையில் சிறந்த துரோணருக்கு கூறவில்லை.
பக்தியில் சிறந்த விதுரனுக்கு கூறவில்லை.
தன்னையே சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்குத் தான் கூறினார்.

இருப்பதிலேயே நண்பனிடம் சரணாகதி அடைவது தான் இயலாத காரியம். ஏனென்றால் நண்பனின் அத்தனை சேட்டைகளும் தான் நமக்குத் தெரியுமே!

அதனால் நண்பனிடம் மட்டும் சரணாகதி அடைவது என்பது இயலாத காரியம்.

ஆனால் கிருஷ்ணனின் அனைத்து சேட்டைகளையும் அறிந்த பின்பும் (சிசுபாலன் கண்ணனின் சேட்டைகளை பக்கம் பக்கமாக பட்டியலிட்ட பின்பும்) அர்ஜுனன் சரணாகதி அடைந்தான்.

அர்ஜீனன் முழுவதும் ஏற்கும் தன்மையில் இருந்ததனால் கிருஷ்ணனுக்கு வேறு வழியே இல்லை அர்ஜுனனை சீடனாக ஏற்றுக்கொண்டான். கீதை அருளப்பட்டது.

இவ்வளவு ஏன்? ஞானத்திற்கெல்லாம் தலைவனாக இருக்க கூடிய சிவபெருமான் கூட தன் மகனாக இருந்தாலும், மண்டியிட்டு வாய் மூடி தலை குனிந்து தன்னை சீடன் என்ற நிலைக்கு இறக்கிக் கொண்ட பின்புதான் முருகனிடம் உபதேசம் பெறமுடிந்தது.

சம்மட்டி ஓசையை கேட்டு ஞானமடைந்தவரைப் பற்றியும், உடைந்த குடத்தின் ஓசையிலே ஞானமடைந்த பெண் புத்தத்துறவியைப் பற்றிய கதையையும் படித்துள்ளோம் தானே.

ஆகவே *ஆன்மீகத்தில் முக்கியமானது குருவின் தகுதி அல்ல. சீடனின் தகுதி தான் மிகவும் முக்கியமானது.*

எவ்வளவு மழை பெய்தாலும் திறந்த பாத்திரத்தைத்தான் மழையால் நிரப்ப முடியும். மூடிய பாத்திரத்தை வானமே கிழித்துக்கொண்டு பெய்தாலும் நிரப்ப முடியாது .

கிரேக்க ஞானி டயோஜனிஸிக்கு ஒரு நாய்தானே குரு. நியூட்டனுக்கு ஆப்பிள் தானே குரு. ஆர்க்கிமிடிஸிக்கு தான் குளித்த தண்ணீர்தானே குரு.

உலகின் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைனுக்கு, நட்சத்திரங்களைப் பற்றி விளக்கிய குரு, சோப்பு நுரை தானே!

அதனால்தான், "நதிமூலம் பார்ப்போரின் தாகம் தீர்வதில்லை. ரிஷிமூலம் பார்ப்போர் ஞானம் அடைவதில்லை." என்று பெரியோர் உரைத்துள்ளனர்.

*தன்னை தகுதிப் படுத்திக் கொண்டவன், தன் பாதையிலேயே, தன் குருவைக் காணலாம்.*



____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள்.

முன்னேற்றத்தை தடுப்பது எது?


முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஞானி ஒருவர் குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த குடிசையின் அருகில், ஒரு துவாரத்தில், சின்ன சுண்டெலி ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது.

அந்தக் காட்டில் பூனையின் நடமாட்டம் அதிகம் இருந்ததால் சுண்டெலி மிகவும் பயத்துடன் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ஒரு பூனையின் பிடியிலிருந்து தப்பிய சுண்டெலி முனிவரிடம் சென்றது. சுண்டெலியை பார்த்து ஞானி, "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார்.

அதற்கு அந்த சுண்டெலி, "பூனையை கண்டால் எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால் உங்களுக்குப் புண்ணியமா போகும்." என்று மிகுந்த கவலையுடன் கூறியது.

ஞானியும் எலி கேட்டபடியே எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பூனையாக மாறிய எலி ஞானி முன் வந்து நின்றது. பூனையைக் கண்ட ஞானி, "இப்போது என்ன பிரச்சனை?" என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பூனை, "என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும்." என்றது.

உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய்.

ஞானி நாயைப் புலியாக மாற்றினார்.

சில நாட்கள் கழித்து மீண்டும் ஞானி முன் வந்து நின்ற புலி, "இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுங்கள்." என்றது.

உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து, வேடன், ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான்.

அதைக்கேட்ட ஞானி, "சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. நீ எதுவாக மாறினாலும் உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருப்பதுதான் சரி!" என்று கூறி, சுண்டெலியாகவே மாற்றி விட்டார்.

இக்கதை உணர்த்தும் தத்துவம் என்னவென்றால்...

எந்தவொரு இடத்திலும் நமது பயத்தை வெளிக்காட்டாமல் செயல்பட்டால் எல்லா இடத்திலும் வெற்றியடையலாம். அல்லது, குறைந்தபட்சம் தோல்வி அடையாமலாவது தப்பிக்கலாம். பயமானது வெற்றிக்கு தடைக்கல்லாக மட்டுமே இருக்கும். எனவே பயத்தை விட்டுவிட்டு செயல்பட்டால் நீங்களும் வாழ்க்கையில் வெற்றியடையலாம்.



____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள்.

உள்ளத்தனையது உயர்வு


வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஒருவன். அவனுக்கு தொழில் நஷ்டம், குடும்பத்தில் நிம்மதி இல்லை. கவலை அவனை வாட்டியது. அதனால், குருவை தரிசித்து, அவனது மனக்கவலை தீர வழி கேட்டான்.

குரு, ஒரு குவளையில் நீர் நிரப்பி, கையளவு உப்பையும் கலந்து கொடுத்தார். அதை சிறிது குடித்ததுமே உமட்டுவதாகச் சொல்லி குவளையை கீழே வைத்து விட்டான்.

குரு, இப்போது ஒரு குளத்தில் அதே கையளவு உப்பைப் போட்டு, அவனை குடிக்க சொன்னார். குளத்து நீர் உப்பு கரிக்கவில்லை, இனிக்கிறது என்றான்.

குரு சொன்னார்... "கவலை என்பது உப்பின் அளவு. நீ ஏன் உன் மனதை குவளையைப் போல சிறிதாக வைத்துள்ளாய்?? குளத்தைப் போல பரந்த மனதோடு வாழ்; கவலைகள் உன்னை பாதிக்காது."

மனம் தெளிவுற்று நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாயினான் அந்த மனிதன்.

ஆம் நண்பர்களே,
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.
எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.
எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.

இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.

வாழ்க்கையும் இதே மாதிரி தான். நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.
அதுவே அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும் சாவியாக அமைந்துவிடும்.

சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள்.

மனக் குழப்பத்திற்கு மருந்து

மனம் குழப்பத்தில் இருக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்..?

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டு வரச் சொன்னார். சீடரும் பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து, நீரை அசுத்தப்படுத்தி, பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார். ஏரியருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது .

சகதி, நீரின் அடியிற்சென்று படிந்திருந்தது. ஒரு பானையில் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர், தண்ணீரைப் பார்த்தார்; சீடனையும் பார்த்தார்.

பிறகு மெல்லிய குரலில் கேட்டார்..
"தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?"

சீடன், "நான் ஒன்றும் செய்யவில்லை, சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!"

புத்தர், "நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?".

"ஆமாம், சுவாமி!" என்றான் சீடன்.

நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.

மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல; இயலும் செயலே!


____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள்.

ஆடை அணிகலன் அலங்காரம்


ஒரு கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின.

ஆலயக் காப்பாளர், "என்ன கடவுள் நீ?? உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே!! நீ எப்படி உலகத்தைக் காப்பாய்?" என்று புலம்பி அழுதார்.

அப்போது அங்கே வந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்... "நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர, கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக் கொண்ட தெய்வம், இன்னொருவன் எடுத்துக் கொண்ட போது விட்டுக் கொடுத்து விட்டது. உயர்வாக அதை நினைக்கும் நீ தான் காப்பாற்றியிருக்க வேண்டுமே தவிர, எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல."

*ஆடை-அணிகலன்-ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை.*


____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள்.