சருகும் மண்ணாங்கட்டியும்


மலையூர் என்ற கிராமத்தில் மண்ணாங்கட்டியும் இலைச் சருகும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களது ஒற்றுமையைக் கண்டு ஊரோர் அனைவரும் பிரமிப்பு அடைந்தனர். இவர்களது உடல் எடை வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தில் மிகுந்த ஒற்றுமை கொண்டுள்ளனர். காலையில் இருந்து மாலை வரை மரத்தடியில் அமர்ந்து பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பர். இரவு வரும் முன்னர் அவரவர் தங்களது வீட்டிற்குச் சென்று உறங்கிடுவர். இப்படியே இவர்களது பொழுது வழக்கமாக சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த கிராமத்தில் வயது முதிர்ந்தவர்கள் சிலர் காசிக்குப் பயணம் செல்வதை மரத்தடியில் பேசிக் கொண்டிருந்த மண்ணாங்கட்டியும் சருகும் கவனித்தன. உடனே சருகு மண்ணாங்கட்டியிடம் "ஏன் அவர்கள் காசிக்கு செல்கிறார்கள் ?" என்று கேட்டது.

"வாழ்க்கையில் தங்களது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னர் மனிதர்கள் தங்களது இறுதிக்காலத்தில் காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி தங்களது பாவங்களை நீக்கிக் கொள்வார்கள். அதோடு தாங்கள் மறுபிறவி இல்லாத வீடுபேறு நிலை அடைய வேண்டுமாறு சாமியிடம் வேண்டிக் கொள்வார்கள்." என்று மண்ணாங்கட்டி கூறியது.

"நாமும் வாழ்ந்து முடித்தவர்கள் தானே! அப்படியானால் நீயும் நானும் காசிக்குச் சென்று நமது பாவங்களை நீக்கி விட்டு வரலாமா ? " என்று சருகு கேட்டது.

இதைக் கேட்ட மண்ணாங்கட்டி, "சரி, இங்கு வெட்டியாக அமர்ந்து கொண்டு இருப்பதற்குப் பதிலாக காசிக்கு சென்று புண்ணியமாவது அடையலாம்!" என்று சம்மதம் தெரிவித்தது.

யாரிடமும் யோசனை கேட்காமல் இருவரும் பிரயாணத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் காசிக்குச் செல்வது ஊரில் யாருக்கும் தெரியாது. பசிக்கும் பொழுது கிடைத்த உணவுகளை உண்டு பசியாறினர்.

இரண்டு நாட்கள் கடந்ததில் பாதி தொலைவு கடந்தது. அப்பொழுது காற்று வேகமாக வீசியது. மண்ணாங்கட்டியால் காற்றின் வேகத்தைத் தாங்கி நிற்க முடிந்தது. ஆனால் இலைச் சருகு காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் அலைமோதிக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட மண்ணாங்கட்டி சருகின் மேல் அமர்ந்து கொண்டது. அதனால் இருவரும் காற்றில் பறக்காமல் தப்பித்துக் கொண்டனர். ஒரு வழியாக காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை வந்தது. தன்னைச் சரியான நேரத்தில் காப்பாற்றிய மண்ணாங்கட்டிக்கு நன்றி சொல்லி விட்டு தங்களது பிரயாணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.

சிறிது தூரம் கடந்ததும் பெரும் மழை பொழிய ஆரம்பித்தது. மழைக்கு ஒதுங்கி நிற்க அங்கு ஒரு இடம் கூட இல்லை. ஒரே ஒரு மரமும் சிதைந்த கூரைவீடும் மட்டுமே இருந்தன.

மழை பெய்யும் பொழுது மரத்தடியில் ஒதுங்கக் கூடாது என்று சருகு அறிவுறுத்தியது. அதனால் சிதைந்த கூரை வீட்டுக்குள் சென்று ஒதுங்கின. ஆனால் வீடு முழுவதும் மழைநீர் ஒழுகிக் கொண்டு இருந்தது. இருவரும் சற்று உயரமான இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். இருப்பினும் கூரையில் இருந்து ஒழுகும் நீரை மண்ணாங்கட்டியால் சமாளிக்க முடியவில்லை. உடனே மண்ணாங்கட்டியின் மேல் சருகு அமர்ந்து கொண்டது. இருவரும் தப்பித்துக் கொண்டனர். இப்பொழுது மண்ணாங்கட்டி சருகுக்கு நன்றி சொன்னது.

இறுதியாக இருவரும் காசி வந்தடைந்தனர். அங்கே மனிதர்கள், கங்கை நதியில் மூழ்கி எழுந்து பாவங்கள் நீக்குவதை மண்ணாங்கட்டியும் சருகும் பார்த்தனர். தாங்களும் கங்கையில் மூழ்கி எழுவதற்கு படித்துறையில் இறங்கினர்.

அப்பொழுது தான் அவர்களுக்குத் தங்களது அறியாமை நினைவிற்கு வந்தது. காசிக்கு வரும் வழியில் காற்றிலும் மழையிலும் பட்ட அனுபவம் புரிந்தது.

காசியில் கங்கை நதி தனது இருகரைகளை தொட்டுக் கொண்டு மிகுந்த வேகத்துடன் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது.

கங்கை நதியில் மண்ணாங்கட்டி இறங்கினால் தண்ணீரில் கரைந்து விடும். சருகு இறங்கினால் வெள்ளத்தின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடித் செல்லப்பட்டு விடும். இதை உணர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் நொந்து கொண்டனர். பின்னர் இருவரும் சாமியை மட்டும் தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்பினர்.

கதை உணர்த்தும் நீதிகள் :-
**************************************
1. நட்பு என்பது நண்பர்களில் ஒருவருக்கு ஆபத்து நேரும் பொழுது இன்னொருவர் சென்று தகுந்த நேரத்தில் உதவுவதாகும்.

2. ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் முன்பு அதில் அனுபவம் வாய்ந்த நபர்களிடம் இலக்கைப் பற்றி ஆலோசனை மேற்கொண்ட பின்னர் அதற்கு ஏற்ற நபர்களைக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

3. நமது இலக்கு சரி தானா? அதை நம்மால் அடைய முடியுமா? என்று அறிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்பு அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

- C. விஸ்வநாதன்

அக்கா 'குருவி'


அக்கா குருவி
அப்போ எங்களுடைய ஜாகை ரயில்வே வீட்டில் ஸ்டேஷனுக்கு மேலே உள்ள மாடியில். அந்தக்கால மோஸ்த்தரில் ஜன்னல் அதற்கேற்ற கண்ணாடிக்கதவுக ளும்,எத்தனை டிகிரி சூடேற்றினாலும் இளகாத இரும்புக் கொண்டிகளையும் கொண் டது. இழுத்து ஜன்னல் கதவைச் சார்த்துவது என்பது, அத்தனை சுளுவில் நடந்துவிடாது. அந்தக் கண்ணாடிக்கதவுகளூடே ரயில் செல்வதைப் பார்க்கப் பிடிக்கும். சத்தம் ஏதும் கேட் காமல் அதிர்வோடு கூடிய ரயில் ஊர்ந்துசெல்வது தெளிவாகத் தெரியும்.

வீட்டிற்கு விட்டம் என்பது மூன்று ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருக்கும், அந்த உயரத்திலிருந்து இரு பக்க சுவர்களை இணைக்க தண்டவாளங்களை வைத்து ‘கர்டர்’ போட்டிருப்பார்கள். அந்தக் ’கர்டர்’களிலிருந்து பெரிய ஃபேன் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். சுவிட்சைப் போட்டால் சுனாமியே வந்தது போல சுழன்றியடிக்கும் காற்று. ரெகுலேட்டர் வகையறாவெல்லாம் பழுப்பேறிப்போய் அதன் குமிழை திருக்குவதற்குள் காற்று நம்மை அடித்துக் கொண்டுபோய்விடும். அதனால் எப்போதாவது வெய்யில் அதிகம் இருக்கும் நாட்களில் , வீடு முழுக்க வெய்யிலின் தாக்கம் இருக்கும் போது மட்டும் அதைச் சுழலவிடுவது வழக்கம்.

அன்று காற்று துளிக்கூட அடிக்கவில்லை, வெய்யில் தாங்கவியலாமல் அடித்துக் கொண்டிருந்தது. வெக்கை பரவி வீட்டுக்குள் இருக்கமுடியாமல் போனது. ‘அந்த ஃபேன் சுவிட்சைப் போட்டு விட்றா’ என்றாள் அக்கா. வேக மாக ஏறிப்போட்டுவிட்டேன்.

அப்போது பார்த்து எங்கி ருந்தோ ஒரு சிட்டுக்குருவி வீட்டிற் குள் பறந்து வந்தது. ‘கீச் கீச்’ என்று கத்தியபடியே இங்குமங்கும் பறந்துகொண்டிருந்த குருவி சுழன்று கொண்டிருந்த ஃபேனின் இறக்கையில் அடிபட்டு பொத்தென விழுந்தது, ‘யக்கா யக்கா’ குருவி செத்துப்போச்சு’ என்று கத்தினேன். ஓடிவந்தவள், ‘ச்சீ சாகவெல்லாம் இல்லை, அதுக்குத்தான் இந்த ஃபேனைப் போடவே கூடாது, என்றாள். வெள்ளைப்பூண்டு போட்டு வைக்கும் கூடையிலிருந்த பூண்டுகளை கொட்டிவிட்டு குருவியை அதற்குள் வைத்து மேலே இருந்த கம்பிகளை கீழிறக்கி மூடினாள்.

பின்னர், மஞ்சளை அரைத்துக்கொண்டுவந்து, கம்பிக் கூடையின் ஓட்டைகள் வழியாக அந்தக் குருவியின் இறக்கையை சற்றே தூக்கிவிட்டு மஞ்சளைத் தடவிவிட்டாள். சிறிது நேரத்தில் மயங்கிப்போய், கூண்டின் அடுத்த பக்கத்தில் சாய்ந்து கிடந்தது. கொஞ்ச நேரம் கழித்து கைப்பிடி அளவு சோறை ஒரு கொட்டாங்குச்சியில் வைத்து மேல் மூடியை குருவி அறியாது திறந்து உள்ளே வைத்து விட்டாள். அசையாது படுத்துக்கிடந்த அந்தக்குருவி அரவம் கேட்டதும் கால்களை உதைத்து முன்வந்து பார்த்தது. பின்னர் மெதுவாக ஒன்றிரண்டு பருக்கைகளை கொத்தித்தின்ன முயன்றது.

இரண்டு நாள் கழிந்தது. தரையில் வைத்திருந்த கூடையை மெதுவாக எடுத்து மரப்பலகையில் இருந்த ஆணி யில் தொங்கவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆறியது காயம். கூண்டுக்குள்ளேயே கீச் கீச் என்று சில சமயங்களில் கத்தும். அதன் உடலிலும் இறக்கை யிலும் அந்த மஞ்சள் கறை இன்னும் போகவில்லை. சில சமயங்களில் மூக்கை வைத்து நீவுகிறேன் பேர்வழி என்று காயத்தில் பட்டுவிட்டால் சிறிது நேரம் கத்தும். பின்னர் அமைதியாகிவிடும்.

‘யக்கா இந்தக்குருவிய நாமளே வளப்பமா’ என்று கேட்டால் ‘ போடா அதெல்லாம் எப்பவும் பறந்துக்கிட்டே இருக்கிறது, இப்டி கூண்டுலல் லாம் அடைச்சி வெக்கக்கூடாது, எதோ அடிபட்டுருச்சேன்னு தான் வெச்சிருக்கேன். அப்புறம்? ‘சரியானவொடனே கதவைத் திறந்து விட்டுருவேன்’ என்பாள் அக்கா.

நான் அருகில் சென்றாலே படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு தன்னைப்பிடிக்கத்தான் வருகிறான் என நினைத்து கூண்டின் அடுத்த பகுதியில் போய் ஒண்டிக்கொள்ளும். பள்ளிக்
கூடம் போவதற்கு முன்பும், வீடு வந்து சேர்ந்தபின்பும் அதைப் போய்ப்பார்க்காமல் எனக்கு உறக்கமே வருவதில்லை. ஒரு நாள் வீடு திரும்பி வந்த போது கூண்டுக்குள் அந்தக்குருவியைக் காணவில்லை. பயந்துபோய் அக்காவிடம் சென்றேன் இதைத் தான் கேட்க வந்திருக்கிறான் என ஊகித்தபடி ‘என்ன குருவி தானே, மூடியைத்திறந்து பறக்கவிட்டுட்டேன்,காயம் தான் ஆறிருச் சில்ல’ என்றாள். எனக்கு ஒன்றுமே சொல்லத்தோணவில்லை.

அவ்வப்போது பக்கத்திலி ருக்கும் மரங்களில் அந்தக்குருவி தென்படுகிறதா என்று பார்த்துப்பார்த்து ஏமாந்து போவேன், அப்போதெல்லாம் தூரத்தி லிருந்து என்னைப்பார்த்து சிரித்துக்கொள்வாள் என் அக்கா.


நன்றி :   தி இந்து (தமிழ்) நாளிதழ்

அலையடிக்கும் சமுத்திரம்


கடல்தாயின் பிள்ளைகள் - ஒருநாள்
கறிச்சோறு கேட்டு அவளைக் குடைந்தன
என்ன கறி இருக்கும் என ஏக்கத்துடன்
பார்க்க வந்தாள் தன் கரையை...

கறி கேட்டுத் துடித்தவை எல்லாம்
கறியாகிக் கிடந்ததை பார்த்தழுதாள்
அவள் அழுது வைத்த கண்ணீரை
அழுத்தத்துடன் தூக்கி எறிந்தாள்

அது வாரிக் குடித்தது மனித ஜாதியை
அவள் வாட்டத்தில் விட்ட சாபம் பலித்தது
இழுத்து வந்த சதைகளை எல்லாம்
இரையாக எடுத்து ஊட்டி விட்டாள்

உண்டு மிச்சத்தை உப்புக்கண்டம் போட்டு
உலர்த்த ஒதுக்கினாள் தன் கரையில்...
வெற்று உடலென்று விம்மி அழுத சனம்
வேதனைக் கண்ணீரை வீசியது கடலில்...

**C. விஸ்வநாதன்

இந்தியர்களின் கனிவான கவனத்திற்கு

தேவைக்கு மிஞ்சிய வசதிகள் நம்மிடம்
தேர்ச்சி பெறாமலே வாழ்க்கையில் தவிக்கிறோம்.

நடிகர்கள் இன்று நடமாடும் தெய்வங்கள்
நடந்தவர்கள் நவீன கால அருங்காட்சியகங்கள்

மரப்பாச்சி பொம்மைக்கு மாராப்பு சுற்றினோம்
மனித உறுப்புகளையே மலிவாக விற்கிறோம்

கடவுளுக்குப் பயந்து கை தொழுத காலங்களில்
கருணை மகள் கோயில் கவலைகளை தீர்த்தது

கணினிகளை மீட்டும் தகவல் தொடர்பில்
காசு பார்க்கும் வித்தையே கடவுளானது

விதையில்லா கனியிலும் கருவில்லா முட்டையிலும்
விலையில்லா மனிதநேயம் விடைபெற்றுப் போனது

கூட்டமாக வாழ்ந்தவர்கள் நாம் - இன்று
கூண்டுக்குள்ளே சுதந்திரம் தேட எங்கு கற்றோம் ?

மேற்கத்திய நகல்களாக மீசை இழந்து நிற்பது
புலியைப் பார்த்து சூடு போட்ட பூனை போன்றது.

பிழைகள் வருமுன் காப்பது அவர்கள் பண்பாடு
பிழைகள் வராமல் தடுப்பதே நம் மூத்தகுடி ஏற்பாடு

மாற்றம் பெற்றால் தான் பண்பாடு மெருகேறும்
மனிதநேயம் வறண்டால் அமளியில் திண்டாடும்

என்ன நடந்தாலும் இது இயல்பு என்று
எண்ணுவது அல்ல நம் பண்பாடு

எதிரிக்கு இன்னல் நேர்ந்தாலும் - இதயம்
பதறி உதவுவதே அதன் சும்மாடு!

மக்கும் அறங்களின் மறுபிறப்பும் நம் கையில்
விக்கல் வேதனைக்கு வைத்தியமும் நம்மிடத்தில்

ஏனென்றால்,
பெற்றோர் வழி நடத்தும் பழுத்த தலைமுறையும்
பிள்ளைகள் வழி நடக்கும் பிஞ்சு தலைமுறையும்
இது தான்!

**C. விஸ்வநாதன்

எதிரிகளுடன் யுத்தம் செய்கையில்

யுத்தம்...
போர்க் கருவிகளின்
பொழுது மிளிர்கிற காலம்!

வேகமும் விவேகமும் இணைந்தால்
வெற்றி தரும் சுபயோகம் – இங்கு
வீரம் மட்டுமே வெல்வதில்லை
விவேகமும் இருந்தால் தோற்பதில்லை

போர்க் களத்தில் தற்புகழ்ச்சி
வெற்றிக் களிப்பில் பெருமகிழ்ச்சி
தோற்ற உடனே மனத்தளர்ச்சி
இம்மூன்றும் தேக்கத்தின் தொடர்ச்சி!

தேவைக்கு மிஞ்சிய பொருளும்
திறமைக்கு மீறிய புகழும்
தேனாறு போல இனிக்கும்
தித்திப்பில் மனதைக் கவிழ்க்கும்

சரிந்த இடத்தை விட்டு விட்டு
சறுக்கிய இடத்தை சரி செய்தால்
சரித்திர வெற்றிகள் பதிவாகும்
தரித்திர நோய்கள் தகர்ந்தோடும்

எழுந்து நடந்தால் எல்லாம் உறவு
விழுந்து படுத்தால் பாயும் பகை
ஊரான் முதலல்ல வெற்றி – அது
உண்மைக்குக் கிடைக்கும் வெள்ளாமை!

**C. விஸ்வநாதன்

படி தாண்டினாலும் நீ பத்தினியே!





மோகப்படும் பொழு தெல்லாம்
முகர்ந்து உன்னை எறிவதற்கு
போகப் பொருளாகவே பார்க்கும்
புத்தியை யார் கொடுத்தது?

தோள் சீலைப் போராட்டம்
தொடங்கிய உன் மண்ணில்
தொந்தரவான ஆடை நேர்த்திக்கு
முற்றுப் புள்ளி எப்போது?

குட்டும் பொழுது குனிந்து
உன் கோபத்தை அடக்காதே!
வேதனை, வலி, வெறியினை
வேட்டியாய் வரிந்து கட்டி எழு!

அப்பா, கணவன், மகனென்று
ஆரம்ப வாழ்க்கை முதலே
ஆணினைச் சார்ந்து வாழும்
அடிமை சங்கல்பம் அடங்கட்டும்!

படிதாண்டா பத்தினி என்பது
பாழ்படுத்தும் வஞ்சப் புகழ்ச்சி
பாரதியின் ரத்தம் இருந்தால்
படி தாண்டினாலும் நீ பத்தினியே!

செடியினைச் சார்ந்து நிற்கும்
மலராய் இருந்தது போதும்
இனிமேல் சுதந்திரப் பறவையுடன்
உன் சுதி சேர்ந்து பாடட்டும்!

**C. விஸ்வநாதன்

ஓட்டப்பந்தயம்


வானம் வரையும் ஓடுகிறேன்
வாழ்க்கைப் புதிரின் விடைதேடி
வாசல் தாண்டி வந்து பின்னும்
வாழ்வின் கேள்வி விளங்கவில்லை

தேடித் தேடித் தாண்டுகிறேன்
தேடல் இன்னும் ஓயவில்லை
காயம் பட்டும் ஓயாமல்
காயும் என்று தேற்றுகிறேன்

சாரல் விட்ட நீரெல்லாம்
சமுத்திரத்தில் தங்கி விட்டால்
வேருக்கு நீர் வார்க்க
விளைமேகம் வருவதெங்கே?

தேடல் என்பது நின்று விட்டால்
தேங்கிய குட்டை நீர் போன்றது
நதியின் தேடல் நீளமானதால்
நாளும் புதுமை காண்கிறது.

தேடல் என்பதே வாழ்க்கையானால்
எதைத் தான் தேடி ஓடுகின்றோம்?
தேடும் பரிசு தெரிந்து விட்டால்
தேவை ஒரு நாள் தீர்ந்திடுமோ!

காலம் என்னும் ஓட்டத்தில்
கரைகள் என்பது கிடையாது
வானம் கூட விலக்கின்றி
வரம்பு தேடியே விரிகின்றது

இருக்கும் வரை வாழ்ந்து விடு
இருப்பதைக் கொண்டு லயித்து விடு
சிறப்பு என்பது சிற்பியின் கையில்
செதுக்க செதுக்க செம்மையாகும்.

உச்சத்தின் அளவு நிரந்தரமல்ல
ஒவ்வொரு நாளும் உயர்வடையும்
சத்தியம் கொண்டு போராடு
சரித்திர வெற்றி பதிவாகும்.

**C. விஸ்வநாதன்

கல்யாணக் கனா கண்டேன் தோழி!


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
பல்லவி

பொட்டப்புள்ள நெஞ்சுக்குள்ள எத்தனையோ ஆச!
அத்தனைக்கும் அர்த்தம் வந்து உள்ளங்கையில் பேச!
உறங்காத நாளுக்கெல்லாம் உசுரூட்ட வந்தானே!
ஊரெல்லாம் வாழ்த்துச் சொல்லும் உறவாக வந்தானே!
என் ரெட்ட ஜட சேத்து ஒரு ஒத்த ஜட போட
ஒரு நேரங்காலம் வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!

சரணம்

பத்து வித ஒத்துமையும் ஒத்துழைப்பு தந்துருச்சு
தங்கத் தாலி நீ முடிக்க தடையே இல்ல
வெத்தலையும் பாக்கும் போட்டு வெறுநாக்கு செவந்தாச்சு
விட்ட குறை தொட்ட குறை எதுவுமில்ல
உன் நெஞ்சுக் குழி மேல என் நெத்தி வந்து சேர
நல்ல நேரங்காலம் வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!      (பொட்டப்புள்ள...)

மொத்த சொந்தம் ஒத்துமையா, சுத்தி நின்னு வாழ்த்து சொல்ல,
தங்கத் தாலி நீ முடிச்சு நெஞ்சில் நிப்பாயே!
சுத்தி வந்து நெத்தியில குங்குமத்த நீ நிறைக்க,
சுண்டு வெரல் கைபுடிச்சு சுத்தி வருவோமே!
ஸ்ரீராமன் சீதை போல, மணமாலை மாத்தும் வேள,
நல்ல நேரம் கூடி வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!       (பொட்டப்புள்ள...)

**C. விஸ்வநாதன்

சிறு தொடுதலிலே


சுடும் வெயிலினிலே..
முதல் முதலாய், சுகங்களைக் காண..
மழை வரும் பொழுதும்
உந்தன் மடியில் நான்.. ஏங்க
இனி ஒரு பொழுதும்
உயிர் பிரியா, உரிமையை வாங்க 
ஒரு கண நிமிடம்
எனதில்லையே, நீ... கேட்க!

கலையே இல்லா சிலை போல
கிடந்தேன் அன்பே சுமையாக
எடுத்தாய் எனை நீ முழுதாக
தொடுத்தாய் மனதை அழகாக

நான் மழைநீர் என்பது தெரியாதா...
கடல்-வானம் நீ புரியாதா!!!
விழுந்தாலும் உன்னை அடைவேனே..
எழுந்தாலும் வந்து தொடுவேனே.

பனி விழும் காலம்
இனி வரும் மாதம்
இருவரும் ஆசை நெருக்கத்திலே!
மழை தரும் மேகம்
மனதினில் மோகம், மயக்கத்திலே...

கரையே இல்லா கடல் போல 
கலந்தாய் எனக்குள் முழுதாக 
மறந்தேன் எனை நான் மகிழ்வாக 
பிறந்தாய் அன்பே விரைவாக...

நம் உணர்வுகள் ஒன்றெனப் புரியாதா..
உடல் தான் வேறெனத் தெரியாதா!!
சிரிப்பால் மனதைத் திறந்தோமே
சிறகால் உலகைத் தொடர்வோமே...

இது ஒரு மோகம்
இளமையின் தாகம்
விரைவினில் ஆசை தீர்வதில்லை
தளர்ந்திடும் ராகம் 
தொடர்ந்திடக் கூடும் நெருக்கத்திலே...

* C. விஸ்வநாதன்

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருப்பாடல்


அல்லிநகரம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி


அகிலாண்ட ஈஸ்வரியின் அல்லிநகர் தோற்றமிது
மங்கை அவள் திருப்புகழை அனுதினம் நீ பாடு

குங்குமத்தில் வாசம் கொண்டு மங்களமாய் வரம் அருள்வாள்
எவ்வுயிர்க்கும் வரம் கொடுத்து எந்நாளும் துணை இருப்பாள்
கண்ணோடு இமையாகி காலமெல்லாம் வாழ வைப்பாள்
எந்நாளும் நலமாகி எல்லோர்க்கும் ஒளி கொடுப்பாள்

அன்னையிடம் ஓடி வந்து அன்பு மழை ஊற்றெடுக்கும்
அன்றாடப் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்
நம்பி வந்த எல்லோர்க்கும் நல்லதொரு வழி பிறக்கும்
நாயகி திருவருளால் பொன்னான வாழ்வு வரும்

நகரெங்கும் தேவி அருள் நன்மையாய் செழித்திருக்கும்
மனமார துதிப்பவர்க்கு பக்தியில் மனம் லயிக்கும்
வெற்றி அவள் குங்குமத்தில் நிச்சயமாய் நிலைத்திருக்கும்
அல்லிநகர் திருத்தலத்தில் எந்நாளும் அருள் கிடைக்கும்

**C. விஸ்வநாதன்

ஸ்ரீ கலியுக சிவகாம சௌந்தரி திருப்பாடல்


கலியுக சிதம்பரரின் சிவகாம சுந்தரி
கயிலையில் அருள் புரியும் ஜெகதீஸ்வரி
அருள்வாய் நின்பதமே, மலர்வாய் பொன்முகமே
அழகே! பெண்மயிலே! பொற்சபையின் மாதவமே!

கயிலைப் பரம்பொருளின் மனம் புரிந்து மகிழும் கனகாங்கியே!
அந்த சிவனுக்குள் சரிபாதி இடம் வாங்கினாய்
அய்யன் திறமைக்கும் புகழுக்கும் துணையாகிறாய்.

கனக சபையில் நடராஜருடன் திருநாட்டியம் புரிபவளே!
வைர ஒளிச் சதங்கை தண்டை குலுங்கிட ஆடியே வருபவளே!
நன்மை செழித்திட, உண்மை நிலைத்திட ஆடிய பேச்சி காளியே!
அன்பர்கள் வியந்திட ஆதிசிவனுடன் ஆனந்த நடனம் செய்பவளே!

நந்தி மத்தளம் கொட்டவே, நாமகள் வீணை மீட்டவே
கந்தன், கணபதி, கங்கை, அம்புலி, நாகம் உன்னுடன் ஆடவே

எந்த நாளும் உனை சிந்தை செய்ய
வரம் தந்தருள்வாய் பரமேஸ்வரியே!
மந்தஹாசமுடன் இன்ப வாழ்வு பெற
சந்ததம் மங்களம் தந்திடும் அம்பிகையே!

**C. விஸ்வநாதன்

ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருப்பாடல்கள்


01. ஸ்ரீ கலியுக சிதம்பரர் சிறப்பு :-
==========================

அனுதினமும் துதிக்கின்ற வரம் தர வேண்டும்
சுடரே! வான் மழையே! ஸ்ரீ கலியுக சிதம்பரனே!

அருள்நிதி நாயகனே! இருநிதி சூழ்ந்தவனே!
அன்பரின் மனம் பார்த்து அருளும் தயாபரனே! - உன்னை
அனுதினமும் துதிக்கின்ற வரம் தர வேண்டும்
சுடரே! வான் மழையே! ஸ்ரீ கலியுக சிதம்பரனே!

வருவோரை அரவணைத்து வாழவைக்கும் தெய்வம்
திருமணத் தடை நீக்கி வரம் அருளும் தெய்வம்
கலங்கரை விளக்கான கலியுக தெய்வம்
குலம் பல தழைக்க வைக்கும் எங்கள் குல தெய்வம்!

**C. விஸ்வநாதன்

வளர்பிறை தேடும் வளர்மொழி




மொழி வடிவம் :-

உயிரினங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவும் காரணிகளுள் மொழியும் ஒன்றாக விளங்குகிறது. மெய்க்குறிப்பு காட்டுதல், சித்திரம் வரைதல் போன்றவற்றை விட பேச்சும் எழுத்தும் எளிமையாக இருப்பதால் அவற்றிற்குப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்துக் கலையை விட பேச்சுக்கலை வடிவம் மக்களிடையே வேகமாக சென்றடைவதால் மக்களிடையே பேச்சிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஒருவர் தனது எண்ணங்களை படம் வரைந்தோ அல்லது எழுதியோ தெரியப்படுத்த ஆகும் காலத்தை விட பேச்சு வடிவில் விரைவாகவும் எளிமையாகவும் பரிமாற்றம் செய்து விடலாம். எனவே தான் பேச்சு வடிவில் புழங்கப்படாத மொழி அதன் வீச்சினை இழந்து விடும் என்பார்கள்.

நரம்பில்லாத நாக்கில் மொழி நடனமாடினால் தான் நாளை என்றொரு எதிர்காலம் அம்மொழிக்கு உண்டு. மொழியைத் தொலைத்து விட்டால், தொலைவது மொழியன்று; அம்மொழியைப் பேசிய மக்கள் கூட்டமே ஆகும். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மொழியைப் பாதுகாக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு அம்மொழி சார்ந்த மக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். சில மொழிகள் உளவியல் ரீதியாகவும் சில மொழிகள் அறிவியல் ரீதியாகவும் இன்னும் சில மொழிகள் வியாபார ரீதியாகவும் கட்டமைக்கப் பெற்று பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில் நமது தமிழ் மொழியை இன்னும் உணர்வு ரீதியாகவே பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம்.

தாய் மொழி உணர்வு :-

அன்பு என்றவுடன் முதலிடம் பிடிப்பவள் அம்மா. எனவே தான் பாசத்தைக் காட்டி வளர்த்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று தாய்க்கு நிகராக ஒப்பிட்டு வளர்த்தனர். முதன்முதலில் இந்த உலகத்தைத் திறந்து காட்டி தனியொரு அடையாளத்தை ஒருவருக்கு தருவது, அவரது அம்மா. அது போலவே தான் தாய்மொழியும்.
தாயைப் போல, தனியொரு அடையாளத்தை ஒரு சமூகத்திற்கு தேடித் தருவது தாய்மொழியாகும். மொழி வழியாகத் தான் ஒருவருக்கு எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் பொருளே விளங்குகிறது. இதனால், மொழி என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானதல்ல; அவரோடு சேர்ந்த ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இனத்திற்கும் சொந்தமானது. வெளியுலகோடு பரிணமிக்க உதவும் ஊடகமே மொழியாகும்.

இன்றைய சமூகச்சூழல் :-

இன்றைக்குப் பாசத்தைக் காட்டிலும் பணத்திற்குத் தான் முக்கியத்துவம் பெருகி வருகிறது. அன்றைக்குக் குடும்பத்தையும் உறவுகளையும் தாங்குவதற்கு பாசம் என்ற ஆதாரம் போதுமானதாக இருந்தது. இன்றைக்குப் பணம் தான் பிரதானம் என்று ஆகி விட்டது. எந்த மொழி பேசும் மக்களாயினும் அவர்கள் வாழ்வதற்குப் பணம் இன்று அவசியமானதாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே பணம் தான் அவசியம் என்றாகிவிட்டது.

வெற்றியின் அளவுகோலிலும் பணம் தான் இன்றைக்கு முக்கியக் குறியீடாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக யாரையும் குறை கூறி ஒதுக்கி விட முடியாது. அதே சமயம், இந்த நிதர்சனத்தை நம்மில் பெரும்பாலோர் மறுத்து விடவும் இயலாது. ஏனெனில் இவையாவும் கால இடைவெளியில் மனிதர்களால் வரையப்பட்ட கற்பனைக் கோடுகளே. இதை வேறுபாடு என்று சொல்வதை விட வித்தியாசம் என்றே கருதுகிறேன்.

மெல்லத் திறக்குது கதவு :-

மொழியை ஒரு வீடு என கற்பனை செய்து கொள்ளுங்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வீட்டினுடைய உண்மையான அழகு தெரியாது. வெற்று வெளிப்புற வேலைப்பாடுகளை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு வீட்டின் நிலைப்புத் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியாதல்லவா! அதனுடைய உட்புற கட்டமைப்புகளே கட்டிடத்தின் உறுதியைக் கூறும் முக்கிய காரணிகளாகும். வீட்டினுடைய ஆரோக்கியமான உட்கட்டமைப்பு வெளியிலிருந்து பார்த்தால் தெரியுமா? உள்ளே சென்று உணர்ந்தால் தான் உண்மை விளங்கும்.

நாம் அனைவரும் தமிழ் என்னும் வீட்டில் பிறந்திருக்கிறோம். ஆனால் கதவுகளை மட்டும் ஏனோ தாழிட்டு வைத்துள்ளோம். நம் வீடு மிகவும் அழகானது, தரமானது, உறுதியானது.  ஆனால் வெறுமனே ஜன்னல் கதவோரம் நின்று அதை பாடிக் கொண்டிருந்தாலோ அல்லது நமக்குள்ளே பேசி தற்பெருமை கொண்டிருந்தாலோ போதுமா? இப்படிச் செய்வது, ஒரு திருமணமான பெண் தன் பிறந்த வீட்டுப் பெருமையை அண்ணன்களிடம் மட்டுமே கூறுவதைப் போல இருக்கிறது.

நம் வீட்டினுடைய கதவுகள் திறக்கப்பட வேண்டும். உற்றார், உறவினர்கள், மற்றும் விருந்தினர்கள் யாவரும் வரவேற்கப்பட வேண்டும். நமக்கும் அவர்களுக்கும் வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய நாவால் நம் வீட்டினுடைய அழகு வர்ணிக்கப்பட வேண்டும். அதில் தான் நமக்குப் பெருமை இருக்கிறது.

நம் வீட்டில் குடியிருக்க வேண்டும் என்று விருந்தினர்கள் தாமாக ஆசைப்பட வேண்டும். நம் வீட்டின் அழகுக் குறிப்புகளை நம்மிடம் இருந்து கடனாகப் பெற்று அவர்கள் பயன்படுத்த வேண்டும். அதே வேளையில் காலத்திற்கு ஏற்றவாறு நல்ல மாற்றங்களுடன் நம் வீட்டிலும் மராமத்து வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தான் நம் வீட்டினுடைய (மொழியினுடைய) அழகும் ஆற்றலும் அடுத்த தலைமுறையினரால் எடுத்துச் செல்லப்பட ஏதுவாக இருக்கும். ஒரு மொழியினுடைய அறிவும் ஆற்றலும் அதனுடைய உபயோகத்தைப் பொறுத்தே உணரப்படும்; உயர்த்தப்படும்.

தற்போதைய நிலையில் தமிழ் மொழியினுடைய கதவுகள் மெல்ல திறக்கப்பட்டு உள்ளன. விருந்தினர்களும் வரவேற்கப்படுகின்றனர். ஆனால் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருக்கின்றன. முதலில் நம் குடும்பத்தினர் சௌகர்யமாக வாழ்வதற்கேற்ற வசதிகளையே நாம் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்பழியை ஒருவர் மீது மட்டுமே சுமத்தி விட்டு நிம்மதி தேட முடியாது. ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் இதற்குப் பொறுப்பேற்று செம்மைப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு நமக்குள்ளே நாம் தனித் தனித் தீவுகளாக மாறிவிட்டோம். இந்த அக்கறையின்மையால் தான் தமிழ் மொழியின் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே குறுகி நிற்கிறது.

மொழியின் நிலைப்புத் தன்மை :-


ஒரு மொழியினுடைய எல்லை விரிவடைய வேண்டுமென்றால் அதனுடைய பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். மொழியினுடைய பயன்பாடு அதிகரிக்க வேண்டுமெனில், அது நான்கு முதன்மையான இடங்களில் முன்னிலை பெற வேண்டும் என, திரு. சாலமன் பாப்பையா அவர்கள், ஒரு பட்டிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார். முதலாவதாக, கல்வித் தலங்களில் கற்பிக்கப்பட வேண்டும். இரண்டாவது, குடியிருக்கும் வீடுகளில் புழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அதனுடைய ஆட்சிப் பீடங்களிலும் அரசியல் களங்களிலும் நிலைக்க வேண்டும். நான்காவதாக, சந்தைகளில் பழக்கப்படுத்தப்பட வேண்டும். இந்த நான்கு காரணிகளை மையமாக வைத்தே ஒரு மொழியினுடைய நிலைப்புத்தன்மை கால ஓட்டத்தில் நிர்ணயமாகிறது.

மேற்கூறிய நான்கு இடங்களிலும் தமிழ் மொழி நிலைப்பு பெற்றிருக்கிறதா என்றால், என்னைப் பொறுத்த மட்டில், அது அரை குறையாகத்தான் அல்லாடித் தவிக்கிறதே தவிர, தமிழ் தனது சொந்தக் கால்களை பயன்படுத்த நாம் இன்னும் வழி வகுக்கவில்லை என்றே கூறத் தோன்றுகிறது. வெள்ளையர்கள் போட்டு வைத்த கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க நமக்கு இன்னும் நேரம் போதவில்லை. வெள்ளையர்கள் திட்டம் பாசத்தையும் ஒழுக்கத்தையும் வெற்றிகரமாக வெட்டி விட்டது. அதனால் பற்று என்பதே இன்று நம்மிடம் இருந்து பட்டுப் போய் விட்டது. தாய் மீதே பற்று இல்லாத மனிதனிடம் தாய்மொழிப் பற்றை எதிர்பார்க்க முடியவில்லை. இன்னும் வெள்ளையர்கள் நம்மில் சிலரை ஆண்டு கொண்டுதான் இருக்கிறார்களோ என்ற எண்ணம் என் மனதில் சில சமயங்களில் தோன்றுவதுண்டு.

அகநிலவரங்கள் :-

பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை வேற்றுமொழி கல்விக்கூடங்களில் விரும்பிச் சேர்க்கும் காட்சிகள் இங்கு தான் அதிகமாக அரங்கேறுகின்றன. வேற்று மொழியைப் பயில்வது தவறென்று கூறவில்லை. ஆனால் அம்மொழியை மட்டுமே அன்றாட வாழ்க்கையிலும் பழக்கப்படுத்துவது சரியென்று கூற இயலாது.
அறிவியல் தமிழ் புத்தகத்தை வழங்குகிறோம். ஆனால் நல்ல அறிவியல் தகவல்களை நம்மால் தமிழில் வழங்க முடிகிறதா? கலைச் சொற்கள் யாவும் கண்காட்சிப் பொம்மைகளாகவே இருக்கின்றன. இவை காலத்திற்கேற்றவாறு எளிமைப் படுத்தப்பட்டால் மக்களிடையே பழக்கப்படுத்த ஏதுவாக இருக்கும். ஆனால் எளிய சொற்களை சில அறிஞர்கள் “இழிசினர் வழக்கு” என்று ஏட்டில் ஏற்ற மறுப்பது தமிழையே தனதாக்கிக் கொண்டது போல் தோன்றுகிறது.

தமிழ் மொழியில் பேசும் பொழுதும் தமிழைப் பற்றி பேசும் பொழுதும் பெரும்பாலும் நாம் நயம் பாராட்டிச் செல்கின்றோம் அல்லது பழியைப் பிறர் மீது எரிந்து விட்டுச் செல்கின்றோமே தவிர காலத்திற்கேற்ப அதைப் பயன்படுத்த தேவையான முயற்சிகளை மெதுவாகத்தான் செய்து வருகிறோம். ஆனாலும் அங்கிங்கு மிச்ச சொச்சம் இருக்கும் பாமர மக்களைக் காணும் பொழுது ஏற்படும் நம்பிக்கையால் தமிழுக்கும் எதிர்காலம் உண்டு என்ற தெளிவு நெஞ்சில் பிறக்கிறது.

பாசத்திற்கு மட்டும் முக்கியத்துவம் இருந்த காலத்தில் தமிழைத் தாயாகப் பார்த்தோம். ஆனால் இன்றைக்கு பணமும் தேவை என்றாகி விட்டதல்லவா! அதனால் தமிழ் வளர தமிழைக் கொண்டு பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையும் சூழ்நிலையும் நம்மிடையே உருவாக வேண்டும். அதை நம்மால் மட்டுமே உருவாக்க முடியும். ஏனென்றால், தமிழ் மொழி, தமிழாசிரியருக்கோ அல்லது தனியொரு மனிதனுக்கோ சொந்தமானதன்று; ஒட்டு மொத்த தமிழருக்கும் சொந்தமானது. இதனை முதலில் தமிழ்ப் புலமை பேசுவோருக்கு தான் உணர்த்த வேண்டும் போலிருக்கிறது.

எளிமையான தீர்வு :-

தமிழுக்கென்று ஒரு செவ்வியல் தன்மை இருக்கின்றது. பேசும் பொழுது மொழியை நாம் தாறுமாறாக வளைக்கலாம். இருப்பினும் எழுதும் பொழுது நாம் பேச்சு வழக்கை பெரும்பாலும் பின்பற்றுவதில்லை; எழுத்து வடிவில் எல்லா தமிழனும் அதற்கான உண்மையான வடிவத்தை தான் பின்பற்றுவார்கள். இது தமிழினுடைய ஆகச் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு என்றும் சொல்லலாம்.

எந்த ஒரு கலை வடிவமும் மக்களிடையே பிரபலமடைய வேண்டுமெனில் அது அதன் நுகர்வோருக்குப் புரியும் படியாக அமைய வேண்டும். அது போன்றது தான் மொழியும். ஒருதலைச் சார்பின்றி அனைத்து தரப்பு மக்களாலும் எளிமையாக கையாளக் கூடிய பண்பு பெறுகின்ற பொழுதே மொழியானது பூரண வலிமை அடைகிறது. மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே இருந்தால் தான் மொழியின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும்.

மேட்டுக்குடியினர் மட்டுமே ரசித்த மேடைக் கச்சேரி ராகங்களை தனது ஆற்றலால் பாமர மக்களும் ரசிக்கும் படி கொண்டு சேர்த்த இசைஞானி இளையராஜா அவர்களைப் போல தமிழ்ப் புலமை பேசுவோரும் செந்தமிழுக்கு சேவை செய்ய வேண்டும். தமிழினுடைய பழம் பெருமைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அதன் பன்முகத்தன்மை நிலைத்து விடாது. அதற்கான முறையான கட்டமைப்புகளை மெருகேற்ற வேண்டும்.
“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்று பாரதியாரும் அவரது காலத்தில் இடித்துரைத்துள்ளார்.

தமிழைப் பக்தி மொழி, தத்துவ மொழி என்று அழைத்தால் மட்டும் போதாது. அதன் பாமரத் தன்மையும் பதிவு செய்யப்பட வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் தமிழை அறிவியல் ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் செம்மைப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.  பண்டைய தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்த பொழுது விளை பொருட்களுக்கு தமிழ் பெயர்களையே பயன்படுத்தியதால் வியாபாரத்தோடு தமிழும் பரவலாகியது. தமிழின் அறிவுப் புலத்தை விரிவுபடுத்தி விட்டால் நாமும் உலக அரங்கில் நமது சொந்தக் காலில் நடை போடலாம்.

ஒரு மகாகவியின் வாக்கு பொய்யாகாது என்று நம்புவதால், பாரதியின் கவிதையைக் கடன் வாங்கி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்த வசை எனக்கு எய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

================================
கட்டுரையாளர் :-
C. விஸ்வநாதன்
viswaciet@yahoo.com, 07829256213
================================