மூவண்ணக்காரி



மூன்று நிறத்தழகி! அவள்
    என்றும் மூப்படையா முத்தழகி!
முப்பத்து மொழியழகி! முன்னைப்
    பழமைக்கும் முதலான வடிவழகி!
பிரம்மனின் ஞான உதயத்தால்
    பிறவி எடுக்காத நற்செல்வி!
பிங்கலி வெங்கையா பின்னி
    வடிவமைத்த தவப் புதல்வி!

நெற்றி எங்கும் செந்தூரம்
    படர்ந்து குளிர்ந் தவளோ!
நீலவான நிறம் ஒத்த
    சக்கரம் குறித் தவளோ!
பச்சை வண்ணக் காலாடை
    சோலையாய் செழித் தவளோ!
பனியில்லா தும்பைப் பூவாய்
    உள் மனது வெளுத்தவளோ!

அலுவலக நேரங்களில் நம்மை
    அண்ணாந்து பார்க்க வைப்பாள்
அந்தி நேரம் ஆகிவிட்டால்
    அசையாமல் தனித் திருப்பாள்
மழையில் நனைய விரும்பாதவள்
    மண்ணில் வீழ விழையாதவள்
மறைக்க முடியாத துக்கத்தை
    அரைக் கம்பத்தில் காட்டுபவள்

விளையாட்டு வீரர்களின்
    வெற்றியைக் குறிக்கும் பொன்னாடை!
வேலியோரக் காவலர்கள்
    உழைப்பில் எங்கும் இவள் வாடை!
விதி முடிந்த தலைவர்களை
    அலங்கரிக்கும் இறுதி ஆடை!
விலையில்லா தியாகிகளின்
    வியர்வையிலே நனைந்த வீணை!

கோட்டை அவளது குடியிருப்பு
    குடிசையும் அவளுக்கு வசிப்பிடம்
ஏற்ற இறக்கம் இரண்டிலுமே
    இனிய மரியாதை பெற்றிடுவாள்
ஏற்றம் அவளுக்கு எளிமை
    இறங்கி வருவதிலோ பொறுமை
காற்றில் வளைந்து நெளிந்தாலும்
    கடமையை நேராய் புரிவளன்றோ!

வர்ண வரையறை துளியும்
    வண்ணத்தில் இருந்த தில்லை
வாகா எல்லையிலும் அவள்
    வாசம் கொடுக்கும் முல்லை
வானமும் அவள் உயர்வுக்கு
    வாசல் திறந்து வைக்கும்
வாழ்த்தொலி முழங்கிட என்றும்
    வாரிசுகள் நிறைந்திருக்கும்.

**C. விஸ்வநாதன்

(சென்னை புத்தகக் காட்சி 2016-ல் கீதம் பதிப்பகம் வெளியிட்ட "கவியாட்படை" நூலில் இடம் பெற்ற முதல் கவிதை)