ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவரத்ன மாலை

தேனி அல்லிநகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையின் அன்பால் அடியேன் இந்நூலை எழுதப்பெற்றேன். ஆன்றோர் அனைவரும் படித்துப் பயனுற எல்லாம் வல்ல பரதேவதையை வேண்டி முதல் முறையாகப் பதிவிடுகிறேன். ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையின் தழுவலாக எழுதப்பெற்றது. எளிமையும் இனிமையும் கூடிய சொற்களால் தொகுக்கப் பெற்றது. இசையுடன் பாடி மகிழவும் ஏற்றது. கருத்துகள் ஏதேனும் இருப்பின் பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவரத்ன மாலை
(இயற்றியவர்: C விஸ்வநாதன்)
@Copyright Reserved 2019

காப்பு

ஏற்றம் எளிதாய் என்றும் அமைந்திட
தோற்றம் நலமாய் மலர்ந்திட அருளும்
ஊற்றின் கண்ணே நவ மாலையினை
உயர்வாய் காக்கும் கண நாயகனே

மாதா ஜெய ஓம் அகிலாண்டேஸ்வரி
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே
மாதா ஜெய ஓம் அகிலாண்டேஸ்வரி
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

வைரம்

கற்றோர் தெளிவே கனிவாழ் அமுதே
கலைகள் இடைவாழ் கரையா நிலவே
பற்றும் அடியார் நினைவே என்றும்
பசுந்தேன் மழையே இமவான் உமையே
பனிப்பூங் கணையும் பாசாங் குசமும்
இனித்தே கரத்தில் அணையும் கொடியே
வைரத் திருமேனியளே வருவாய்
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

மாணிக்கம்

கானத்தினிலே உயிரானவளே
கருதக் கிடையா மறையானவளே
வானத்தினைப் போல் வடிவானவளே
வரையக் கிடையா அருமைப் பொருளே
நாடித் திருநாமமும் நின் துதியும்
நவின்றால் அவரை நீங்காதவளே
மாணிக்க ஒளிச் சுடரே வருவாய்
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

கோமேதகம்

வீரத் தனலே சரணம் சரணம்
விதையாய் மரமாய் விளைபவள் சரணம்
வேதப் பொருளே சரணம் சரணம்
வினவா மொழியின் விடையே சரணம்
கோமேதகமே குயில் மாமயிலே
குழல்வாய் மழலை மொழியே வருவாய்
வானோர் மகளே வரும் மாமழையே
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

பவளம்

நந்தினி சௌந்தர்ய கானவி சங்கரி
வைஷ்ணவி சாமுண் டீஸ்வரி காளீ
பஞ்சமி பைரவி கௌமாரி யளே
பரிபூரணி நாராயணி வாணீ
அஞ்சுக தேவி மகேஸ்வரி கௌரீ
அகிலாண்டேஸ்வரி பவள சொரூபினி
மங்கல நாயகி சந்த்ர கலாதரி
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

மரகதம்

உறைநின் கோலம் மனதில் என்றும்
நிலைக்கும் நலனை எமக்கிங் கருளி
பதிக்கும் செயல்கள் எதிலும் உனையே
துதிக்கும் அடியேன் திறனைப் பேணி
வாக்கும் மனமும் வளம்பெற நாளும்
தாக்கும் மாயை தகர்ந்திடச் செய்து
காக்கும் மாதவ மரகத வல்லீ
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

வைடூர்யம்

ஒன்றாய் அரும்பி உலகிங் கெல்லாம்
வென்றாய் ஆற்றல் வைடூரியமே
குன்றா மணியே ஒளிரும் குவையே
நன்றே தாய்மை நலமே வருவாய்
உத்தமி நீயே! உமையவள் நீயே!
உலகினை ஆளும் கொற்றவை தாயே!
முப்புரம் எரித்தவன் முழுமுதல் பத்தினி
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

நீலம்

வெள்ளி விடிந்த பொன்னிற வானம்
வேத பாராயணம் செய்திடும் வேளை
சிந்தை நிரம்பிய அம்பிகை கோலம்
சேர்ந்து நலம்தரும் மங்கலம் யாவும்
நீலத் திருமே னியளே உமையே
நினைவார் நெறியில் நிறையும் பொருளே
வாலைக் குமரி வருவாய் அருள்வாய்
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

முத்து

வித்தே விதையுள் உறையும் கருவே
விலகா பதியின் பிரியா விடையே
முத்தே உலகின் முதல்வி சரணம்
முடியா தியங்கும் விசையே சரணம்
மத்தேறிய பால் தயிராய் திரியும்
அஃதே அழியா ஆற்றல் உனதே
சித்தே சிவசக்தி யளே வருவாய்
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

பத்மராகம்

மங்கலம் மேவிய நின்திருக் கோலம்
மகிமை நிறைந்த குங்குமத் தாதும்
என்றும் நிலைத்திடும் புண்ணிய வதனம்
ஏடுகள் தோறும் உன்புகழ் வாசம்
எந்த மனத்தும் எதிலும் இருப்பாள்
சந்திர பதும ராக வியாபினி
மந்திர தந்திர யந்திரம் யாவிலும்
மாதா ஜெய ஓம் பரமேஸ்வரியே

பலச்ருதி

எவர் எப்பொழுதும் இயல்பாய் அகிலா
நவ ரத்தின மாலையினை நவின்றிடுவார்
அவர் நற்பலன்கள் விரைவாய் அடைவார்
சிவசக்தி அருட் குணமும் பெறுவார்.