வரவேற்புரை

இனிய வணக்கங்கள்!

தேனி மாவட்டம் இயற்கை அழகுகளால் எழிலூட்டம் பெற்றுள்ள இதமான பகுதியாகும். கோடை வெயிலைக் குளிர்விக்கும் மலைப் பிரதேசங்களும் குளு குளுவென வீசும் தென்றல் காற்றும் இப்பகுதியை எப்போதும் இதமாக வைத்திருக்கும். தென்மேற்கு பருவக்காற்று தேடி வந்து தாலாட்டும். வடகிழக்கு பருவக்காற்று வஞ்சகமின்றி வளம் சேர்க்கும். நாலா புறமும் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு நம்மை பாதுகாப்புப் பெட்டகத்திற்குள் வைத்திருப்பது போன்று பத்திரமாக வைத்திருக்கும். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இயற்கை சுற்றுலாப் பகுதிகளில் ஏராளமானவை இங்கு அமைந்துள்ளன.

வானம் பார்த்த வைகையின் வரலாறு இங்கிருந்து தான் எழுதப்படுகிறது. ஆற்றைத் திருப்பி விட்டு வரலாற்றையே திரும்பிப் பார்க்க வைத்த கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்கள் ஏற்படுத்திய முல்லைப் பெரியாறு இந்த மாவட்டத்தின் முகவரிக்கு ஒரு முக்கியச் சான்று.

வேளாண்மையே முக்கியத் தொழில் என்பதால் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயிலின் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. பருத்தி சாகுபடி அதிகமாக இருப்பதால் நெசவுத் தொழிற்சாலைகளும் நிறையவே உள்ளன. உலகிலேயே இங்குள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் தான் முப்போகமும் திராட்சை விளைகிறது.

தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என அழைக்கப்படும் போடிநாயக்கனூர் இம் மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகும். இந்த மாவட்டம் முழுவதிலும் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களை பன்னாட்டு மேடை வரை எடுத்துச் செல்லும் விற்பனைத் தளமாக அதன் நிர்வாகத் தலைநகரம் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே முதன் முறையாக ஆட்சி நிர்வாகத்திற்கான பன்னாட்டு தரச் சான்று பெற்றுள்ள முதல் மாவட்டம் தேனி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைத்துறையின் உச்சம் தாண்டி தேசிய அளவிலும் உலக அரங்கிலும் தங்களது சாதனைப் பயணத்தை சாத்தியப்படுத்திய பல்வேறு கலைஞர்கள் தேனி மண்ணில் தாலாட்டு கேட்டவர்கள். தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பேற்ற பி.டி.ராஜன், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆகிய நால்வரும் தேனி மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னராட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்களின் வரலாற்றை அறிய உதவிய செப்பேடுகள் இம்மாவட்டத்தின் சின்னமனூர் பகுதியிலிருந்து கிடைத்ததால் இனிவரும் காலங்களில் தேனி மாவட்டத்தை விட்டு விட்டு தமிழக வரலாற்றை திருப்பிப் பார்க்க இயலாது என்றும் கூறலாம்.

இப்படிப்பட்ட இன்றியமையாப் புகழ்பெற்ற தேனி மாவட்டத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு “தேனித் தென்றல்” இணைய வலைப்பதிவை தொடங்கி நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தேனித் தென்றல் தன்னை நாடி வரும் உள்ளங்களை வறட்சி அடையச் செய்யாமல் வருடி விடும் என்று நம்புகிறேன். எனவே தேனித் தென்றலின் தெவிட்டாத இனிமையை சுவைக்க உங்களது பொன்னான ஆதரவுகளை சிந்தாமல் சிதறாமல் நாள்தோறும் வழங்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வலைப்பதிவின் ஆசிரியரான நான் உருவாக்கும் கலைப் படைப்புகளும் தெரிந்து கொண்ட கலைப் படைப்புகளும் இவ்வலைப்பதிவில் வெளியிடப்படுகிறது. இவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுவதில்லை. இவ்வலைப்பதிவில் வெளியிடப்படும் கலைப் படைப்புகளை அதன் ஆசிரியரின் ஒப்புதல் பெற்றே பிறர் பயன்படுத்த வேண்டும். ஆசிரியரின் ஒப்புதலின்றி கலைப் படைப்புகளை பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியிலான அணுகுமுறைகளை செயல்படுத்த ஆசிரியருக்கு முழு உரிமை உள்ளது.

தங்களன்புள்ள,
C. விஸ்வநாதன்

2 கருத்துகள்:

  1. உங்கள் சிறப்பான பணிக்கு என்றும் ஆதரவு உண்டு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எனது நன்றிகள்! தேனித் தென்றல் தங்களை அன்போடு வரவேற்கிறது!

      நீக்கு