செக்கு மாடு


முன்பொரு ஞானி இருந்தார். அவர் முக்காலமும் உணர்ந்தவர்; கல்லையும் தங்கம் ஆக்கும் வல்லமை மிக்கவர். அவர் ஒரு ஊருக்கு வந்தார்.

மக்கள் தினம் தினம் அவரை தரிசித்து, அவரவர் குறையைச் சொல்லி யோசனைகள் கேட்டுச் சென்றனர். அவரும், பக்தர்களின் செயல் வெற்றிக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

அந்த ஊர் இளைஞன் ஒருவன், உழைக்காமலே பெரும் செல்வம் ஈட்ட நினைத்தான். அவன் அந்த ஞானியைப் பார்க்கச் சென்றான்.

அவன் அங்கு போன சமயத்தில், ஏழை ஒருவரின் வறுமை நீங்க ஒரு சிறு கல்லை தங்கக் கட்டியாக மாற்றி கொடுத்துக் கொண்டிருந்தார் ஞானி. அதை அந்த வாலிபன் பார்த்தான்.

அவனது மனம் வேகமாக ஒரு கணக்குப் போட்டது. அவனது முறை வந்ததும், ஞானியிடம், "ஐயா, தங்களுக்கு இருப்பது போலவே, கல்லைத் தங்கம் ஆக்கும் சக்தி எனக்கு வேண்டும்." என்று மிகவும் பணிவுள்ளவன் போல் நடித்துக் கேட்டான்.

அவனது உள்நோக்கம் உணர்ந்த ஞானி, அவனைப் பார்த்து, புன்முறுவல் செய்தார்.

பிறகு, ஞானி, சொன்னார்: "தம்பி, இந்த அற்புத ஆற்றல் எனக்கு இறைவன் அருளால் கிடைத்தது. அதை நான் பிறருக்குத் தரமுடியாது. ஆனால் வேறு ஒரு வழி இருக்கிறது!".

"என்ன வழி? சொல்லுங்கள். எவ்வளவு கஷ்டமானாலும் பரவாயில்லை!!" என்று, ஞானி முடிப்பதற்கு முன்பாகவே பரபரத்தான் இளைஞன்.

"ஆற்றங்கரையில் ஒரு கல் இருக்கிறது. அது அதிசயமான கல். அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும்." என ஞானி சொன்ன மறு விநாடியே புறப்பட்டான் இளைஞன். அவன் போன திசை பார்த்து அர்த்தத்தோடு சிரித்தார்.

அவர் நினைத்ததுபோவே, சென்ற அதே வேகத்தில், திரும்பி வந்தான் இளைஞன்.

"குருவே, ஆற்றங்கரையில் ஏராளமான கற்கள் இருக்கின்றன!! அவற்றுள் அந்த அதிசயக் கல்லை கண்டுபிடிப்பது எப்படி ? நீங்கள்தான் வந்து எடுத்துத் தரவேண்டும்." என்று கேட்டான்.

ஞானி, "அது என்னால் முடியாது. நான் தொட்டுவிட்டால், அது, உனக்குப் பயன் தராது. நீயேதான் தேடி எடுக்க வேண்டும்."

"அப்படியானால் அதன் அடையாளத்தையாவது சொல்லுங்கள்!!" எனக் கேட்டான் இளைஞன்.

"ஆற்றங்கரையில் உள்ள கற்களில், எந்தக் கல், நீ கையில் எடுக்கும்போது வெப்பமாக இருக்கிறதோ, அதுவே அதிசயக் கல். வெண்மையான அந்தக் கல், உன் கை பட்டதும், இளம் மஞ்சளாக மாறும். இதுதான் அடையாளம்." என அறிவுறுத்தினார் ஞானி.

அவருக்கு நன்றி சொல்லவும் மறந்து ஓடினான் இளைஞன்.

ஆற்றங்கரையில் இருந்த ஆயிரமாயிரம் கற்களில் ஒன்றை எடுத்தான். அது குளிர்ச்சியாக இருந்தது. அடுத்த ஒன்று. அதுவும் ஜில். மறுபடி மறுபடி, மீண்டும் மீண்டும், எடுக்க எடுக்க எல்லாமே குளிர்ச்சியான கல்லாகவே இருந்தன.

ஒருவேளை, அடையாளம் தெரியாமல் எடுத்த கல்லையே மறுபடி மறுபடி எடுக்கிறோமோ?? அவசர அவசரமாக யோசித்தவன் ஒரு முடிவு செய்தான். அதன்படி, ஒரு கல்லை எடுத்ததும் அது ஜில் என்று இருந்தால் உடனே அதை ஆற்றுக்குள் வீசிவிடுவான்.

இப்போதும் எடுக்க எடுக்க குளுமையான கல்லே வந்தது. ஒருநாள் இரண்டுநாள் என்று ஆரம்பித்து மாதக் கணக்கில் அதே நிலை நீண்டது. கல் எடு விட்டெறி... கல் எடு விட்டெறி... கல் எடு விட்டெறி... ! ஏதோ இயந்திரம்போல் ஆகிப்போனான் இளைஞன். ஆனால் அவன் பேராசை மட்டும் குறையவே இல்லை.

எந்த முயற்சிக்கும் ஒரு பலன் இருக்கும் அல்லவா!! அதுபோலவே, அந்த இளைஞனின் முயற்சிக்குப் பலனாக அந்த அதிர்ஷ்டக்கல் அவன் கைக்கு கிடைக்கும் நாளும் வந்தது.

அன்றும், வழக்கம்போல், ஆற்றங்கரைக் கற்களை எடுத்துத் தேடத் தொடங்கினான் இளைஞன். ஒன்று... இரண்டு... மூன்றாவதாக அவன் எடுத்தது வெண்மையா கல். அந்தக் கல்லில் வழக்கமான குளிர்ச்சி இல்லை. ஆம், அதுதான் அந்த அதிசயக்கல்.

அந்தக் கல்லை எடுத்ததும் இளைஞன் என்ன செய்தான் தெரியுமா? தினம்தினம் கல்லை எடுத்ததும் ஆற்றுக்குள் விட்டெறிந்து மனம் பழகி விட்டதல்லவா!! அந்த அதிசயக் கல்லையும் ஆற்றுக்குள் வீசி விட்டான்.

எதற்காக முயற்ச்சித்தானோ, அதற்கான பலன் பெற, உதவி செய்ய வேண்டிய அவன் மனமே, எதிர்மறையாக செயல்பட்டு விட்டது.

மனம் இயல்பாக பழகிப்போன பாதையில் இருந்து அவ்வளவு சுலபமாக மாறாது. செக்கு மாடு சுற்றுவதைப் போல, ஒரே செயலுக்குள் மனத்தைப் பழக்கி விடக்கூடாது. சூழ்நிலையை அனுசரித்து நடக்கும்படி (dynamic) மனத்தை நிதானமாக இயக்க வேண்டும். ஆரம்பம் முதலே நாம் நேர்மறையாகச் செல்ல மனத்தைப் பழக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிவிட்டு நேர்மறைச் சிந்தைனையைப் பதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், உங்கள் மனமே உங்கள் வெற்றிக்கு வழிகாட்ட ஆரம்பித்து விடும்.

முக்கியமாக, இது, குழந்தை வளர்க்கும் தாய்மார்களுக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ரொம்பவே வேண்டிய ஒன்று. ஏனென்றால், பசுமரத்தில் அறையப்படும் ஆணி, பட்டென்று பதிந்துவிடும்.

நீதி: ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது.

ஆரம்பம் முதலே, நல்லவற்றை மனதில் விதைக்கத் தொடங்கிவிட்டால், மனம் நல்லதையே நாடும், நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையும்.





____________________________________________
Keywords: குட்டி கதைகள், சின்ன கதை, நீதிக் கதைகள், ஜென் கதைகள், நிமிடக் கதைகள், தத்துவக் கதைகள், தன்னம்பிக்கை கதைகள், ஆன்மீக கதைகள், தேனித் தென்றல், செக்கு மாடு, மனப்பழக்கம், தொட்டில் பழக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக