வளர்பிறை தேடும் வளர்மொழி




மொழி வடிவம் :-

உயிரினங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவும் காரணிகளுள் மொழியும் ஒன்றாக விளங்குகிறது. மெய்க்குறிப்பு காட்டுதல், சித்திரம் வரைதல் போன்றவற்றை விட பேச்சும் எழுத்தும் எளிமையாக இருப்பதால் அவற்றிற்குப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்துக் கலையை விட பேச்சுக்கலை வடிவம் மக்களிடையே வேகமாக சென்றடைவதால் மக்களிடையே பேச்சிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஒருவர் தனது எண்ணங்களை படம் வரைந்தோ அல்லது எழுதியோ தெரியப்படுத்த ஆகும் காலத்தை விட பேச்சு வடிவில் விரைவாகவும் எளிமையாகவும் பரிமாற்றம் செய்து விடலாம். எனவே தான் பேச்சு வடிவில் புழங்கப்படாத மொழி அதன் வீச்சினை இழந்து விடும் என்பார்கள்.

நரம்பில்லாத நாக்கில் மொழி நடனமாடினால் தான் நாளை என்றொரு எதிர்காலம் அம்மொழிக்கு உண்டு. மொழியைத் தொலைத்து விட்டால், தொலைவது மொழியன்று; அம்மொழியைப் பேசிய மக்கள் கூட்டமே ஆகும். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மொழியைப் பாதுகாக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு அம்மொழி சார்ந்த மக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். சில மொழிகள் உளவியல் ரீதியாகவும் சில மொழிகள் அறிவியல் ரீதியாகவும் இன்னும் சில மொழிகள் வியாபார ரீதியாகவும் கட்டமைக்கப் பெற்று பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில் நமது தமிழ் மொழியை இன்னும் உணர்வு ரீதியாகவே பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம்.

தாய் மொழி உணர்வு :-

அன்பு என்றவுடன் முதலிடம் பிடிப்பவள் அம்மா. எனவே தான் பாசத்தைக் காட்டி வளர்த்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று தாய்க்கு நிகராக ஒப்பிட்டு வளர்த்தனர். முதன்முதலில் இந்த உலகத்தைத் திறந்து காட்டி தனியொரு அடையாளத்தை ஒருவருக்கு தருவது, அவரது அம்மா. அது போலவே தான் தாய்மொழியும்.
தாயைப் போல, தனியொரு அடையாளத்தை ஒரு சமூகத்திற்கு தேடித் தருவது தாய்மொழியாகும். மொழி வழியாகத் தான் ஒருவருக்கு எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் பொருளே விளங்குகிறது. இதனால், மொழி என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானதல்ல; அவரோடு சேர்ந்த ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இனத்திற்கும் சொந்தமானது. வெளியுலகோடு பரிணமிக்க உதவும் ஊடகமே மொழியாகும்.

இன்றைய சமூகச்சூழல் :-

இன்றைக்குப் பாசத்தைக் காட்டிலும் பணத்திற்குத் தான் முக்கியத்துவம் பெருகி வருகிறது. அன்றைக்குக் குடும்பத்தையும் உறவுகளையும் தாங்குவதற்கு பாசம் என்ற ஆதாரம் போதுமானதாக இருந்தது. இன்றைக்குப் பணம் தான் பிரதானம் என்று ஆகி விட்டது. எந்த மொழி பேசும் மக்களாயினும் அவர்கள் வாழ்வதற்குப் பணம் இன்று அவசியமானதாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே பணம் தான் அவசியம் என்றாகிவிட்டது.

வெற்றியின் அளவுகோலிலும் பணம் தான் இன்றைக்கு முக்கியக் குறியீடாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக யாரையும் குறை கூறி ஒதுக்கி விட முடியாது. அதே சமயம், இந்த நிதர்சனத்தை நம்மில் பெரும்பாலோர் மறுத்து விடவும் இயலாது. ஏனெனில் இவையாவும் கால இடைவெளியில் மனிதர்களால் வரையப்பட்ட கற்பனைக் கோடுகளே. இதை வேறுபாடு என்று சொல்வதை விட வித்தியாசம் என்றே கருதுகிறேன்.

மெல்லத் திறக்குது கதவு :-

மொழியை ஒரு வீடு என கற்பனை செய்து கொள்ளுங்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வீட்டினுடைய உண்மையான அழகு தெரியாது. வெற்று வெளிப்புற வேலைப்பாடுகளை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு வீட்டின் நிலைப்புத் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியாதல்லவா! அதனுடைய உட்புற கட்டமைப்புகளே கட்டிடத்தின் உறுதியைக் கூறும் முக்கிய காரணிகளாகும். வீட்டினுடைய ஆரோக்கியமான உட்கட்டமைப்பு வெளியிலிருந்து பார்த்தால் தெரியுமா? உள்ளே சென்று உணர்ந்தால் தான் உண்மை விளங்கும்.

நாம் அனைவரும் தமிழ் என்னும் வீட்டில் பிறந்திருக்கிறோம். ஆனால் கதவுகளை மட்டும் ஏனோ தாழிட்டு வைத்துள்ளோம். நம் வீடு மிகவும் அழகானது, தரமானது, உறுதியானது.  ஆனால் வெறுமனே ஜன்னல் கதவோரம் நின்று அதை பாடிக் கொண்டிருந்தாலோ அல்லது நமக்குள்ளே பேசி தற்பெருமை கொண்டிருந்தாலோ போதுமா? இப்படிச் செய்வது, ஒரு திருமணமான பெண் தன் பிறந்த வீட்டுப் பெருமையை அண்ணன்களிடம் மட்டுமே கூறுவதைப் போல இருக்கிறது.

நம் வீட்டினுடைய கதவுகள் திறக்கப்பட வேண்டும். உற்றார், உறவினர்கள், மற்றும் விருந்தினர்கள் யாவரும் வரவேற்கப்பட வேண்டும். நமக்கும் அவர்களுக்கும் வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய நாவால் நம் வீட்டினுடைய அழகு வர்ணிக்கப்பட வேண்டும். அதில் தான் நமக்குப் பெருமை இருக்கிறது.

நம் வீட்டில் குடியிருக்க வேண்டும் என்று விருந்தினர்கள் தாமாக ஆசைப்பட வேண்டும். நம் வீட்டின் அழகுக் குறிப்புகளை நம்மிடம் இருந்து கடனாகப் பெற்று அவர்கள் பயன்படுத்த வேண்டும். அதே வேளையில் காலத்திற்கு ஏற்றவாறு நல்ல மாற்றங்களுடன் நம் வீட்டிலும் மராமத்து வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தான் நம் வீட்டினுடைய (மொழியினுடைய) அழகும் ஆற்றலும் அடுத்த தலைமுறையினரால் எடுத்துச் செல்லப்பட ஏதுவாக இருக்கும். ஒரு மொழியினுடைய அறிவும் ஆற்றலும் அதனுடைய உபயோகத்தைப் பொறுத்தே உணரப்படும்; உயர்த்தப்படும்.

தற்போதைய நிலையில் தமிழ் மொழியினுடைய கதவுகள் மெல்ல திறக்கப்பட்டு உள்ளன. விருந்தினர்களும் வரவேற்கப்படுகின்றனர். ஆனால் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருக்கின்றன. முதலில் நம் குடும்பத்தினர் சௌகர்யமாக வாழ்வதற்கேற்ற வசதிகளையே நாம் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்பழியை ஒருவர் மீது மட்டுமே சுமத்தி விட்டு நிம்மதி தேட முடியாது. ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் இதற்குப் பொறுப்பேற்று செம்மைப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு நமக்குள்ளே நாம் தனித் தனித் தீவுகளாக மாறிவிட்டோம். இந்த அக்கறையின்மையால் தான் தமிழ் மொழியின் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே குறுகி நிற்கிறது.

