அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!

தமிழக அரசியல் களம் பல்வேறு தலைவர்களை சந்தித்து விட்டது. நல்லவர்களை அடையாளப்படுத்துகிற அதே களம் தான் நயவஞ்சகர்களையும் வாழ வைக்கிறது. எத்தனை காலம் இவர்களால் நிலைக்க முடிகிறது என்பதல்ல கேள்வி. அவர்கள் நிலைத்து நின்ற வரை, நமக்காக என்ன செய்தார்கள் என்பதையாவது ஆராய வேண்டுமல்லவா?

நாமும் எத்தனையோ தலைவர்களை தேர்ந்தெடுத்து விட்டோம். ஆனால் இன்னமும் எதையோ எதிர்பார்த்து தானே காத்திருக்கிறோம்! எதைத்தான் நாம் இந்தத் தலைவர்களிடம் எதிர்பார்க்கிறோம்? இலவசப் பொருட்களையா? இல்லை இனாமாகக் கொடுக்கும் சலவைத் தாள்களையா?

இலவசங்களை வாங்கும் நம்மில் எத்தனை பேர் அதனைப் பயன்படுத்துகிறோம் என்று கணக்கெடுத்தால் விரல்களை விட்டு எண்ணி விடலாம். கொடுக்கும் இலவசங்களை 'வேண்டாம்' என்று எதிர்க்காவிட்டாலும் 'தேவையில்லை' என்று விலகிச் செல்லும் துணிச்சல் நமக்கு ஏன் இன்னும் வரவில்லை? வெள்ளைத் தாள்களுக்கு இன்னமும் ஏன் நம் உள்ளங்கள் பறிபோகின்றன? வசதியான ஏழைகளாகத் தானே நம் வாழ்க்கைத் தரம் இருந்து வருகிறது.

கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக இதுவரை நாம் கேட்டிருக்கிறோமா? காசை வாரி இறைத்தால், எதுவும் நம் காலில் வந்து விழும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். கல்வியை வியாபாரப் பொருளாக்கியதும் அதைக் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் உருவாக்கி விட்டதுவே காலத்தின் அவல நிலையாகி நிற்கிறது. ஆனாலும் கூட இன்னமும் வேலை வாய்ப்புகள் வீட்டு வாசலுக்கு வரும் முன்னரே வெள்ளை முடிகள் எட்டிப் பார்த்து விடுகின்றதே! காசு கட்டிப் படிக்க வைத்தவர்களின் பிள்ளைகளெல்லாம் கரையேறி இருக்கிறார்களா? இல்லையே, ஏன்? கலைமகளை விலை கொடுத்து வாங்க முயல்வதன் விளைவுகள் தான் இவை அத்தனையும். காசுக்கு அடி பணியாதவள் தான் கலைவாணி. அவள் வாசித்து வாழும் இதயங்களுக்குள் மட்டுமே ஓசை இல்லாமல் உறைந்து நிற்பவள்.

ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது கல்வி முறை மாற்றப்படுவது போல் கல்வியின் தரம் உயர்த்தப்படுவதில்லை. மதிப்பெண்கள் கூடுகிறதே தவிர மனிதப் பண்புகள் குறையத் தொடங்கி விட்டன. இதற்கு மாணவர்களை மட்டும் குறை சொல்லி விட்டு மற்றவர்கள் மறைந்து நிற்க முடியாது. ஏனென்றால் அவர்களை வழி நடத்த வேண்டிய ஆசிரியர்களுக்கே வாழ்க்கைப் பாதுகாப்பு குறைந்திருக்கிறது.

நம் குறைகளைக் களைய, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஒருவர் நம்மை மறப்பது தான் இங்கு நிதர்சனமாகி விடுகிறது. தவறு செய்யும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விரைவாக விடுதலை செய்யப்படும் அளவுக்கு சட்டத்தின் சல்லடையில் சமத்துவம் பெருகவில்லை. வடிகட்டப்பட வேண்டிய தவறுகள் எல்லாம் வாய்க்கால் வழியாகப் பாய்ந்து விளைநிலத்தை விஷமாக்குகின்றன.

பயிர் சேதமடைந்தால் சமாளித்து விடலாம். ஆனால் நிலமே பாழ்பட்டு வருவது தான் நம்மை நிலை குலைய வைக்கிறது. ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் என்பது விளைநிலம் போன்றது. அதில் விளையும் பயிர்களெல்லாம் அந்நாட்டில் வாழ்பவர்கள். அந்த நிலத்தை உழுது, பண்படுத்த வேண்டிய விவசாயிகள் தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஆவர். நிலத்தைப் பழுது பார்க்க வேண்டியவர்கள் எல்லாம் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களால் ஆளப்பட வேண்டியவர்கள் மக்களை ஆள்வது தான் நம் மக்களாட்சியின் மகத்துவம். நிலம் பழுதடைந்தால் நாம் எங்கு நின்று வளர்வது?

தவறுகளை தட்டிக் கேட்காமல் அவற்றை வளர்த்து விடும் ஒரு சமூகம், எவ்வளவு காலம் அதன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்? வள்ளுவரின் குறளையே நம் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி வளைத்துப் பொருள் கொள்ளும் வல்லவர்கள் அல்லவா நாம் ! கம்ப்யூட்டர் முதல் கட்சி வரை காசு பார்க்கும் வழக்கத்தையே விரும்புகின்றன. கலாச்சாரங்களை மேம்படுத்த கால அவகாசம் கிடையாது!

காலம் எனும் மருந்தை வைத்து இங்கே பல அரசியல் காயங்கள் ஆற்றப்படுகின்றன. ஒரு காயத்தின் வலியை மறக்கச் செய்ய இன்னொரு காயம் ஊதி பெரிதாக்கப்படுகிறது. ஆனால் ஆற்றப்பட்ட காயத்தின் ஆறாத வடுக்களை அரசியல் ஆபரணங்கள் அலங்கரித்து மறைக்கின்றன.

பொதுநலக் கொள்கைகளுக்காகவே உயிர் நீத்தவர்கள் மண்ணில், கோட்டையை பிடிப்பது மட்டுமே கொள்கை என்று புறப்பட்டு விட்ட கூட்டத்தை, நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் நீங்களும் நானுமல்லவா இதை அனுமதித்தோம். அதனால் ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும், அதற்கான ஆட்டத்தை அமைதியாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு தண்டனை நமக்கு கிடையாது. எங்களுக்கு இது வேண்டும் என்று கேட்டுப் பெரும் உரிமை உள்ளதையே மறந்தே விட்டோம். மாறாக,  என்ன போடுவார்கள் என்று எதிர்பார்த்து நிற்கும் அளவுக்கு தான் இன்னமும் இருக்கின்றோம்.

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது, நமது அரசியல் நாகரிகமும் இந்த மண்ணின் ஆதி தர்மமும், வேரிலே புழு வைத்து விட்டதோ என்று நம்மில் சிலரைப் பதற வைக்கிறது.

எழுந்து நிற்காமல் இன்னமும் எத்தனை காலங்களுக்கு இந்த அவலங்களை நாம் அனுமதிக்கப் போகிறோம்? எது நடந்தாலும் இது சகஜம் என்ற இயல்புக்கு எப்போது வந்தோம்? என்னால் முடியாது என்று எல்லாரும் ஒதுங்கி நின்றால் யார் தான் இதைச் சரி செய்வது? காலம் தீர்மானிக்கும் என்றா இந்த சுதந்திரக் கோட்டையை நமக்கு கட்டி வைத்துச் சென்றார்கள்?

"நமக்கு மேலேயிருந்து, இறைவன் நம்மை கவனிக்கிறான்" என்ற நம்பிக்கை இருக்கும் வரை தவறு செய்ய மனம் மறுக்கிறது. அந்த நம்பிக்கை மறையும் பொழுதோ அல்லது மறக்கும் பொழுதோ தான் மனித மனம் தடம் மாறிச் செல்கிறது.

தவறுகளை செய்து விட்டு அதை நியாயப்படுத்தும் சமூகமாக நாம் மாறத் தொடங்கி விட்டோம். இது எவ்வளவு பெரிய அபத்தம்! எதிர்க் காற்றிலே நாம் எச்சில் துப்புகிறோமே! சிறிது நேரத்தில் நம்மையல்லவா அது நாறடித்து விடும்.

இதைக் காட்டிலும் அபத்தமான செயல், பாவம் செய்தவர்கள் பிராயச்சித்தம் (தண்டனை) தேடுவதற்குப் பதிலாக பரிகாரம் தேடுவது தான். பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள் கூட பரிகாரம் செய்து விட்டு பாவம் தொலைந்ததென பல்லைக் காட்டுகிறார்கள். பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் உண்டென்றால் இந்த பூமி எப்பொழுதோ சுபிட்சம் அடைந்திருக்க வேண்டுமே! மாதம் மும்மாரி அல்லவா பொழிந்து கொண்டிருக்க வேண்டும்!

பிழைகளை மன்னித்து விடலாம். தவறுகளை கண்டித்தோ அல்லது கருணை காட்டியோ திருத்தி விட முடியும். குறைகளைப் பரிகாரங்கள் மூலமாக நிவர்த்தி செய்யலாம்.
( Message Courtesy:  'சென்னை' ஜெயஸ்ரீ )

ஆனால், பாவங்களைப் போக்க என்ன செய்வது?

நிச்சயமாக இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் கவியரசு கண்ணதாசன் அவர்களது திரைப்பாடல் ஒன்று இதற்கு வெளிச்சமிடுகிறது. "இது சத்தியம்" என்ற திரைப்படத்தின் பாடல் ஒன்றில்,

"பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக் காரனடா
பாவம் தீர்க்கப் பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா"

என்று தீர்க்க தரிசனமான வரிகளை கூறிச் சென்றுள்ளார். கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதையே தான் கூறியுள்ளார். மனிதர்கள் பாவம் செய்யும் பொழுது இறைவன் தண்டிப்பதில்லை. ஏனென்றால் அவன் செய்யும் பாவங்களே இறுதியில் அவனை தண்டித்து விடும். கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறுவதன் அர்த்தமும் இது தான். பாவம் செய்பவன் அதற்கான தண்டனையில் இருந்து ஒரு போதும் தப்பவே முடியாது. பாவச் செயல்களை செய்யும் பொழுது எளிதாக தோன்றும்; ஒரு வித போதை உணர்வு உள்ளூர கிளர்ச்சியூட்டி மேலும் தொடரச் செய்யும். ஆனால் போதை தெளிந்த பின்பு தான், வந்த பாதை தவறென்று புரிய வரும்.

நமக்கு மேலே ஒருவன் நம்மை நோட்டமிடுகிறான் என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள். அந்த ஒருவன் இறைவனாகவும் இருக்கலாம், எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கை இருக்கும் வரை நமக்கு நாமே நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும். சலவைத் தாட்கள் நிரப்பிய பெட்டிகள் யாவும் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை போன்றவை. பார்க்க அழகாக இருக்குமே தவிர, பண்படுத்த உதவாது. நான் ஒருவன் திருந்தினால் இந்த நாடு திருந்தாது தான். நாம் ஒட்டு மொத்தமாக திருந்தினால் உலகமே நம்மை உரிமையோடு கொண்டாடும். தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே தாயகம் சிறக்க முடியும்.

நமசிவாய வாழ்க!  நாதன் தாள் வாழ்க!


**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக