சாஸ்திரம் கூறும் நல்ல பழக்கங்கள் - தொகுதி 01


1. குளிக்கும்போது நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும்.

2. தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது. தலையணை மீது உட்காரவும் கூடாது.

3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது.

4. கைவிரலை நீக்கியும் கையை உதறியும் சாப்பிடக்கூடாது.

5, சாப்பாட்டை உருட்டிச் சாப்பிடக்கூடாது.

6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.

7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ கையையோ நக்கக்கூடாது.

8. இரவில் அடுப்பின் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிட வேண்டும்.

9. வாய்கொப்பளித்தோ எச்சிலையோ வலது பக்கம் துப்பக்கூடாது.

10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது.

11. தாமிரப்பாத்திரத்திலும் வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது.

12. ஆமணக்கு இலையிலும் பனை ஓலைக்கூடையிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது. மூங்கில் கூடை தான் பூஜை பொருட்களைப் பாதுகாக்க ஆகச்சிறந்தது.

13. கடும்வெயில், மயானப்புகை, தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல், ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்.

14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

** இனிதே தொடரும் **

எந்த இடத்தில் எப்படி நீராட வேண்டும்

ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். 

க்ரியா ஸ்நானம்,
காம்ய ஸ்நானம்,
நைமித்திக ஸ்நானம்,
க்ரியாங்க ஸ்நானம் 
மலாபாஹர்ஷண ஸ்நானம், 
நித்ய ஸ்நானம் 
ஆகியவை முக்கிய ஸ்நானங்களாகும்.

க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில க்ஷேத்ரத்தில்  இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது,  வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.

நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக் கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை. முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். 

சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது,
பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.

1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.

2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.

3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.

4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும்  ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.

5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக  மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை ம்ருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக்  கூறப்படுகிறது.

இவையெல்லாவற்றையும் விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.

""இது பெண்களுக்கு மட்டும்"" 

விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு ப்ரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக் கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும் பொழுதும்,

"கங்கே ச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு"

என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.

இறைவன் கணக்கு


ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் அழகு, அரசு என்று இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம். பெருத்த மழை வேறு! அப்போது அங்கே அன்பு என்று மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

அன்பு, "நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று அவர்களிடம் கேட்டார்.

"அதெற்கென்ன?....தாராளமாய்த் தங்குங்கள்!'' என்றனர் அழகும் அரசும்.

சிறிது நேரம் கழித்து, "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?'' என்று கேட்டார் அன்பு.

அதற்கு அழகு, "என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன'' என்றார்.

அரசு, "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன. ஆக எட்டு ரொட்டிகள்! இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக் கொள்ள முடியும்?'' என்றார்.

அதற்கு அன்பு, "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் போடலாம். இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும். நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.'' என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது.

அன்பு கிளம்பும்போது, "உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு, எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, "நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்!'' எனச் சொல்லிவிட்டு விடை பெற்றார். 

மூன்று ரொட்டிகளைக் கொடுத்த அரசு, "அந்தத் தங்கக் காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம்!'' என்றார்.

அழகு இதற்கு சம்மதிக்கவில்லை. "மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்!'' என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்த அரசு இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. "என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும் நான் பங்கிடச் சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது! என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.

சுமுகமான முடிவு ஏற்படவில்லை. விஷயம் பஞ்சாயத்துக்குச் சென்றது. பஞ்சாயத்துத் தலைவருக்கு யார் சொல்வது சரி என்று புரியவில்லை. மறுநாள் தீர்ப்பு சொல்வதாக அறிவித்து விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்கினார். அவரது கனவில் கடவுள் காட்சி தந்து தீர்ப்பும் விளக்கமும் அளித்தார். இது பஞ்சாயத்துத் தலைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் பஞ்சாயத்து கூடியது. தலைவர் இருவரையும் அழைத்தார். 

மூன்று ரொட்டிகள் அளித்த அரசுவிற்கு ஒரு காசும், ஐந்து ரொட்டிகளை அளித்த அழகுவிற்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசை வாங்கிக் கொண்ட அரசு, "இது அநியாயம்! அழகு எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக்கொண்டார்.'' என்றார்.

தலைவர், "நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது! அழகு கொடுத்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டு துண்டுகள்தான் கிடைத்தது! ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டுதான். அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்! ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்!'' என்றார்.

நீதி: கடவுளின் கணக்கு துல்லியமானது. தகுதியானதே நமக்குக் கிடைக்கும்!

ஹோமம் - சமித்துகளின் பலன்கள்

ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப்  பிடித்தது

அருகம் புல் : விநாயகருக்கும் ராகுவுக்கும் பிடித்தது

மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி-நாசினி.

தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது

மாதுளை மரம் : அழகான வடிவமும் வசீகரமும் கிடைக்கும்.

அத்திக் குச்சி : மக்கட்பேறு.

நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை

அரசமர குச்சி : அரசாங்க நன்மை

கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி, சூனியம் அகலும் .

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.

புரசுமர குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி

வில்வக் குச்சி : செல்வம் சேரும்

அருகம்புல் : விஷபயம் நீங்கும்.

ஆலமர குச்சி : புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்.


வில்வம் :  வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி :  துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

சோமவல்லிக் கொடி :  கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

பலாசு சமித்து :  இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செய்து அதனால் ஸ்நபனம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

அரசு சமித்து :  அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

வெள்ளை எருக்கு :  இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

செம்மர சமித்து :  இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

நாயுருவி சமித்து :  இது புது கிரக சமித்தாகும். இதனால் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.

அத்தி சமித்து :  இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

வன்னி சமித்து :  வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னி பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மத்தை தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதிகளும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

தர்ப்பை சமித்து :  கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

அருகம்புல் :  இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

கரும்பு :  கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆலசமித்து :  இது ம்ருத்யுஞ்ஜய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

எள் :  ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

புங்க மரம் :  இதன் சமித்து வெற்றியைத் தரும்.

இலந்தை :  இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

தேவதாரு :  இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

வல்லாரைக் கொடி :  இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

சந்தன மரம் :  இதன் சமித்தால் ஹோமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை மரம் :  இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ :  இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

பூவரசு :  இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித்து நீக்கும். அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

நவதானியங்கள் :  அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

மஞ்சள் :  முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதனுடன் கல்வியும் செல்வமும் தரும்.

உலகே மாயம்

காட்டின் நடுவே சிறு கோயில். அதில் ஒரு குரு. அவர் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தார். மக்களிடையே செல்வதோ, அறிவுரை-போதனை என்று தடபுடல் செய்வதோ கிடையாது.

ஒரு சமயம் அவ்வழியாகப் புத்தபிட்சுக்கள் சிலர் வந்தனர். அவர்களின் முகப்பொலிவே, அவர்கள், மிகப் பெரிய படிப்பாளிகள் என்பதை உணர்த்தியது. அவர்கள் குருவிடம் உபதேசம் பெறலாயினர்.

வந்த சிஷ்யர்கள் குருவிடம், ''உங்கள் பெயர் அறிந்து கொள்ளலாமா!!'' என்று கேட்டனர்.

''என் பெயர் ஹோகன்!'' என்றார் குரு.

''ஞான குரு ஹோகன் தாங்களா?''

''இல்லை. நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்குக் கிடையாது!'' என்றார் குரு.

உணவு முடிந்து இரவு அங்கேயே தங்கினர் பிட்சுக்கள். இரவு குளிராய் இருக்கவே குளிர்காயத் தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். பேச்சு மெல்ல மெல்ல மதம் சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது. அதுவே விவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் விவாதம் சூடுபிடித்தது. உரத்த குரலில் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, தூக்கம் கலைந்த ஹோகன், மெல்ல எழுந்து வந்து அவர்கள் நடுவில் அமர்ந்தார்.

பிறகு விவாதம் மனிதனின் அகவாழ்வு-புறவாழ்வு பற்றித் திரும்பியது.

''மனிதனின் புறவாழ்வே மாயம். அகவாழ்வு தான் மரணத்துக்குப் பின்பும் தொடரும். எனவே அதுதான் ஸாஸ்வதம் (என்றைக்கும் நிலைத்திருப்பது).'' என்றார் ஒருவர்.

''அகம் என்பதே வெறும் எண்ணங்களின் குவியல் தானே! கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் உதவாது. ஆகவே அகம் என்பது மாயை. தோன்றும் உலகம், தொடரும் வாழ்வு, இதுவே உண்மை!'' என்றார் மற்றொருவர்.

''உலகமே ஒரு மனோ ரீதியான மாயை!'' என்பது இன்னொருவரின் வாதம்.

''இல்லை. உலகம் உண்மை. புறநிலையே ப்ரத்யட்சம்!'' என்ற கருத்தை வலியுறுத்தினார் ஒருவர்.

''உலகம் உண்மைதான். அதைத் தாண்டிய மானஸ வாழ்வும் உண்மைதான். அதையும் தாண்டிய பயணம்தான் மிக முக்கியமானது!''  மற்றொருவர் விவாதம் இப்படி இருந்தது.

கடைசியில் தீர்ப்புக் கேட்டு, அவர்கள் குரு ஹோகன் பக்கம் திரும்பினார்கள்.

''உங்கள் கருத்து என்ன? உலகம் ப்ரத்யட்சமான உண்மையா? அல்லது, மனோ ரீதியான மாயையா?'' கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் குருவை.

ஹோகன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

''அதோ ஒரு பெரிய பாறை தெரிகிறதே, அது மனதின் மாயையா? அல்லது, ப்ரத்யட்சக் கண்கூடா?''

''போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனத்தின் மாயை தான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனத்தின் சலனக் காட்சிகள் தான். அந்த வகையில் அந்தப் பெரிய பாறை நிஜம் அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்.''

''அவ்வளவு பெரிய கல்லை உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரிகிறீர்களே! உங்கள் தலை ரொம்பக் கனக்காதோ?''

குரு ஹோகன் போட்ட போடு அவர்களுக்கு மெய்யறிவை உணர்த்தியது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும், தீயில் பொசுக்கிவிட்டு அவரின் சீடர்களாயினர்.

உன்னுள் இருக்கும் உன்னை அறிந்துகொள்வது தான் பெரும் பாடு. எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்று வெளியே தேடுகிறான் மனிதன், உன்னுள் இருக்கும் இருப்பில் இருந்து வெளியே மனதைச் செலுத்துவது கடலில் வீசும் வலை போல. நிச்சயம், மீன்கள் சிக்குவதைப் போல எண்ணங்களுள் சிக்குண்டு விடுகிறான் மனிதன். எண்ணமே தானாகிறான். தன்னிலை கலைந்து, மனம் எதை நினைக்கிறதோ, அதுவாகவே ஆகி விடுகிறது, உன்னுள் இருந்து அனைத்தையும் பார்ப்பவன் இறைவன்; பார்க்கும் நீயே இறைவன்.

தான் யாரென விடையறியாத மனம் தன்னை வினவாமல், இவ்வுலகில் மற்ற வினாக்களை கேட்டு விடையறிந்து கொண்டேயிருக்கும்.

ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்


(ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம் என்றும் சொல்வார்கள். இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)


ஷண்முகம் பார்வதீ-புத்ரம் க்ரௌஞ்ச-ஸைல-விமர்தனம்
தேவஸேநா-பதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 1 |

ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும் தேவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

தாரகாஸூர-ஹந்தாரம் மயூராஸன-ஸம்ஸ்திதம்
ஸக்தி-பாணிஞ்ச-தேவேஸம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 2 |

தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

விஸ்வேஸ்வர-ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வரதநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 3 |

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும் தேவனும் ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும் மனதைக் கவருகின்றவனும் ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

குமாரம் முநிஸார்-தூலமாநஸானந்த-கோசரம்
வல்லீ-காந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 4 |

குமரக் கடவுளும் சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும் வள்ளியின் கணவனும் உலகங்களுக்கு காரணமானவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

ப்ரளய-ஸ்திதி-கர்தாரம் ஆதிகர்தாரம் ஈஸ்வரம்
பக்தப்-ப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 5 |

ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச் செய்கிறவரும் முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும் ஆனந்தத்தால் மதம் கொண்டவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

விஸாகம் ஸர்வ-பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா-ஸூதம்
ஸதா-பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்  | 6 |

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும் உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும் எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும்  ஜடையை தரித்தவனுமான சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரமிதம் ய: படேத் ஸ்ருணுயாந்நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் லபேத்

எவன் ஸ்ரீ ஸ்கந்தனின் ஆறு ஸ்லோகமுள்ள இந்த ஸ்தோத்திரத்தை படிப்பானோ அவன் கோரிய பொருளை உடன் அடைவான். முடிவில் ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பான்.

|| இதி ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||

கர்மா என்பது யாதெனில்...


ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!

அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது, மன்னன் மந்திரியிடம், “மந்திரியாரே, ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது!!” என்றார்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனார். மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டார்.

அடுத்த நாள் மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தார். அந்த கடைக்காரனிடம் யதார்த்தமாக கேட்பது போல, வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று, விசாரித்தார்.

அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான். சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன், "என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை; கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்; சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்; நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக்கூட செய்கின்றனர்; ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். 

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்.

"இந்த நாட்டின் மன்னன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். அவன் இறந்து போனால் எப்படியும் எரிப்பதற்கு நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும். எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்!” என்றான் கடைக்காரன்.

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது. இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே, மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை, அவரறியாமல் உண்டாக்கி, அப்படிச் சொல்ல வைத்தது என்றுணர்ந்தார் மந்திரி.

மிகவும் நல்லவரான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டார். தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவர் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினார்.

அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று, அரசனிடம், அந்த சந்தனமரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி தந்தார். தங்க நிறத்தையொத்த அந்த சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த மன்னன் மிகவும் மகிழ்ந்தான்.

அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான். உடனே, அந்தக் கடைக்காரனுக்கு, சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்.

மன்னன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்ற வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது. அந்த கடைக்காரனும், இத்தனை நல்ல அரசனை, தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று, தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்.

இப்போது சொல்லுங்கள். கர்மா என்றால் என்ன?

கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள், என்றெல்லாம் பதில் கூறினால், அவை உண்மையல்ல.

கர்மா என்பது நமது எண்ணங்களே.

எண்ணம் தான் அடிப்படையானது. எல்லா செயல்களும் (விளைவுகள்) எண்ணத்தில் தான் பிறப்பெடுக்கின்றன. ஆகவே, எண்ணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.

நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்.

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை நம்முள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் வந்து சேரும்.

அதனால் தான் மஹாகவி பாரதியார் கூட ஒரு கவிதையில் மஹாசக்தியிடம், "நினைவு நல்லது வேண்டும்" என கேட்கிறார்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
"நினைவு நல்லது வேண்டும்"
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்

செயல்-விளைவு தத்துவம்


ஒரு விவசாயி தன் நிலத்தை உழுது விதை விதைத்தாகி விட்டது. இனி காத்திருக்க வேண்டியதுதான்.

மனிதனின் பொறுப்பு முடியுமிடத்தில்  இறைவனின் பொறுப்பு தலைதூக்குகிறது. பொறுமையில்லாமல் விவசாயி அவசரப்பட்டால் எதுவும் நிகழாது. மன அழுத்தம் தான் மிஞ்சும். 

லிப்டுக்கான பட்டனை அழுத்தி விட்டீர்கள். லிப்ட் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு இன்னும் வரவில்லை என்று அங்கும் இங்கும் நடந்தால் மன அழுத்தம் தான்.

ஒரு செயலை செய்ய முடிவெடுத்து விட்டீர்கள். அச்செயல் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாம் செய்து விட்டீர்கள். இனி காத்திருக்க வேண்டியதுதான்.

பதட்டப்படாமல் காத்திருங்கள். அது அமைதியான வெற்றியை தரும். பதட்டப்பட்டால் மன அழுத்தத்துடன் வெற்றி கிட்டும்.

ஆன்மீக முன்னேற்றம் அடைய தேவையான குணநலன், செய்யும் கடமையை சரியாக செய்து விட்டு
காத்திருப்பதுதான்.

என்ன விளைவு வரவேண்டுமோ அது துளி பிசகாமல் சரியாக நடக்கும். பிரபஞ்ச பேராற்றலின் அடிப்படை சட்டம், 'என்ன நடக்க வேண்டுமோ அது துல்லியமாக நடக்கும்'. செயல்தான் நம்முடையது. மற்றவை இறைவனின் சட்டதிட்டமே.

கடமையைச் செய்வோம். மன அழுத்தமில்லாமல் காத்திருப்போம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எல்லாம் தன்னாலே நடக்கும்.





செக்கு மாடு


முன்பொரு ஞானி இருந்தார். அவர் முக்காலமும் உணர்ந்தவர்; கல்லையும் தங்கம் ஆக்கும் வல்லமை மிக்கவர். அவர் ஒரு ஊருக்கு வந்தார்.

மக்கள் தினம் தினம் அவரை தரிசித்து, அவரவர் குறையைச் சொல்லி யோசனைகள் கேட்டுச் சென்றனர். அவரும், பக்தர்களின் செயல் வெற்றிக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

அந்த ஊர் இளைஞன் ஒருவன், உழைக்காமலே பெரும் செல்வம் ஈட்ட நினைத்தான். அவன் அந்த ஞானியைப் பார்க்கச் சென்றான்.

அவன் அங்கு போன சமயத்தில், ஏழை ஒருவரின் வறுமை நீங்க ஒரு சிறு கல்லை தங்கக் கட்டியாக மாற்றி கொடுத்துக் கொண்டிருந்தார் ஞானி. அதை அந்த வாலிபன் பார்த்தான்.

அவனது மனம் வேகமாக ஒரு கணக்குப் போட்டது. அவனது முறை வந்ததும், ஞானியிடம், "ஐயா, தங்களுக்கு இருப்பது போலவே, கல்லைத் தங்கம் ஆக்கும் சக்தி எனக்கு வேண்டும்." என்று மிகவும் பணிவுள்ளவன் போல் நடித்துக் கேட்டான்.

அவனது உள்நோக்கம் உணர்ந்த ஞானி, அவனைப் பார்த்து, புன்முறுவல் செய்தார்.

பிறகு, ஞானி, சொன்னார்: "தம்பி, இந்த அற்புத ஆற்றல் எனக்கு இறைவன் அருளால் கிடைத்தது. அதை நான் பிறருக்குத் தரமுடியாது. ஆனால் வேறு ஒரு வழி இருக்கிறது!".

"என்ன வழி? சொல்லுங்கள். எவ்வளவு கஷ்டமானாலும் பரவாயில்லை!!" என்று, ஞானி முடிப்பதற்கு முன்பாகவே பரபரத்தான் இளைஞன்.

"ஆற்றங்கரையில் ஒரு கல் இருக்கிறது. அது அதிசயமான கல். அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும்." என ஞானி சொன்ன மறு விநாடியே புறப்பட்டான் இளைஞன். அவன் போன திசை பார்த்து அர்த்தத்தோடு சிரித்தார்.

அவர் நினைத்ததுபோவே, சென்ற அதே வேகத்தில், திரும்பி வந்தான் இளைஞன்.

"குருவே, ஆற்றங்கரையில் ஏராளமான கற்கள் இருக்கின்றன!! அவற்றுள் அந்த அதிசயக் கல்லை கண்டுபிடிப்பது எப்படி ? நீங்கள்தான் வந்து எடுத்துத் தரவேண்டும்." என்று கேட்டான்.

ஞானி, "அது என்னால் முடியாது. நான் தொட்டுவிட்டால், அது, உனக்குப் பயன் தராது. நீயேதான் தேடி எடுக்க வேண்டும்."

"அப்படியானால் அதன் அடையாளத்தையாவது சொல்லுங்கள்!!" எனக் கேட்டான் இளைஞன்.

"ஆற்றங்கரையில் உள்ள கற்களில், எந்தக் கல், நீ கையில் எடுக்கும்போது வெப்பமாக இருக்கிறதோ, அதுவே அதிசயக் கல். வெண்மையான அந்தக் கல், உன் கை பட்டதும், இளம் மஞ்சளாக மாறும். இதுதான் அடையாளம்." என அறிவுறுத்தினார் ஞானி.

அவருக்கு நன்றி சொல்லவும் மறந்து ஓடினான் இளைஞன்.

ஆற்றங்கரையில் இருந்த ஆயிரமாயிரம் கற்களில் ஒன்றை எடுத்தான். அது குளிர்ச்சியாக இருந்தது. அடுத்த ஒன்று. அதுவும் ஜில். மறுபடி மறுபடி, மீண்டும் மீண்டும், எடுக்க எடுக்க எல்லாமே குளிர்ச்சியான கல்லாகவே இருந்தன.

ஒருவேளை, அடையாளம் தெரியாமல் எடுத்த கல்லையே மறுபடி மறுபடி எடுக்கிறோமோ?? அவசர அவசரமாக யோசித்தவன் ஒரு முடிவு செய்தான். அதன்படி, ஒரு கல்லை எடுத்ததும் அது ஜில் என்று இருந்தால் உடனே அதை ஆற்றுக்குள் வீசிவிடுவான்.

இப்போதும் எடுக்க எடுக்க குளுமையான கல்லே வந்தது. ஒருநாள் இரண்டுநாள் என்று ஆரம்பித்து மாதக் கணக்கில் அதே நிலை நீண்டது. கல் எடு விட்டெறி... கல் எடு விட்டெறி... கல் எடு விட்டெறி... ! ஏதோ இயந்திரம்போல் ஆகிப்போனான் இளைஞன். ஆனால் அவன் பேராசை மட்டும் குறையவே இல்லை.

எந்த முயற்சிக்கும் ஒரு பலன் இருக்கும் அல்லவா!! அதுபோலவே, அந்த இளைஞனின் முயற்சிக்குப் பலனாக அந்த அதிர்ஷ்டக்கல் அவன் கைக்கு கிடைக்கும் நாளும் வந்தது.

அன்றும், வழக்கம்போல், ஆற்றங்கரைக் கற்களை எடுத்துத் தேடத் தொடங்கினான் இளைஞன். ஒன்று... இரண்டு... மூன்றாவதாக அவன் எடுத்தது வெண்மையா கல். அந்தக் கல்லில் வழக்கமான குளிர்ச்சி இல்லை. ஆம், அதுதான் அந்த அதிசயக்கல்.

அந்தக் கல்லை எடுத்ததும் இளைஞன் என்ன செய்தான் தெரியுமா? தினம்தினம் கல்லை எடுத்ததும் ஆற்றுக்குள் விட்டெறிந்து மனம் பழகி விட்டதல்லவா!! அந்த அதிசயக் கல்லையும் ஆற்றுக்குள் வீசி விட்டான்.

எதற்காக முயற்ச்சித்தானோ, அதற்கான பலன் பெற, உதவி செய்ய வேண்டிய அவன் மனமே, எதிர்மறையாக செயல்பட்டு விட்டது.

மனம் இயல்பாக பழகிப்போன பாதையில் இருந்து அவ்வளவு சுலபமாக மாறாது. செக்கு மாடு சுற்றுவதைப் போல, ஒரே செயலுக்குள் மனத்தைப் பழக்கி விடக்கூடாது. சூழ்நிலையை அனுசரித்து நடக்கும்படி (dynamic) மனத்தை நிதானமாக இயக்க வேண்டும். ஆரம்பம் முதலே நாம் நேர்மறையாகச் செல்ல மனத்தைப் பழக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிவிட்டு நேர்மறைச் சிந்தைனையைப் பதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், உங்கள் மனமே உங்கள் வெற்றிக்கு வழிகாட்ட ஆரம்பித்து விடும்.

முக்கியமாக, இது, குழந்தை வளர்க்கும் தாய்மார்களுக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ரொம்பவே வேண்டிய ஒன்று. ஏனென்றால், பசுமரத்தில் அறையப்படும் ஆணி, பட்டென்று பதிந்துவிடும்.

நீதி: ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது.

ஆரம்பம் முதலே, நல்லவற்றை மனதில் விதைக்கத் தொடங்கிவிட்டால், மனம் நல்லதையே நாடும், நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையும்.





____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், செக்கு மாடு, மனப்பழக்கம், தொட்டில் பழக்கம்.

வாழ்வில் எது நிம்மதி தரும்?


ஒரு அரசன் ஞானியிடம், "என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்றான்.

"உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என ஞானி கேட்டார்.

"என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை" என்றான்.

"அப்படியானால், ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு" என்றார் ஞானி.

"எடுத்துக் கொள்ளுங்கள்!" என்றான் அரசன்.

"என்னிடம் கொடுத்துவிட்டு, இனி, நீ என்ன செய்வாய்?" என்றார் ஞானி.

அரசன், "நான், எங்காவது போய், ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்." என்றான்.

ஞானி, "எங்கோ போய், தெரியாத வேலையைச் செய்வதை விட, என்னிடமே வேலை செய். உனக்குத் தெரிந்தது, நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும், நீ, நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்." என்றார்.

சரி என ஆமோதித்து விட்டு சென்றான் அரசன்.

ஓராண்டு கழிந்த பின், ஞானி, அரசனை காண வந்தார். அரசன் மகிழ்ச்சியாக காணப்பட்டான். ஞானியை, வரவேற்று உபசரித்த அரசன், நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

ஞானி, "நீ இப்போது எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டதற்கு "நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்" என பதிலளித்தான் அரசன்.

ஞானி, "முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்கிற பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா ??"

"வேறுபாடு இல்லை" என்றான் அரசன்.

"அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?" கேட்டார் ஞானி.

அரசனுக்கு விழிப்பு உண்டானது.

ஞானி சொன்னார்: "அப்போது, நீ, இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை, நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். மனத்தின் எண்ணம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல, இந்த உடல் எனதல்ல, இந்த உயிர் எனதல்ல; என்னால் 'உருவாக்கப்படவில்லை'; இவையெல்லாம் எனக்கு 'கொடுக்கப்பட்டவைகளே' என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இனிமேலும், இதே மனநிலையுடன் இந்த நாட்டை நீயே ஆட்சி செய்."

ரயிலில் பயணம் செய்பவன் தன் சுமையை தன் தலையில் வைத்துக் கொள்வதால் ரயிலுக்கு பாரம் குறைந்து விடுமா? அவன் சுமந்தாலும் சுமக்காமல் கீழே இறக்கி வைத்தாலும், ரயில் அந்தச் சுமையையும் சுமையின் உரிமையாளரையும் சுமக்கத் தானே போகிறது!! அதுபோலத்தான் என்னவோ எல்லாவற்றையும் நீயே சுமப்பதாக எண்ணிக் கொள்கிறாய். எல்லாவற்றையும் "நான்" தான் செய்கிறேன் என்ற நினைப்பிருக்கும் வரை உன்னுடைய சுமை உன்னுடையது தான். இறக்கி கீழே வைத்துவிடு. உன்னை மற்றும் உன்னுடைய சுமையை எல்லாவற்றையும் தெய்வத்தின் திருவடியில் வைத்து சரணடைந்து விடு. "நான்" என்ற நினைப்பு அகன்றவுடன் சுகமாகப் பயணம் செய்வாய்.





____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, நான், அகங்காரம், சுமை.

நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்!


அந்த நாட்டு அரசன், தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த, மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒவ்வொரு அமைச்சருக்குமே சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

"ஐயோ, நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.

"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா? அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்.'' என்று நினைத்தான் மன்னன்.

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

"மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்.
உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.
அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும். நீங்கள் கொண்டுவரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும். இந்தப் பயிற்சித் திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.'' என்றார் மன்னர்.

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.

மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள். அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.
மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்றெண்ணி, அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும், சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
"இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.
அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.
சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ, அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி, இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை சரியாக விளக்குகிறது, மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம். அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும். நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா, இல்லை, சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

'அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான். விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி.

நல்லதை மட்டுமே நினைப்போம், நல்லதே நடக்கும்!




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, கர்மவினை, பாவம், புண்ணியம், வினைப்பயன், கன்று பசு.

கர்மவினை கதை


அந்த நாட்டின் மன்னன், பலருக்கும் தானமளிப்பதில், பெரும் விருப்பமுடையவன். குறிப்பாக, பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்.

ஒரு நாள் அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவ்விடத்திற்கு மேலே, கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்தது. கழுகின் அலகிலிருந்த, செத்த பாம்பின் வாயிலிருந்து, ஒரு துளி விஷம் உணவுக்குள் விழுந்தது. அதனால், சரியாக அந்த விஷம் இருந்த உணவை உண்ட ஒரு பிராமணன் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை!

பாம்பின் மேல் குற்றமில்லை; ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை; ஏனென்றால் அது தன் உணவை சுமந்து பறந்து கொண்டிருந்தது. மன்னனோ, தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின், "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே. தண்டனையை யாருக்கு வழங்குவது என்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான். சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு... நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வழி தெரியாமல் வந்தனர். அங்கு பானை விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியைக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை.

அவள் அந்த அந்தணர்களிடம் "கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அந்தணர்களை இந்த மன்னன் சாகடிப்பது போலத் தெரிகிறது!!" என்று சொன்னாள்.

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன், தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து, அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை/ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசக் கூடாது. நாமுண்டு, நம் வேலையுண்டு என்றிருக்க வேண்டும்.




____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், படித்ததில் பிடித்தது, கர்மவினை.