மாண்புமிகு மகாபாரத மன்னன்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தில் இருந்து அவருக்குப் பல்வேறு சேவைகளும் பணிவிடைகளும் செய்த “உத்தவர்” தனக்கென ஏதும் கிருஷ்ணரிடம் கேட்டதில்லை. அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவதாரப் பணி நிறைவுறும் தருவாயில் உத்தவருக்கு தேவையான வரங்கள் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் கண்ணனின் செயல்கள் உத்தவருக்கு புரியாத புதிராகவே இருந்தன. அதனால் அவற்றிற்கான காரண காரியங்களை தெரிந்து கொள்ள விரும்பினார். அதன் தொடர்ச்சியை உரையாடல் வடிவில் இங்கு எழுதியுள்ளேன்.

“பெருமானே, நீ மற்றவர்களை வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழியோ வேறு. மகாபாரதத்தில் நீ ஏற்ற பாத்திரத்திலும் புரிந்த செயல்களிலும் எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. இது எனக்கு மட்டுமல்ல; உன்னைப் படித்த பலருக்கும் இக்கேள்விகள் எழலாம் என்று நம்புகிறேன். அதனால் அவற்றுக்கான காரண காரியங்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நிறைவேற்றுவாயா?” என்று கேட்டார் உத்தவர்.

விளக்கம் தருவதற்கு ஆமோதித்த கண்ணனைப் பார்த்து கேட்க ஆரம்பித்தார் உத்தவர்.

“கிருஷ்ணா, பாண்டவர்களின் உற்ற நண்பனான உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதையும் நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, தருமன் சூதாடச் செல்லும் முன்பு, ஒரு நல்ல நண்பனாக தருமனிடன் எடுத்துச் சொல்லி, ஏன் அதைத் தடுக்கவில்லை?

போகட்டும். தருமன் விளையாட ஆரம்பித்ததும் அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருக்கும் படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி புகட்டி இருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.

தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். அதோடு அவனை விட்டிருக்கலாம். அவன் தனது தம்பிகளைப் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.

திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஜெயித்தால் இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று துரியோதனன் சவால் விட்டான். உனது தெய்வீக சக்தியால், அப்பொழுதாவது பகடைக்காய்கள் தருமனுக்கு சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அப்பொழுதும் நீ ஒன்றும் செய்யவில்லை. திரௌபதியின் துகிலை மாற்றான் ஒருவன் உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது சென்று “துகில் தந்தேன்; திரௌபதி மானம் காத்தேன்” என்று மார்தட்டிக் கொள்கிறாய். குந்தியின் குலவதுவை முடியைப் பிடித்து மாற்றான் ஒருவன் இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு மிச்சப்பட்ட மானம் என்ன இருக்கிறது? நீ எதைக் காப்பாற்றியதாக பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன், நல்ல நண்பன்! இத்தனை நிலைகளிலும் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று. நம்மில் மகாபாரதம் படித்த சிலர் கேட்கும் இக்கேள்விகளை உத்தவர் அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார்.

பகவான் சிரித்த முகத்துடன், “உத்தவரே, விவேகம் உள்ளவனே வெல்ல வேண்டும் என்பது உலக நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால் தருமன் தோற்றான்.” என்றார்.

உத்தவர் ஏதும் புரியாது குழம்பி நிற்க, பகவான் தனது விளக்கத்தைத் தொடர்ந்தார்.

“துரியோதனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் ஏராளமான பணமும் ஆஸ்தியும் இருந்தன. ஆனாலும் அதனை வெளியில் சொல்லாமல் “பணயம் நான் வைக்கிறேன்; என் மாமா சகுனி பகடையை உருட்டி சூதாடுவார்” என்றான். அது அவனது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு “நானும் பணயம் வைக்கிறேன்; என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீ கிருஷ்ணன் பகடையை உருட்டுவான்” என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளை சகுனியால் பகடையில் போடத்தான் முடியுமா? அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால் போட முடியாதா?

போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான். அதையாவது மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். விதியின் வசத்தால் சூதாட ஒப்புக் கொண்ட விஷயம் நண்பன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. ஸ்ரீ கிருஷ்ணன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென்று என்னிடமே வேண்டிக் கொண்டான்.

என்னை யாராவது பிராத்தனையால் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன். தருமனின் சகோதரர்கள் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் தருமனை திட்டிக் கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே!

திரௌபதியின் சிகையை துச்சாதனன் பிடித்த பொழுது அவள் என்னைக் கூப்பிடவில்லை. அந்த கணத்தில் திரௌபதி அவளது பலத்தை நம்பியே சபையில் வாதங்கள் செய்து கொண்டிருந்தாள். நல்ல வேளை, துச்சாதனன் துகிலுரித்த பொழுதாவது தனது பலத்தால் போராடாமல் “அபயம் கிருஷ்ணா!” என்று குரல் கொடுத்தாள். பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்ற அப்பொழுது தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. உடனே அவள் மானம் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது எந்தத் தவறும் இல்லை.” என்று விளக்கம் கொடுத்தார் கிருஷ்ணர்.

“அருமையான விளக்கம் கண்ணா, அசந்து விட்டேன்! ஆனால் உன்னிடம் இன்னொரு கேள்வி கேட்கலாமா” என்றார் உத்தவர்.

“கேள்” என்றார் கண்ணன்.

“உன் விளக்கத்திலிருந்து பார்த்தால், நாங்கள் கூப்பிட்டால் தான் நீ வருவாயா? நீதியை நிலை நாட்ட நீயாக வந்து உன் அடியார்களுக்கு உதவ மாட்டாயா?” எனக் கேட்டார் உத்தவர்.

புன்னகைத்தான் கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டு நிற்பவன். அது தான் தெய்வ தர்மம்.” என்றார் கண்ணன்.

“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நாங்கள் செய்யும் தீமைகளை எல்லாம் நீ அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே? “ என்றார் உத்தவர்.

“உத்தவரே, நான் கூறிய விளக்கத்தின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் பொழுது, உங்களால் தவறுகளையோ தீய செயல்களையோ நிச்சயமாக செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் எப்போதும் எல்லோருடனும் சாட்சி பூதமாக இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா!” என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

எத்தனை அழகான தத்துவம்! எவ்வளவு உயர்ந்த சத்தியம்! பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை ஆபத்தில் இருந்து காக்க அவரை உதவிக்கு அழைக்கும் ஒரு உணர்வு தானே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும் போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்! அதனை மறந்து விட்டு எப்படி செயலாற்ற முடியும்! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விளக்கத்தில் உத்தவர் வாயடைத்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.


இந்த தத்துவத்தைத் தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். கண்ணன் அர்ஜுனனுக்காக தேரைத் செலுத்தி வழி நடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காக போராடவில்லை. அது தான் பகவானின் மேன்மை!

- C. விஸ்வநாதன்


Courtesy: சுப்பையா வாத்தியார் வகுப்பறை

சருகும் மண்ணாங்கட்டியும்


மலையூர் என்ற கிராமத்தில் மண்ணாங்கட்டியும் இலைச் சருகும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களது ஒற்றுமையைக் கண்டு ஊரோர் அனைவரும் பிரமிப்பு அடைந்தனர். இவர்களது உடல் எடை வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தில் மிகுந்த ஒற்றுமை கொண்டுள்ளனர். காலையில் இருந்து மாலை வரை மரத்தடியில் அமர்ந்து பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பர். இரவு வரும் முன்னர் அவரவர் தங்களது வீட்டிற்குச் சென்று உறங்கிடுவர். இப்படியே இவர்களது பொழுது வழக்கமாக சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த கிராமத்தில் வயது முதிர்ந்தவர்கள் சிலர் காசிக்குப் பயணம் செல்வதை மரத்தடியில் பேசிக் கொண்டிருந்த மண்ணாங்கட்டியும் சருகும் கவனித்தன. உடனே சருகு மண்ணாங்கட்டியிடம் "ஏன் அவர்கள் காசிக்கு செல்கிறார்கள் ?" என்று கேட்டது.

"வாழ்க்கையில் தங்களது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னர் மனிதர்கள் தங்களது இறுதிக்காலத்தில் காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி தங்களது பாவங்களை நீக்கிக் கொள்வார்கள். அதோடு தாங்கள் மறுபிறவி இல்லாத வீடுபேறு நிலை அடைய வேண்டுமாறு சாமியிடம் வேண்டிக் கொள்வார்கள்." என்று மண்ணாங்கட்டி கூறியது.

"நாமும் வாழ்ந்து முடித்தவர்கள் தானே! அப்படியானால் நீயும் நானும் காசிக்குச் சென்று நமது பாவங்களை நீக்கி விட்டு வரலாமா ? " என்று சருகு கேட்டது.

இதைக் கேட்ட மண்ணாங்கட்டி, "சரி, இங்கு வெட்டியாக அமர்ந்து கொண்டு இருப்பதற்குப் பதிலாக காசிக்கு சென்று புண்ணியமாவது அடையலாம்!" என்று சம்மதம் தெரிவித்தது.

யாரிடமும் யோசனை கேட்காமல் இருவரும் பிரயாணத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் காசிக்குச் செல்வது ஊரில் யாருக்கும் தெரியாது. பசிக்கும் பொழுது கிடைத்த உணவுகளை உண்டு பசியாறினர்.

இரண்டு நாட்கள் கடந்ததில் பாதி தொலைவு கடந்தது. அப்பொழுது காற்று வேகமாக வீசியது. மண்ணாங்கட்டியால் காற்றின் வேகத்தைத் தாங்கி நிற்க முடிந்தது. ஆனால் இலைச் சருகு காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் அலைமோதிக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட மண்ணாங்கட்டி சருகின் மேல் அமர்ந்து கொண்டது. அதனால் இருவரும் காற்றில் பறக்காமல் தப்பித்துக் கொண்டனர். ஒரு வழியாக காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை வந்தது. தன்னைச் சரியான நேரத்தில் காப்பாற்றிய மண்ணாங்கட்டிக்கு நன்றி சொல்லி விட்டு தங்களது பிரயாணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.

சிறிது தூரம் கடந்ததும் பெரும் மழை பொழிய ஆரம்பித்தது. மழைக்கு ஒதுங்கி நிற்க அங்கு ஒரு இடம் கூட இல்லை. ஒரே ஒரு மரமும் சிதைந்த கூரைவீடும் மட்டுமே இருந்தன.

மழை பெய்யும் பொழுது மரத்தடியில் ஒதுங்கக் கூடாது என்று சருகு அறிவுறுத்தியது. அதனால் சிதைந்த கூரை வீட்டுக்குள் சென்று ஒதுங்கின. ஆனால் வீடு முழுவதும் மழைநீர் ஒழுகிக் கொண்டு இருந்தது. இருவரும் சற்று உயரமான இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். இருப்பினும் கூரையில் இருந்து ஒழுகும் நீரை மண்ணாங்கட்டியால் சமாளிக்க முடியவில்லை. உடனே மண்ணாங்கட்டியின் மேல் சருகு அமர்ந்து கொண்டது. இருவரும் தப்பித்துக் கொண்டனர். இப்பொழுது மண்ணாங்கட்டி சருகுக்கு நன்றி சொன்னது.

இறுதியாக இருவரும் காசி வந்தடைந்தனர். அங்கே மனிதர்கள், கங்கை நதியில் மூழ்கி எழுந்து பாவங்கள் நீக்குவதை மண்ணாங்கட்டியும் சருகும் பார்த்தனர். தாங்களும் கங்கையில் மூழ்கி எழுவதற்கு படித்துறையில் இறங்கினர்.

அப்பொழுது தான் அவர்களுக்குத் தங்களது அறியாமை நினைவிற்கு வந்தது. காசிக்கு வரும் வழியில் காற்றிலும் மழையிலும் பட்ட அனுபவம் புரிந்தது.

காசியில் கங்கை நதி தனது இருகரைகளை தொட்டுக் கொண்டு மிகுந்த வேகத்துடன் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது.

கங்கை நதியில் மண்ணாங்கட்டி இறங்கினால் தண்ணீரில் கரைந்து விடும். சருகு இறங்கினால் வெள்ளத்தின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடித் செல்லப்பட்டு விடும். இதை உணர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் நொந்து கொண்டனர். பின்னர் இருவரும் சாமியை மட்டும் தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்பினர்.

கதை உணர்த்தும் நீதிகள் :-
**************************************
1. நட்பு என்பது நண்பர்களில் ஒருவருக்கு ஆபத்து நேரும் பொழுது இன்னொருவர் சென்று தகுந்த நேரத்தில் உதவுவதாகும்.

2. ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் முன்பு அதில் அனுபவம் வாய்ந்த நபர்களிடம் இலக்கைப் பற்றி ஆலோசனை மேற்கொண்ட பின்னர் அதற்கு ஏற்ற நபர்களைக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

3. நமது இலக்கு சரி தானா? அதை நம்மால் அடைய முடியுமா? என்று அறிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்பு அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

- C. விஸ்வநாதன்

அக்கா 'குருவி'


அக்கா குருவி
அப்போ எங்களுடைய ஜாகை ரயில்வே வீட்டில் ஸ்டேஷனுக்கு மேலே உள்ள மாடியில். அந்தக்கால மோஸ்த்தரில் ஜன்னல் அதற்கேற்ற கண்ணாடிக்கதவுக ளும்,எத்தனை டிகிரி சூடேற்றினாலும் இளகாத இரும்புக் கொண்டிகளையும் கொண் டது. இழுத்து ஜன்னல் கதவைச் சார்த்துவது என்பது, அத்தனை சுளுவில் நடந்துவிடாது. அந்தக் கண்ணாடிக்கதவுகளூடே ரயில் செல்வதைப் பார்க்கப் பிடிக்கும். சத்தம் ஏதும் கேட் காமல் அதிர்வோடு கூடிய ரயில் ஊர்ந்துசெல்வது தெளிவாகத் தெரியும்.

வீட்டிற்கு விட்டம் என்பது மூன்று ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருக்கும், அந்த உயரத்திலிருந்து இரு பக்க சுவர்களை இணைக்க தண்டவாளங்களை வைத்து ‘கர்டர்’ போட்டிருப்பார்கள். அந்தக் ’கர்டர்’களிலிருந்து பெரிய ஃபேன் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். சுவிட்சைப் போட்டால் சுனாமியே வந்தது போல சுழன்றியடிக்கும் காற்று. ரெகுலேட்டர் வகையறாவெல்லாம் பழுப்பேறிப்போய் அதன் குமிழை திருக்குவதற்குள் காற்று நம்மை அடித்துக் கொண்டுபோய்விடும். அதனால் எப்போதாவது வெய்யில் அதிகம் இருக்கும் நாட்களில் , வீடு முழுக்க வெய்யிலின் தாக்கம் இருக்கும் போது மட்டும் அதைச் சுழலவிடுவது வழக்கம்.

அன்று காற்று துளிக்கூட அடிக்கவில்லை, வெய்யில் தாங்கவியலாமல் அடித்துக் கொண்டிருந்தது. வெக்கை பரவி வீட்டுக்குள் இருக்கமுடியாமல் போனது. ‘அந்த ஃபேன் சுவிட்சைப் போட்டு விட்றா’ என்றாள் அக்கா. வேக மாக ஏறிப்போட்டுவிட்டேன்.

அப்போது பார்த்து எங்கி ருந்தோ ஒரு சிட்டுக்குருவி வீட்டிற் குள் பறந்து வந்தது. ‘கீச் கீச்’ என்று கத்தியபடியே இங்குமங்கும் பறந்துகொண்டிருந்த குருவி சுழன்று கொண்டிருந்த ஃபேனின் இறக்கையில் அடிபட்டு பொத்தென விழுந்தது, ‘யக்கா யக்கா’ குருவி செத்துப்போச்சு’ என்று கத்தினேன். ஓடிவந்தவள், ‘ச்சீ சாகவெல்லாம் இல்லை, அதுக்குத்தான் இந்த ஃபேனைப் போடவே கூடாது, என்றாள். வெள்ளைப்பூண்டு போட்டு வைக்கும் கூடையிலிருந்த பூண்டுகளை கொட்டிவிட்டு குருவியை அதற்குள் வைத்து மேலே இருந்த கம்பிகளை கீழிறக்கி மூடினாள்.

பின்னர், மஞ்சளை அரைத்துக்கொண்டுவந்து, கம்பிக் கூடையின் ஓட்டைகள் வழியாக அந்தக் குருவியின் இறக்கையை சற்றே தூக்கிவிட்டு மஞ்சளைத் தடவிவிட்டாள். சிறிது நேரத்தில் மயங்கிப்போய், கூண்டின் அடுத்த பக்கத்தில் சாய்ந்து கிடந்தது. கொஞ்ச நேரம் கழித்து கைப்பிடி அளவு சோறை ஒரு கொட்டாங்குச்சியில் வைத்து மேல் மூடியை குருவி அறியாது திறந்து உள்ளே வைத்து விட்டாள். அசையாது படுத்துக்கிடந்த அந்தக்குருவி அரவம் கேட்டதும் கால்களை உதைத்து முன்வந்து பார்த்தது. பின்னர் மெதுவாக ஒன்றிரண்டு பருக்கைகளை கொத்தித்தின்ன முயன்றது.

இரண்டு நாள் கழிந்தது. தரையில் வைத்திருந்த கூடையை மெதுவாக எடுத்து மரப்பலகையில் இருந்த ஆணி யில் தொங்கவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆறியது காயம். கூண்டுக்குள்ளேயே கீச் கீச் என்று சில சமயங்களில் கத்தும். அதன் உடலிலும் இறக்கை யிலும் அந்த மஞ்சள் கறை இன்னும் போகவில்லை. சில சமயங்களில் மூக்கை வைத்து நீவுகிறேன் பேர்வழி என்று காயத்தில் பட்டுவிட்டால் சிறிது நேரம் கத்தும். பின்னர் அமைதியாகிவிடும்.

‘யக்கா இந்தக்குருவிய நாமளே வளப்பமா’ என்று கேட்டால் ‘ போடா அதெல்லாம் எப்பவும் பறந்துக்கிட்டே இருக்கிறது, இப்டி கூண்டுலல் லாம் அடைச்சி வெக்கக்கூடாது, எதோ அடிபட்டுருச்சேன்னு தான் வெச்சிருக்கேன். அப்புறம்? ‘சரியானவொடனே கதவைத் திறந்து விட்டுருவேன்’ என்பாள் அக்கா.

நான் அருகில் சென்றாலே படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு தன்னைப்பிடிக்கத்தான் வருகிறான் என நினைத்து கூண்டின் அடுத்த பகுதியில் போய் ஒண்டிக்கொள்ளும். பள்ளிக்
கூடம் போவதற்கு முன்பும், வீடு வந்து சேர்ந்தபின்பும் அதைப் போய்ப்பார்க்காமல் எனக்கு உறக்கமே வருவதில்லை. ஒரு நாள் வீடு திரும்பி வந்த போது கூண்டுக்குள் அந்தக்குருவியைக் காணவில்லை. பயந்துபோய் அக்காவிடம் சென்றேன் இதைத் தான் கேட்க வந்திருக்கிறான் என ஊகித்தபடி ‘என்ன குருவி தானே, மூடியைத்திறந்து பறக்கவிட்டுட்டேன்,காயம் தான் ஆறிருச் சில்ல’ என்றாள். எனக்கு ஒன்றுமே சொல்லத்தோணவில்லை.

அவ்வப்போது பக்கத்திலி ருக்கும் மரங்களில் அந்தக்குருவி தென்படுகிறதா என்று பார்த்துப்பார்த்து ஏமாந்து போவேன், அப்போதெல்லாம் தூரத்தி லிருந்து என்னைப்பார்த்து சிரித்துக்கொள்வாள் என் அக்கா.


நன்றி :   தி இந்து (தமிழ்) நாளிதழ்

அலையடிக்கும் சமுத்திரம்


கடல்தாயின் பிள்ளைகள் - ஒருநாள்
கறிச்சோறு கேட்டு அவளைக் குடைந்தன
என்ன கறி இருக்கும் என ஏக்கத்துடன்
பார்க்க வந்தாள் தன் கரையை...

கறி கேட்டுத் துடித்தவை எல்லாம்
கறியாகிக் கிடந்ததை பார்த்தழுதாள்
அவள் அழுது வைத்த கண்ணீரை
அழுத்தத்துடன் தூக்கி எறிந்தாள்

அது வாரிக் குடித்தது மனித ஜாதியை
அவள் வாட்டத்தில் விட்ட சாபம் பலித்தது
இழுத்து வந்த சதைகளை எல்லாம்
இரையாக எடுத்து ஊட்டி விட்டாள்

உண்டு மிச்சத்தை உப்புக்கண்டம் போட்டு
உலர்த்த ஒதுக்கினாள் தன் கரையில்...
வெற்று உடலென்று விம்மி அழுத சனம்
வேதனைக் கண்ணீரை வீசியது கடலில்...

**C. விஸ்வநாதன்

இந்தியர்களின் கனிவான கவனத்திற்கு

தேவைக்கு மிஞ்சிய வசதிகள் நம்மிடம்
தேர்ச்சி பெறாமலே வாழ்க்கையில் தவிக்கிறோம்.

நடிகர்கள் இன்று நடமாடும் தெய்வங்கள்
நடந்தவர்கள் நவீன கால அருங்காட்சியகங்கள்

மரப்பாச்சி பொம்மைக்கு மாராப்பு சுற்றினோம்
மனித உறுப்புகளையே மலிவாக விற்கிறோம்

கடவுளுக்குப் பயந்து கை தொழுத காலங்களில்
கருணை மகள் கோயில் கவலைகளை தீர்த்தது

கணினிகளை மீட்டும் தகவல் தொடர்பில்
காசு பார்க்கும் வித்தையே கடவுளானது

விதையில்லா கனியிலும் கருவில்லா முட்டையிலும்
விலையில்லா மனிதநேயம் விடைபெற்றுப் போனது

கூட்டமாக வாழ்ந்தவர்கள் நாம் - இன்று
கூண்டுக்குள்ளே சுதந்திரம் தேட எங்கு கற்றோம் ?

மேற்கத்திய நகல்களாக மீசை இழந்து நிற்பது
புலியைப் பார்த்து சூடு போட்ட பூனை போன்றது.

பிழைகள் வருமுன் காப்பது அவர்கள் பண்பாடு
பிழைகள் வராமல் தடுப்பதே நம் மூத்தகுடி ஏற்பாடு

மாற்றம் பெற்றால் தான் பண்பாடு மெருகேறும்
மனிதநேயம் வறண்டால் அமளியில் திண்டாடும்

என்ன நடந்தாலும் இது இயல்பு என்று
எண்ணுவது அல்ல நம் பண்பாடு

எதிரிக்கு இன்னல் நேர்ந்தாலும் - இதயம்
பதறி உதவுவதே அதன் சும்மாடு!

மக்கும் அறங்களின் மறுபிறப்பும் நம் கையில்
விக்கல் வேதனைக்கு வைத்தியமும் நம்மிடத்தில்

ஏனென்றால்,
பெற்றோர் வழி நடத்தும் பழுத்த தலைமுறையும்
பிள்ளைகள் வழி நடக்கும் பிஞ்சு தலைமுறையும்
இது தான்!

**C. விஸ்வநாதன்

எதிரிகளுடன் யுத்தம் செய்கையில்

யுத்தம்...
போர்க் கருவிகளின்
பொழுது மிளிர்கிற காலம்!

வேகமும் விவேகமும் இணைந்தால்
வெற்றி தரும் சுபயோகம் – இங்கு
வீரம் மட்டுமே வெல்வதில்லை
விவேகமும் இருந்தால் தோற்பதில்லை

போர்க் களத்தில் தற்புகழ்ச்சி
வெற்றிக் களிப்பில் பெருமகிழ்ச்சி
தோற்ற உடனே மனத்தளர்ச்சி
இம்மூன்றும் தேக்கத்தின் தொடர்ச்சி!

தேவைக்கு மிஞ்சிய பொருளும்
திறமைக்கு மீறிய புகழும்
தேனாறு போல இனிக்கும்
தித்திப்பில் மனதைக் கவிழ்க்கும்

சரிந்த இடத்தை விட்டு விட்டு
சறுக்கிய இடத்தை சரி செய்தால்
சரித்திர வெற்றிகள் பதிவாகும்
தரித்திர நோய்கள் தகர்ந்தோடும்

எழுந்து நடந்தால் எல்லாம் உறவு
விழுந்து படுத்தால் பாயும் பகை
ஊரான் முதலல்ல வெற்றி – அது
உண்மைக்குக் கிடைக்கும் வெள்ளாமை!

**C. விஸ்வநாதன்

படி தாண்டினாலும் நீ பத்தினியே!





மோகப்படும் பொழு தெல்லாம்
முகர்ந்து உன்னை எறிவதற்கு
போகப் பொருளாகவே பார்க்கும்
புத்தியை யார் கொடுத்தது?

தோள் சீலைப் போராட்டம்
தொடங்கிய உன் மண்ணில்
தொந்தரவான ஆடை நேர்த்திக்கு
முற்றுப் புள்ளி எப்போது?

குட்டும் பொழுது குனிந்து
உன் கோபத்தை அடக்காதே!
வேதனை, வலி, வெறியினை
வேட்டியாய் வரிந்து கட்டி எழு!

அப்பா, கணவன், மகனென்று
ஆரம்ப வாழ்க்கை முதலே
ஆணினைச் சார்ந்து வாழும்
அடிமை சங்கல்பம் அடங்கட்டும்!

படிதாண்டா பத்தினி என்பது
பாழ்படுத்தும் வஞ்சப் புகழ்ச்சி
பாரதியின் ரத்தம் இருந்தால்
படி தாண்டினாலும் நீ பத்தினியே!

செடியினைச் சார்ந்து நிற்கும்
மலராய் இருந்தது போதும்
இனிமேல் சுதந்திரப் பறவையுடன்
உன் சுதி சேர்ந்து பாடட்டும்!

**C. விஸ்வநாதன்

ஓட்டப்பந்தயம்


வானம் வரையும் ஓடுகிறேன்
வாழ்க்கைப் புதிரின் விடைதேடி
வாசல் தாண்டி வந்து பின்னும்
வாழ்வின் கேள்வி விளங்கவில்லை

தேடித் தேடித் தாண்டுகிறேன்
தேடல் இன்னும் ஓயவில்லை
காயம் பட்டும் ஓயாமல்
காயும் என்று தேற்றுகிறேன்

சாரல் விட்ட நீரெல்லாம்
சமுத்திரத்தில் தங்கி விட்டால்
வேருக்கு நீர் வார்க்க
விளைமேகம் வருவதெங்கே?

தேடல் என்பது நின்று விட்டால்
தேங்கிய குட்டை நீர் போன்றது
நதியின் தேடல் நீளமானதால்
நாளும் புதுமை காண்கிறது.

தேடல் என்பதே வாழ்க்கையானால்
எதைத் தான் தேடி ஓடுகின்றோம்?
தேடும் பரிசு தெரிந்து விட்டால்
தேவை ஒரு நாள் தீர்ந்திடுமோ!

காலம் என்னும் ஓட்டத்தில்
கரைகள் என்பது கிடையாது
வானம் கூட விலக்கின்றி
வரம்பு தேடியே விரிகின்றது

இருக்கும் வரை வாழ்ந்து விடு
இருப்பதைக் கொண்டு லயித்து விடு
சிறப்பு என்பது சிற்பியின் கையில்
செதுக்க செதுக்க செம்மையாகும்.

உச்சத்தின் அளவு நிரந்தரமல்ல
ஒவ்வொரு நாளும் உயர்வடையும்
சத்தியம் கொண்டு போராடு
சரித்திர வெற்றி பதிவாகும்.

**C. விஸ்வநாதன்

கல்யாணக் கனா கண்டேன் தோழி!


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
பல்லவி

பொட்டப்புள்ள நெஞ்சுக்குள்ள எத்தனையோ ஆச!
அத்தனைக்கும் அர்த்தம் வந்து உள்ளங்கையில் பேச!
உறங்காத நாளுக்கெல்லாம் உசுரூட்ட வந்தானே!
ஊரெல்லாம் வாழ்த்துச் சொல்லும் உறவாக வந்தானே!
என் ரெட்ட ஜட சேத்து ஒரு ஒத்த ஜட போட
ஒரு நேரங்காலம் வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!

சரணம்

பத்து வித ஒத்துமையும் ஒத்துழைப்பு தந்துருச்சு
தங்கத் தாலி நீ முடிக்க தடையே இல்ல
வெத்தலையும் பாக்கும் போட்டு வெறுநாக்கு செவந்தாச்சு
விட்ட குறை தொட்ட குறை எதுவுமில்ல
உன் நெஞ்சுக் குழி மேல என் நெத்தி வந்து சேர
நல்ல நேரங்காலம் வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!      (பொட்டப்புள்ள...)

மொத்த சொந்தம் ஒத்துமையா, சுத்தி நின்னு வாழ்த்து சொல்ல,
தங்கத் தாலி நீ முடிச்சு நெஞ்சில் நிப்பாயே!
சுத்தி வந்து நெத்தியில குங்குமத்த நீ நிறைக்க,
சுண்டு வெரல் கைபுடிச்சு சுத்தி வருவோமே!
ஸ்ரீராமன் சீதை போல, மணமாலை மாத்தும் வேள,
நல்ல நேரம் கூடி வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!       (பொட்டப்புள்ள...)

**C. விஸ்வநாதன்