ஸ்ரீ பெரியாச்சி அம்மன்


பெரியாச்சி எனும் தேவதை காளியின் அவதாரம் என்று பெரும்பான்மையாக கருதப்படுகிறாள். முன்னொரு காலத்தில் பிராமணர் அல்லாதோர் வணங்கித் துதித்த தெய்வம். ஆனால் காளியின் அவதாரம் என்பதால் காலப்போக்கில் பிராமணர்களும் வணங்க ஆரம்பித்தனர். தமிழ்நாடு மாநிலத்தில் "பெரியாச்சி அல்லது பேச்சி" என்றும் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் "பெத்தம்மா" (Peddamma) என்றும் அழைக்கப்படுபவள்.

பொதுவாக, தமிழகத்தில் எந்த ஒரு குலதெய்வக் கோயில் இருந்தாலும் அங்கு பெரியாச்சி அம்மன் எனும் பேச்சியம்மன் இல்லாமல் குலதெய்வம் இருப்பதில்லை. பெரியாச்சி அம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலாக இருப்பவள். முற்காலத்தில் கிராமங்களில் பிரசவம் பார்ப்பதற்கென்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் கர்ப்பம் அடைந்த பெண்மணிகள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து குழந்தை நல்ல முறையில் பிறப்பதற்கு தேவையானவற்றைச் செய்து வந்தார்கள். அஃதாவது பிரசவத்தை நல்ல முறையில் நடத்தும் மருத்துவச்சியாக இருந்தார்கள். இதனால் பேச்சியம்மனை வயதான மூதாட்டி போலவே கருத்தில் கொள்வர்.

குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களது குலதெய்வக் கோயிலில் உள்ள பேச்சியம்மனை வழிபட்டால் குலம் தழைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக வழக்கத்தில் இருக்கிறது. குழந்தை பிறந்ததும் தொட்டிலில் போட்டு பெயர் வைப்பதற்கு முன், முதலில் அவள் சன்னதியில் குழந்தையை கிடத்திய பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து மற்ற சடங்குகளைச் செய்வது பண்டைய வழக்கமாக இருந்தது. கிராமங்களில் அவளுக்கு மிருக பலி தரப்பட்டாலும் நகரக் கோயில்களில் சுத்த சைவமே படைக்கப்படுகிறது.

குழந்தை பிறந்தவுடன் குல தெய்வக் கோயிலில் செலுத்தும் முதல் முடிக் காணிக்கை பேச்சியம்மனுக்கே உரித்தாகுகிறது. ஆனால் வழக்கங்கள் மாற்றப்பட்டு விட்ட இன்றைய சூழலில் பலர் இந்த நடைமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. இன்றைக்கும் நாட்டுக் கோட்டை செட்டியார் சமூகத்தினர் தங்களது குல தெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடும் பொழுது ‘பச்சைப் பரப்பு’ செய்து பேச்சியம்மனுக்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்துவர். தென் தமிழக மக்களின் குலதெய்வக் கோயில்களில் மகா சிவராத்திரி விழாவினை “மாசிப் பச்சை வழிபாடு” என்று அழைப்பதும் குறிப்பிடத்தக்கது. பேச்சியம்மனின் முக்கியத்துவம் காரணமாக இன்றைக்கும் கிராமக் கோயில்களில் பேச்சி வழிபாடு இல்லாமல் இருக்காது.

பேச்சிக்கு களி, கருவாட்டுக் குழம்பு, மற்றும் முருங்கைக் கீரை படைப்பது பொதுவான வழக்கம்.

பெரியாச்சியும் பேச்சியும் ஒருவரே என்று பலரும் எடுத்துரைக்கின்றனர். முக்கியமாக சோழ நாட்டைச் சேர்ந்த திருச்சி மற்றும் தஞ்சையில் இருந்து பிற பகுதிகளுக்கு குடியேறிய பலருக்கும் பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குல தெய்வமாக இருந்து வருவதை திரு. நா. கணேசன் தனது நூலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

பயங்கரமான உருவைக் கொண்டு ஒரு கையில் குழந்தையை ஏந்திக் கொண்டும், தொடையில் தனது கைகளினால் ஒரு பெண்மணி வயிற்றைக் கீறிய நிலையிலும், கால் பாதத்தின் கீழ் ஒரு மனிதன் மிதிபட்டுக் கிடக்கவும் தோற்றம் தரும் பெரியாச்சி பார்ப்பதற்குத் தான் பயங்கரமானவளே தவிர அவளை வணங்கித் துதிப்போருக்கு அபாரமான கருணை காட்டுபவள். அவளது தோற்றம் பற்றியும் பூமிக்கு வந்ததைப் பற்றியும் கதையாக வரலாறு வழங்கப்படுகிறது.


பெரியாச்சி அம்மன் கதை :-

சம்புவராயர் எனும் அரச மரபினர் பிற்காலச் சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு தொண்டை நாட்டின் பகுதிகளுக்கு சிற்றரசர்களாக வாழ்ந்து வந்தனர். அவ்வாறு ஆட்சி செய்தவர்களில் கி.பி.1356 முதல் கி.பி.1375 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜநாராயண சம்புவராயர் கடைசி சிற்றரசராக அறியப்படுகிறார். அவரது மகன் நான்காம் வல்லாளன் கி.பி.1406 ஆம் ஆண்டில் நாடு, நகரம், மற்றும் ஆட்சி செய்யும் அதிகாரம் ஆகியவற்றை இழந்து காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அவன் இழந்த பதவியை மீண்டும் அடைய இயலாது என்று நம்பியதால் கொள்ளையனாக மாறினான். இரவு நேரத்தில் காட்டிற்கு அருகிலிருந்த கிராமங்களுக்குள் சென்று பொருட்களைத் திருடி அதைப் பயன்படுத்தி வாழ்ந்து வந்தான். அச்சூழ்நிலையில் அவனது மனைவி கார்குழலி நிறைமாத கர்ப்பவதியாக இருந்தாள்.

அவன் அரசனாக இருந்த காலத்தில் காட்டிற்குள் வேட்டையாடிய பொழுது அவனது முரட்டு குணத்தால் முனிவரின் சாபத்தைப் பெற்றது நினைவிற்கு வந்தது. முனிவரின் சாபப்படி, அவனுக்குப் பிறக்கும் குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என அஞ்சினான். அதனால் அஞ்சனக்காரர் ஒருவர் மூலம் அவனுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையால் ஏற்படவிருக்கும் ஜோதிட கணிப்புகளை தெரிந்து கொண்டான். அதன்படி, அவனது குழந்தை பூமியை தொட்டு விட்டால் அவன் இறந்து விடுவான் என்பதால் பிறந்தவுடன் குழந்தையையும் அதைத் தொட்டவர்களையும் உடனே கொன்று விட வேண்டுமென அஞ்சனக்காரர் வல்லாளனை அறிவுறுத்தினார். ஆனால் வல்லாளன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால் பெரியாச்சி அம்மன் வயோதிகப் பெண் உருவில் அந்தக் காட்டில் வலம் வந்து கொண்டிருந்தாள்.

அந்தக் காலங்களில் கட்டில்களோ சொகுசான மெத்தைகளோ கிடைப்பது எளிதல்ல. பிரசவத் தீட்டு படாமல் இருக்க கர்ப்பவதிகளை பிரசவ வலி வந்ததும் வீட்டின் மூலையில் தனியாக இருக்கச் சொல்வார்கள். தரையில் விரித்து வைத்த பாயின் மீது பிரசவிக்கும் கட்டுப்பாடு இருந்த காலமது. பிரசவம் பார்க்க அனுபவம் மிகுந்த ஆச்சிகளை கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்க வைப்பார்கள்.

ஒரு நாள் நள்ளிரவில் கார்குழலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வைத்தியத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அந்த காட்டிற்குள் இல்லாததாலும் அஞ்சனக்காரர் கூறிய கணிப்புகளும் வல்லாளனை அமைதி இழக்கச் செய்தன. அந்த இனம் புரியா பதற்றத்துடன் பிரசவம் பார்க்க மருத்துவ ஆச்சியைத் தேடி காட்டிற்குள் சுற்றி வந்தான். அப்போது மருத்துவச்சி உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் அவன் கண்களுக்கு தென்பட்டாள். அவளிடம் குழந்தை பூமியைத் தொடாதவாறு பிரசவத்தை நடத்திக் கொடுக்க கேட்டுக் கொண்டான். அதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவச்சி அவனுடன் சென்றாள்.

வல்லாளன் வீட்டின் அருகில் இருந்த சிறிய கற்பாறையில் அமர்ந்து இரண்டு கால்களும் தரையைத் தொடும்படி ஆசனம் கொண்டாள். கார்குழலியை தனது மடியில் மல்லார்ந்த நிலையில் கிடைமட்டமாக படுக்க வைத்து அவளது வயிற்றைக் கிழித்து கருப்பையின் மேற்புறத்தை திறந்து (Caesarean section) குழந்தையை வெளியே எடுத்தாள். அந்த ஆண் குழந்தை பூமியைத் தொடாதபடி அவளது கையால் மேலுயர்த்திப் பிடித்து தாங்கினாள். கார்குழலிக்கும் குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு வெற்றிகரமாக பிரசவத்தை செய்து முடித்தாள்.

அப்பொழுது வல்லாளன், அஞ்சனக்காரர் அறிவுறுத்திய படி, குழந்தையையும் மருத்துவச்சியையும் கொல்வதற்காக தனது உடைவாளை உருவிக் கொண்டு மருத்துவச்சியை நோக்கி வந்தான். அவன் குழந்தையை கொல்ல வருவதைக் கண்டு கோபத்தில் கொதித்த மருத்துவச்சி அவளது சுய உருவான பெரியாச்சி ஆயினாள்.

ஆயுதம் தாங்கிய நான்கு கரங்களும் விரிந்த கேச பந்தமும் அவள் உருவினை வெளிக்காட்ட சிவந்திருந்த கண்கள் கோபத்தைக் கொப்பளித்தன. ஒரு கையால் குழந்தையை உயர்த்திப் பிடித்து இன்னொரு கையால் வல்லாளனின் இதயத்தை வாளால் அரிந்து எடுத்தாள். அவனை அவளது காலடியில் தள்ளி ஓங்கி மிதித்துக் கொன்றாள். வல்லாளனைக் காப்பாற்றுவதற்காக எழ முயற்சித்த கார்குழலியின் ஈரக்குலையை (கல்லீரல்) அரிந்து விட்டு மற்ற இரு கரங்களால் அவளது குடலை அள்ளி உண்டாள். இவ்வாறாக, பெரியாச்சி, ராட்சச தொழில் செய்த வல்லாளனையும் அவனுக்குத் துணை சென்ற கார்குழலியையும் அழித்தாள்.

மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆசனம் கொண்டிருந்த பெரியாச்சியை நமஸ்கரித்த மக்கள் கோபம் தணிந்து தங்களைக் காப்பாற்றி அருளுமாறு கைகூப்பி வேண்டினர். அதுவரை தனது கையால் தாங்கிப் பிடித்து பாதுகாத்து வைத்திருந்த வல்லாளனின் குழந்தையை பூமியில் தவழ விட்டாள். அவனுக்கு “சீராளன்” எனப் பெயரிட்டு வளர்த்தாள். அன்றிலிருந்து கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் காக்கும் தெய்வமாக பெரியாச்சியை மக்கள் வழிபடத் தொடங்கினர். கி.பி.1475 ஆம் ஆண்டிலிருந்து பெரியாச்சி இறை தேவதையாக உயர்வடைந்து பெரியாச்சி அம்மனாக வணங்கப்படுகிறாள். அவளைத் துதித்து வணங்கி வந்தால், அவள் குடியிருக்கும் ஊரைக் காப்பதாகவும், அவளை நம்பி வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவத்தில் குலம் தழைக்க பாதுகாவலாக இருப்பதாகவும் உறுதி தந்தாள். பெரியாச்சி தன்னை வழிபடும் கர்ப்பவதிகளுக்கு நல்ல முறையில் பிரசவம் நடக்க உறுதுணையாக இருந்து அருள்புரிகிறாள்.

பெரியாச்சியின் பேறுகால அறிவுரைகள் :-

அவள் தம்பதியரை ஆடி மாதத்தில் சேர்ந்து இருக்க வேண்டாம் என வலியுறுத்தினாள். ஆடி மாதத்தில் கருவுற்றால் பெரும்பாலும் சித்திரை மாதத்தில் பிரசவ வலி ஏற்படும். சித்திரை மாதத்தில் வெயில் உச்சத்தில் இருப்பதால் பிரசவிக்கும் பொழுது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதிகமான ரத்தப் போக்கினால் தாய்-சேய் இறப்பு விகிதம் (Infant Mortality rate) அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால் பெரியாச்சியின் இந்தப் பேறுகால அறிவுரையை மக்கள் இன்றளவும் நடைமுறை வழக்கத்தில் கடைபிடிக்கின்றனர்.

பெரியாச்சி அம்மன் வழிபாடு :-

பெரியாச்சி அம்மன் ஆடி மாதத்தில் பெரிதும் ஆராதிக்கப்படுபவள். ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆற்றில் புதுப்புனல் பெருக்கெடுத்து வரும் பொழுது திருவிழா தொடங்கப்பட்டு ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையில் பெரியாச்சி அம்மனுக்கு பூங்கரகமும் அக்னிசட்டியும் எடுத்து மக்கள் வழிபடுவர். சிலர் ஆடிபெருக்கு நாளிலும் கரகமெடுத்து வழிபடுவார்கள். சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் திருவிழாவிற்கு முன்பாக பெரியாச்சி அம்மனுக்கு விழா கொண்டாடுவது சோழ வளநாட்டு மக்களின் வழக்கமாகும்.

மேலும் பேச்சியம்மனுக்கு வைகாசி மாத அமாவாசையன்று இரவில் சர்க்கரைப் பொங்கல் வைத்து முப்பலி கொடுக்கும் நாட்டார் வழக்காறுகள் இன்றளவும் நடைமுறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைபிடிக்கப்படுகின்றன. பொங்கல் மற்றும் முப்பலி விழாவில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்துவர். அன்றைய தினத்தில் அவர்களது ஊரில் கர்பவதிகள் தங்குவதற்கு யாரும் அனுமதிப்பதில்லை. இந்தப் பலியும் படையலும் மக்களிடையே ஒரு நனவிலி நடத்தையாக நாட்டார் வழக்காற்றியலில் கலந்து நடைபெறுகிறது. ஆனால் வழக்கங்கள் மாற்றப்பட்டு விட்ட இக்காலத்தில், இப்பலியும் படையலும் மாசிமாத அமாவாசை அன்று மக்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பேச்சியம்மன் என்பது பே(ய்)ச்சியம்மன் என்பதின் திரிந்த வடிவமாகும். சங்க இலக்கியங்களான புறநானூறு, மதுரைக் காஞ்சி ஆகியவற்றிலும் திருத்தொண்டர் தொகை மற்றும் பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் பேய் மகளிர் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. பேய் மகளிர்க்கும் பிணங்களுக்குமான தொடர்பு மக்களின் பே(ய்)ச்சியம்மன் வழிபாட்டில் நனவிலிச் செயல்பாடாகவே நீடித்து வந்துள்ளது. பே(ய்)ச்சியம்மன் பேய் மகளிர் என்பதற்கான சான்று, அவருடைய திருவடிவங்கள் பாண்டிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன.

**C. விஸ்வநாதன்


குறிப்புச் சொற்கள்: பெரியாச்சி, பேச்சி, பேச்சியம்மன், பச்சை பரப்பு, மாசிப் பச்சை, மருத்துவச்சி, கர்பவதி, பேறுகாலம், குல தெய்வம், முடி காணிக்கை, சம்புவராயர், வல்லாளன், கார்குழலி, அஞ்சனக்காரர், சிசேரியன், பிரசவம், சித்திரை, ஆடி 18, வைகாசி, பள்ளயம், நனவிலி நடத்தை, நாட்டார் வழக்காறு, பேய் மகளிர், சுகப் பிரசவம்.

ஆதார தளங்கள் :-
      1.   http://www.phenomenalplace.com/2014/01/periyachi-amman-worlds-most-fearsome.html
     2.   http://keetru.com/semmalar/apr09/c_thangavel.php

இந்நாள் இனிய நாள்



நேற்று இன்று நாளை...
எதுவும் ஒன்று போன்றதில்லை.

அன்று இதைப் படித்திருந்தால்...
இன்று அது கிடைத்து விட்டால்...
என ஏராளமான ஆற்றாமைகள்
இதயத்தை அழுத்திப் பார்க்கும்.

இந்த நிலத்தில் பிறப்போமென்று
எழுதி வைத்தா நாம் பிறந்தோம்?
விழுந்த நிலத்தில் விளைகிறோம்
விளைச்சல் முடிந்ததும் கலைகிறோம்

ஆளில்லாத படகு கூட ஒரு நாள்
அமைதியாய் சென்று கரை சேரும்
எந்த கரையை சேருமென்பது
இறைவன் வகுத்த விருப்பமாகும்

கேள்விகளுக் கெல்லாம் விடையுண்டு
கேட்டவுடன் கிடைத்து விடாது!
கேள்விக்கான பதிலை சுவைத்துக்
கேட்கும் பக்குவத்தில் கைக்கு வரும்.

எல்லோரும் இவ்வுலகில் வீரர்களே!
ஆனால் எப்போதும் அல்ல
எந்நாளும் புது இனிய நாளே!
ஆனால் எல்லோர்க்கும் அல்ல

சற்று தொலைவில் வெற்றியிருக்கும்
சலிப்பு வந்து விட்டு விடாதீர்கள்
விடாமுயற்சி இருக்கும் வரை
வெற்றி கை நழுவிப் போகாது.


**C. விஸ்வநாதன்