தேனி அல்லிநகரம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருப்பதிகம்

தேனி அல்லிநகரம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருப்பதிகம்
(இயற்றியவர்: C விஸ்வநாதன்)

காப்பு:-

வெங்கதிரோன் மூட்டும் வெளிச்சம் வியனுலகிற்
செங்கதிர் மேலுயர செந்தாமரைப் பூ மலரும்
அல்லல் வினைதீரும் உன்னருளால் ஐங்கரனே
நல்லாருள் நான்குவிய நற்கவியாய் துணையருளே!

நூல்:-

சோலைப் பசுமலர்கள் சூல்வெடித்து தேனிறைய
தென்மேற்கு வெற்புவளி நீராட்டும் அல்லிநகர்
கொன்றைபூ வில்வமொடு கோலோச்சும் சிவனருகே
உலகாண்ட தையலாள் ஒளிர்நகர் பார்நெஞ்சே. 01

பாரிடை ஐந்தாய்ப் பரந்த நாயகனை
பக்தியால் நீரினுள் நிலைக்க வைத்தவளே
அம்பா! ஆனைக்கா நின்ற வடிவழகே!
அல்லிநகர் சம்புவின் அகிலாண்ட நாயகியே. 02

கால்மதியம் கறைபடியா மணிகங்கை மாசுமுறா
சூழரவம் தீங்கிழையா சிவனேயுன் ஆளுகையாற்
தாள்பிடித்த மக்களதன் அழுக்காறு கழித்திடும்
அல்லிநகர் அகிலாண்ட அம்மைபதி போற்றி. 03

நான்முகன் தன்தொழில் நினைவிலாது மையலில்
தானெனும் தருக்கைதன் தலைகளிடை சூடினான்
வான்விடுத்து ஆனைக்கா வந்தவுடன் வினையகற்றி
ஊனுயிரை ஏற்றுவித்த உமைபாகன் உறைநிலமே. 04

ஆனைக்கா திருவரங்கம் அன்னஓர் அமைப்பு
தேனித்திரு சயனமும் அல்லிநகர் சம்புவும்
வானின் ஒளிச்சிதறல் வரைகடல் வாங்கிசூடும்
ஆனைக்கா இறைநிழல் அல்லிநகர் சுமப்பதுவே. 05

நான்மறை நுண்பொருளும் கோன்முறைக் குடிபொருளும்
மான்மழுவன் வாயுரைக்க தேன்மொழியாள் நூல்பயிலும்
மேன்தருநாள் ஆடிவெள்ளி சுப்பனவன் சொன்னதனை
உன்சுந்தரியாள் செவிநுழைக்கும் சூத்திரமோ சுந்தரனே. 06

ஆடிவெள்ளி காலையிலே அலைமகளாய் உச்சிதனில்
சூடியவன் உமையவளாய் மாலைதனில் கலைமகளாய்
மடிவீணை ஏந்திடுவள் சக்திதிருச் சக்கரத்தை
அடியவர்தம் நிறையுயர்த்த தாடங்கம் தனிலுடையாள். 07

சுட்டுவிடும் சுடரினிலே சுந்தரனாய் ஒளிர்பவனே
நட்டுவளர் மனத்தினிலே நன்மையென தழைப்பவனே
திட்டியின் விடம்அன்ன கற்பினவள் துணையவனே
கெட்டிமேளச் சத்தங்கூட்டும் சம்புவன ஈசுவரனே. 08

பித்தனென்ப பேயனென்ப கரியனென்ப கறையனென்ப
சிக்கலென்ப கூத்தனென்ப சிறுமைக்கண் பார்ப்பன
நேயம்நீ நிறையும்நீ நிருத்தம்நீ நிம்மதிநீயென
மொழிவர் நமசிவாய மெய்ப்பொருள் கண்டவர். 09

நாணயம் தகையதோர் நானில வாழ்வுதனில்
பாநயம் பாடியென் சம்பீசன் பணிகுவேன்
வெய்யில் விரிப்பவனே மழையும் வார்க்க
உயிர்கள் விழிநீரும் உலர்த்துவான் வாழ்கவே. 10

வெண்நாவல் தருஅடியில் வீற்றிருக்கும் சம்பீசா
என்நாவால் பாமொழிய இசைய வைத்தாய்
பண்பாடல் எந்நாளும் பாடாநா ஒலித்தது
உன்கடைப் பார்வை கனிமலராய்ப் பொழிகவே. 11

சிலந்திதன் சிற்றுயிரால் சிவபதத்தை போற்றிட
நாலிருகால் நாற்புறம் நனிநயமாய் நடைநடந்து
பாலுமிழ்நூல் பந்தலிட்டு வீழ்கூளம் விலக்கியதால்
கோல்பிடிசெய் குலமடுத்த சம்பீசன் வழுத்துதுமே. 12

பழுத்தநிறை பற்றுடன் பரமனுனை பற்றிடுவேன்
அழுத்திடினும் அகலேன் தடுத்திடினும் தளரேன்
கழுத்தினில் கறையேற்ற கருணைநிறை சம்புனை
வழுத்துவேன் திருமுன் சென்னி தாழ்த்துவேன். 13

சரணம் சரணம் இமவான் கோமகள்
பர்வத நாட்டின் பார்வதி சரணம்
திரிபுர சுந்தரி மாதவன் தங்காய்
நந்தினி அகிலாண்ட நாயகி சரணம். 14

வாசப்பூ வனமெங்கும் வந்திடினும் வாசமில்லை
வெய்யில் விரிந்திடினும் வியர்ப்பில்லை சம்புனை
நேசப்பூ மனத்தில் நெக்குருகி நினைந்தபின்
துய்யநீர் மலராய் மனந்தென்னுள் குளிர்ந்தாய். 15

வெண்மதியும் பொன்ரவியும் விசும்பறியா மருள்வேளை
தண்மதியம் தனையொத்த தமிழ்முகம் தாயினவள்
பொன்முகம் மின்னொளியால் பூவுலகில் ஒளிஎழும்
அன்னையென் அகிலாண்ட அம்மையவள் அருளது. 16

மாலைசரக் கொன்றை மணிமுடி சூட்டியவன்
பாலைநிலம் பொற்ப பற்றறுத்த என்மனத்துள்
சோலைவனப் புனலாய் பாவுருபயிர் வளர்த்தான்
தோலைஅரைக் கசைந்த சம்பீசன் திருவருளே. 17

பற்றியுனை சரணடையா வெற்றிமடி வீழ்கிடவேன்
தொற்றியுனை நாடிபெறா வெற்றியுமோர் வெற்றிடம்
சுற்றிஎனை தோல்விவந்து சுட்டிடினும் சம்புனை
போற்றியபின் வெற்றிபெறும் பாடறிய வேறறியேன். 18

நித்தமுனை நீராட்ட நீள்விசும்பு நீர்சுரப்ப
சுத்தமலர் தூவித்தொழ சோலைவனம் பூமலர்ப்ப
அத்தனுனை அடிதொழுகும் அடியன்எனை அரவணைய
சுத்தனுனை விட்டுவிடின் சுற்றமிலை சம்பீசா. 19

வாசநறு மலர்கள் வீசுமணம் விதியிட்டு
நேசமிகு நேயரிவர் நேயமிலா கயவரென
வேசமிட்டு நாசிபுகா நான்மறையன் சம்பீசன்
நாற்புறமும் நலமிறைவன் பூசிடுவர் புகழுணர்வர். 20

நூற்பயன்:-

இளமதியம் வார்சடையில் ஏந்தியருள் இறைவாழ்க!
வளஞ்சுரக்கும் வான்கங்கை வழிமடுத்த புனல்வாழ்க!
குளமளியும் அல்லியென மங்களங்கள் பெருகிவாழ்க!
உளமலரும் சம்பீசன் அகிலாண்டேசுவரி இணைவாழ்க!