மொழியின் நிலைப்புத் தன்மை :-


ஒரு மொழியினுடைய எல்லை விரிவடைய வேண்டுமென்றால் அதனுடைய பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். மொழியினுடைய பயன்பாடு அதிகரிக்க வேண்டுமெனில், அது நான்கு முதன்மையான இடங்களில் முன்னிலை பெற வேண்டும் என, திரு. சாலமன் பாப்பையா அவர்கள், ஒரு பட்டிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார். முதலாவதாக, கல்வித் தலங்களில் கற்பிக்கப்பட வேண்டும். இரண்டாவது, குடியிருக்கும் வீடுகளில் புழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அதனுடைய ஆட்சிப் பீடங்களிலும் அரசியல் களங்களிலும் நிலைக்க வேண்டும். நான்காவதாக, சந்தைகளில் பழக்கப்படுத்தப்பட வேண்டும். இந்த நான்கு காரணிகளை மையமாக வைத்தே ஒரு மொழியினுடைய நிலைப்புத்தன்மை கால ஓட்டத்தில் நிர்ணயமாகிறது.

மேற்கூறிய நான்கு இடங்களிலும் தமிழ் மொழி நிலைப்பு பெற்றிருக்கிறதா என்றால், என்னைப் பொறுத்த மட்டில், அது அரை குறையாகத்தான் அல்லாடித் தவிக்கிறதே தவிர, தமிழ் தனது சொந்தக் கால்களை பயன்படுத்த நாம் இன்னும் வழி வகுக்கவில்லை என்றே கூறத் தோன்றுகிறது. வெள்ளையர்கள் போட்டு வைத்த கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க நமக்கு இன்னும் நேரம் போதவில்லை. வெள்ளையர்கள் திட்டம் பாசத்தையும் ஒழுக்கத்தையும் வெற்றிகரமாக வெட்டி விட்டது. அதனால் பற்று என்பதே இன்று நம்மிடம் இருந்து பட்டுப் போய் விட்டது. தாய் மீதே பற்று இல்லாத மனிதனிடம் தாய்மொழிப் பற்றை எதிர்பார்க்க முடியவில்லை. இன்னும் வெள்ளையர்கள் நம்மில் சிலரை ஆண்டு கொண்டுதான் இருக்கிறார்களோ என்ற எண்ணம் என் மனதில் சில சமயங்களில் தோன்றுவதுண்டு.

அகநிலவரங்கள் :-

பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை வேற்றுமொழி கல்விக்கூடங்களில் விரும்பிச் சேர்க்கும் காட்சிகள் இங்கு தான் அதிகமாக அரங்கேறுகின்றன. வேற்று மொழியைப் பயில்வது தவறென்று கூறவில்லை. ஆனால் அம்மொழியை மட்டுமே அன்றாட வாழ்க்கையிலும் பழக்கப்படுத்துவது சரியென்று கூற இயலாது.
அறிவியல் தமிழ் புத்தகத்தை வழங்குகிறோம். ஆனால் நல்ல அறிவியல் தகவல்களை நம்மால் தமிழில் வழங்க முடிகிறதா? கலைச் சொற்கள் யாவும் கண்காட்சிப் பொம்மைகளாகவே இருக்கின்றன. இவை காலத்திற்கேற்றவாறு எளிமைப் படுத்தப்பட்டால் மக்களிடையே பழக்கப்படுத்த ஏதுவாக இருக்கும். ஆனால் எளிய சொற்களை சில அறிஞர்கள் “இழிசினர் வழக்கு” என்று ஏட்டில் ஏற்ற மறுப்பது தமிழையே தனதாக்கிக் கொண்டது போல் தோன்றுகிறது.

தமிழ் மொழியில் பேசும் பொழுதும் தமிழைப் பற்றி பேசும் பொழுதும் பெரும்பாலும் நாம் நயம் பாராட்டிச் செல்கின்றோம் அல்லது பழியைப் பிறர் மீது எரிந்து விட்டுச் செல்கின்றோமே தவிர காலத்திற்கேற்ப அதைப் பயன்படுத்த தேவையான முயற்சிகளை மெதுவாகத்தான் செய்து வருகிறோம். ஆனாலும் அங்கிங்கு மிச்ச சொச்சம் இருக்கும் பாமர மக்களைக் காணும் பொழுது ஏற்படும் நம்பிக்கையால் தமிழுக்கும் எதிர்காலம் உண்டு என்ற தெளிவு நெஞ்சில் பிறக்கிறது.

பாசத்திற்கு மட்டும் முக்கியத்துவம் இருந்த காலத்தில் தமிழைத் தாயாகப் பார்த்தோம். ஆனால் இன்றைக்கு பணமும் தேவை என்றாகி விட்டதல்லவா! அதனால் தமிழ் வளர தமிழைக் கொண்டு பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையும் சூழ்நிலையும் நம்மிடையே உருவாக வேண்டும். அதை நம்மால் மட்டுமே உருவாக்க முடியும். ஏனென்றால், தமிழ் மொழி, தமிழாசிரியருக்கோ அல்லது தனியொரு மனிதனுக்கோ சொந்தமானதன்று; ஒட்டு மொத்த தமிழருக்கும் சொந்தமானது. இதனை முதலில் தமிழ்ப் புலமை பேசுவோருக்கு தான் உணர்த்த வேண்டும் போலிருக்கிறது.

எளிமையான தீர்வு :-

தமிழுக்கென்று ஒரு செவ்வியல் தன்மை இருக்கின்றது. பேசும் பொழுது மொழியை நாம் தாறுமாறாக வளைக்கலாம். இருப்பினும் எழுதும் பொழுது நாம் பேச்சு வழக்கை பெரும்பாலும் பின்பற்றுவதில்லை; எழுத்து வடிவில் எல்லா தமிழனும் அதற்கான உண்மையான வடிவத்தை தான் பின்பற்றுவார்கள். இது தமிழினுடைய ஆகச் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு என்றும் சொல்லலாம்.

எந்த ஒரு கலை வடிவமும் மக்களிடையே பிரபலமடைய வேண்டுமெனில் அது அதன் நுகர்வோருக்குப் புரியும் படியாக அமைய வேண்டும். அது போன்றது தான் மொழியும். ஒருதலைச் சார்பின்றி அனைத்து தரப்பு மக்களாலும் எளிமையாக கையாளக் கூடிய பண்பு பெறுகின்ற பொழுதே மொழியானது பூரண வலிமை அடைகிறது. மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே இருந்தால் தான் மொழியின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும்.

மேட்டுக்குடியினர் மட்டுமே ரசித்த மேடைக் கச்சேரி ராகங்களை தனது ஆற்றலால் பாமர மக்களும் ரசிக்கும் படி கொண்டு சேர்த்த இசைஞானி இளையராஜா அவர்களைப் போல தமிழ்ப் புலமை பேசுவோரும் செந்தமிழுக்கு சேவை செய்ய வேண்டும். தமிழினுடைய பழம் பெருமைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அதன் பன்முகத்தன்மை நிலைத்து விடாது. அதற்கான முறையான கட்டமைப்புகளை மெருகேற்ற வேண்டும்.
“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்று பாரதியாரும் அவரது காலத்தில் இடித்துரைத்துள்ளார்.

தமிழைப் பக்தி மொழி, தத்துவ மொழி என்று அழைத்தால் மட்டும் போதாது. அதன் பாமரத் தன்மையும் பதிவு செய்யப்பட வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் தமிழை அறிவியல் ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் செம்மைப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.  பண்டைய தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்த பொழுது விளை பொருட்களுக்கு தமிழ் பெயர்களையே பயன்படுத்தியதால் வியாபாரத்தோடு தமிழும் பரவலாகியது. தமிழின் அறிவுப் புலத்தை விரிவுபடுத்தி விட்டால் நாமும் உலக அரங்கில் நமது சொந்தக் காலில் நடை போடலாம்.

ஒரு மகாகவியின் வாக்கு பொய்யாகாது என்று நம்புவதால், பாரதியின் கவிதையைக் கடன் வாங்கி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்த வசை எனக்கு எய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

================================
கட்டுரையாளர் :-
C. விஸ்வநாதன்
viswaciet@yahoo.com, 07829256213
================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக