ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் திருக்கோயில்
முத்துலாபுரம், வத்தலகுண்டு வட்டம், திண்டுக்கல் மாவட்டம்


திருக்கோயில் அறிமுகம் :-

கோயில்கள் மனித இனத்தின் வரலாற்றையும் அழகியல் மரபுகளையும் மற்றும் அவர்களது உணர்வுக் குவியல்களையும் தாங்கிக் கொண்டு வியாபித்திருக்கின்றன. ஒரு கோயில் கட்டமைப்பின் ஒவ்வோர் அங்குலத்திலும் பிரம்மாண்டமான உழைப்பும் சொல்லப்படாத ரகசியங்களும் புதைந்திருக்கின்றன. கலியுகத்தில் பலவிதமான துன்பங்கள் மனிதனைத் துரத்துவதால், அவற்றை விலக்கிக் கொள்வதற்கு ஒரு ஆதார இடமாகவும் விளங்குகிறது.

தமிழகத்தில் சிவன், விஷ்ணு, மற்றும் பிரம்மா ஆகிய மூவரும் ஒரே தலத்தில் அருள்புரியும் கோயில்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முப்பெருந் தெய்வங்களை ஒரே தலத்தில் தரிசிப்பது கிடைத்தற்கரிய புண்ணியமாகும். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து செம்பட்டி செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவிலுள்ள முத்துலாபுரம் எனும் ஊரில் நதிக்கரையில் குபேர ஸ்தலத்தில் முப்பெருந் தெய்வங்களையும் தரிசிக்கலாம்.

திருக்கோயில் சிறப்புகள் :-

மூலவர் ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் மற்றும் திருத்தல நாயகி ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆகியோராவர். தமிழகத்தில் குபேர தலத்தில் முப்பெருந் தெய்வங்களுடன் வளர்நிதிகளான சங்கநிதி மற்றும் பத்மநிதி அருள்புரியும் சிறப்பு வாய்ந்த ஒரே தலம் இஃதாகும். முதன்மைத் தெய்வமான சிவபெருமானுடன் சிவகாமி, விஷ்ணு, பிரம்மா, கணபதி, தக்ஷிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்கா, பைரவர், நவகிரக நாயகர்கள், பலிபீடம், கொடிமரம், அதிகார நந்தி ஆகிய தெய்வங்கள் ஒரே இடத்தில் சிவாகம விதிகளின் படி “ஓம்” எனும் பிரணவ அட்சர வடிவமைப்பில் வரிசையாக அமைந்துள்ள சக்தி வாய்ந்த திருக்கோயிலாகும்.

நதிக்கரையில் முப்பெருந் தெய்வங்களும் ஒன்றாக அருள்புரிவதால் பாவங்களை நீக்கி வரமருளும் புண்ணியத் தலமாகும். காசியில் காணப்படுவது போலவே வடக்கிலிருந்து தெற்காக பாயும் வஞ்சிஓடைக் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் சிவபெருமான் யுகத்தின் பெயரைத் தாங்கி சிதம்பர நாயகராக கலியுகத்தில் உயிர்களுக்கு மோட்சம் வழங்குகிறார். குபேர தலமான இத்திருக்கோயிலின் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ உமா சமேதரரும் தல விருட்சமாக வில்வம் மற்றும் வன்னி மரங்களும் தீர்த்தங்களாக வஞ்சித் தீர்த்தம் மற்றும் பிரம்ம கூபம் ஆகியவை காணப்படுகிறது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகவும் விளங்குகிறது.

திருக்கோயில் புராணம் :-

சிவபெருமானின் இனிய நண்பரான குபேரனின் அழகாபுரி (இன்றைய இலங்கை) ஆட்சி நிர்வாகத்தை ராவணன் கைப்பற்றிய பிறகு, குபேரன், சிவனை காண கைலாயம் செல்லும் வழியில் இப்பொழுது கோயில் அமைந்துள்ள வஞ்சி நதிக்கரையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். தவத்தில் மூழ்கிய குபேரனுக்கு முப்பெருந் தெய்வங்களும் நேரில் காட்சியளித்தனர். சிவபெருமான் குபேரனுக்கு வளர்நிதிகளான சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகிய இரண்டையும் அருளிச் சிறப்பித்தார். சிவபெருமான் வரமளித்ததற்கு நன்றி செய்யும் விதமாகவும் தனது எண்ணம் விரைவாக ஈடேற நின்ற இயற்கைக்கு நன்றி செய்யும் விதமாகவும் சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகிய இருவரை இத்தலத்தில் தங்கியிருந்து கலியுகத்தில் இங்கு வந்து சிவனை வழிபடும் மக்களுக்கு கல்வி மற்றும் தன வளர்ச்சியை வழங்குமாறு குபேரன் பணித்தார். இதற்கான குபேரபீடம் கருவறையின் உள்ளும் வளர்நிதிகளின் புடைப்புச் சிற்பங்கள் கருவறை வாயிலின் இருபுறங்களிலும் கற்றுளிகளில் குறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதியின் கைகளில் செல்வச் செழிப்பினை குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கும் பத்மநிதியின் கைகளில் கல்விச் செல்வத்தினை குறிக்கும் அடையாளமான தாமரையும் காணப்படுகிறது.

ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயில் அமைந்துள்ள இடம் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர் ஆளுகையில் அவர்களது அரசவை குருவான தொட்டையசாமி நாயக்கர் அவர்களின் பெயரால் “தொட்டையங்கோட்டை துவராபுரி” என அழைக்கப்பட்டது. தொட்டையசாமி நாயக்கர் கனவில் சிவபெருமான் துறவி வடிவில் தோன்றி மும்மூர்த்திகளையும் ஒரே ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்து கோயிலெழுப்ப அருள்பாலித்தார். அதற்கடுத்த நாள் அரண்மனை வேலையாட்கள் கழுதையில் ஏற்றிய மிளகு மூட்டையுடன் வஞ்சிநதியை கடக்கையில் அங்கிருந்த ஒரு துறவி சிறிது மிளகு கேட்டார். அவர்கள் அதை மிளகு மூட்டையல்ல; ஆமணக்கு முத்துகள் என்று கூறிச் சென்றனர். அரண்மனையில் மூட்டைகளை அவிழ்த்துக் காட்டிய பொழுது மிளகு அனைத்தும் ஆமணக்கு முத்தாக இருந்ததைக் கண்ட மன்னரும் நாயக்கரும் அரச பரிவாரங்களோடு துறவியை தேடி வஞ்சி நதிக்கரை வந்தனர். அங்கு சிவலிங்கமும் வளர்நிதிகளின் சின்னமும் இருந்ததைக் கண்டார்கள். நாயக்கர் கனவில் துறவியாக  வந்த சிவபெருமானே வஞ்சிக்கரையிலும் துறவியாக வந்து கோயிலெழுப்ப உகந்த இடத்தை குறிப்பால் அடையாளப்படுத்தியாக எண்ணி பாண்டிய அரசின் முழு பங்களிப்புடன் கற்கோயில் கட்டப்பட்டது. கருவறை, அர்த்த மண்டபம், நந்தி மண்டபம் ஆகியவை கற்றுளியாக கட்டப்பட்டன. தெய்வங்களை சிவாகம விதிகளின் படி “ஓம்” எனும் பிரணவ அட்சர வடிவிற்குள் நிர்மாணித்தனர். திருக்கோயில் பராமரிப்பிற்காகவும் வழிபாட்டுச் செலவுகளுக்காகவும் இறையிலி நிலம் வழங்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட பிற்கால பாண்டிய அரசின் வீழ்ச்சியால் இறையிலி நிலங்களின் மானியம் கிடைக்கப் பெறாமல் பராமரிப்பின்றி விடப்பட்டது.

கி.பி.15 நூற்றாண்டில் சோழ நாட்டிலிருந்து பாண்டிய தேசம் வந்த பல்வேறு சமுதாய மக்கள் அவர்களின் குல தேவதைகளை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். மேலும் அவ்வழியில் வியாபார நிமித்தமாக சென்றோர் சிவலிங்கத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டுச் சென்றார்கள். அவ்வாறு வழிபட்டுச் சென்றோரின் வியாபாரம் விருத்தியாகவும் லாபம் சீராகவும் இருந்ததால் மற்ற வியாபாரிகளும் வழிபடலாயினர். மேலும் அவர்களது வாழ்க்கையும் வளமுடன் வளர்ந்தது. இதனால் இத்தலம் வியாபார விருத்தி வழங்கும் ஸ்தலமாகவும் சகல பாவங்களையும் நிவர்த்தி செய்து வரமருளும் புண்ணிய ஸ்தலமாகவும் மக்களால் நம்பப்பட்டது.

மக்கள் செல்வாக்கு காரணமாக கி.பி.18 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் ஆளுகையில் சந்தையூர் பாளைய அரசால் விரிவுபடுத்தி புனரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது கி.பி.1760 ஆம் ஆண்டு ஹைதர் அலி படைக்கும் முகமது யூசுப்கானின் படைக்கும் இடையே வத்தலக்குண்டு பகுதியில் நடந்த போரினால் இத்திருக்கோயிலும் சேதமடைந்தது. கருவறை விமானம், மகா மண்டபம், முன் மண்டபம், குலதெய்வ சன்னதிகள் ஆகிய சுண்ணாம்புக் காரை பகுதிகள் சந்தையூர் ஜமீனால் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் வரையிலும் திண்டுக்கல் கோட்டையைக் கைப்பற்ற நாயக்க மன்னர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக இப்பகுதியில் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இத்திருக்கோயில் சேதப்படுத்தப்பட்டு புனரமைப்பு வேலை தொடரப்படாமலே விடுபட்டு விட்டது.

இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்த பிறகு திரு. சிதம்பரம் செட்டியார் அவர்கள் தலைமை அர்ச்சகராக பொறுப்பு வகித்த காலத்தில் அவரது தலைமையில் புனரமைப்பு தேவைகளுக்காக பக்தர்களிடமிருந்தும் நிதி ஆதாரங்கள் பெறப்பட்டு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டனர். புனரமைப்பு வேலையின் பொழுது சில பாண்டியர் கலைப்பாணி கற்சிலைகள் தரைக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. கருவறை விமானம், பரிவார மற்றும் குலதெய்வ சன்னதிகள் போன்ற முக்கியப் பகுதிகள் புனரமைக்கப்பட்டு கருவறையில் புதிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. கி.பி.2011 ஆம் ஆண்டு சிவகாமி அம்பாள், கால பைரவர், லிங்கோத்பவர், கருடாழ்வார், விஷ்ணு துர்க்கை ஆகிய தெய்வப் பிரதிஷ்டையோடு முழுமையாக புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது ஹோம குண்டத்தின் அக்னி வலம் சுழித்து எழுந்ததும் நன்னீராட்டின் பொழுது கருவறையின் மேலே கருடன் மூன்று முறை வலமிருந்து இடமாக வட்டமடித்ததும் இத்திருக்கோயிலின் புனிதத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.

குல தெய்வங்கள் :-

சந்தையூர் ஜமீனால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்ற பொழுது திருக்கோயிலைச் சுற்றி இருந்த குல தேவதைகளுக்கும் தனிச் சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டன. பெரியாச்சி அம்மன், கருப்பசாமி, காத்தவராயன் போன்ற குலதேவதைகள் இங்கு வழிபடப்படுகின்றனர். பெரியாச்சி அம்மன் மற்றும் கருப்பசாமி ஆகிய தெய்வங்கள் பல்வேறு சமூகத்தினருக்கும் குல தெய்வங்களாக இருப்பதால் வழிபாட்டின் பொழுது சாதி ரீதியான கருத்து வேறுபாடுகள் வராமல் தடுக்க பெரியாச்சி அம்மனை மட்டும் சுத்தமுக தெய்வமாக திருக்கோயில் வளாகத்தினுள் கிழக்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர். பெரியாச்சி அம்மனே பேச்சியம்மனாக வழிபடப்படுகிறாள். ஆனால் பெரியாச்சி அம்மன் எனும் பேச்சியம்மன் இங்கு சுத்தமுக தெய்வமாக இருப்பதால் சூலைப் படையல் செய்யும் வழக்கம் கிடையாது. கருப்பசாமிக்கான வழிபாடு அனைவருக்கும் ஒரே விதமாக இருப்பதால் திருக்கோயில் வளாகத்திற்கு வெளியே பிரதிஷ்டை செய்தனர். நின்ற கோலத்தில் கம்பீர உருவம், தலைப்பாகை, இடைக்கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, மற்றும் ஓங்கிய கையில் அரிவாளுடன் அருள்புரிகிறார்.

திருக்கோயில் விழாக்கள் :-

ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி தொட்டு மூன்று நாட்களுக்கு விழா நடைபெறும். இதனை “மாசிப் பச்சை விழா” என்று அழைப்பார்கள். மஹா சிவராத்திரி இரவில் சுவாமிப் பெட்டி பூசாரிபட்டியில் இருந்து ஊர்வலமாக வந்து 21 பரிவார தெய்வங்களுக்கும் 61 சேனைகளுக்கும் பள்ளையம் பிரித்து கொடுக்கப்படும். மூலவருக்கு நான்கு கால வழிபாடுகள் அபிஷேகத்துடன் கடைபிடிக்கப்படும். அதற்கடுத்த நாள் அமாவாசை திதியில் பக்தர்கள் அவர்களது குல தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர். குல தெய்வங்களுக்கு முப்பூசை கொடுப்பவர்கள் கருப்பசாமி சன்னதியின் முன்பு கொடுப்பார்கள். அன்று மாலை வேளையில் கழுமரத்தில் சேவல் பலியிடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்ட பின் மூன்றாம் நாள் வளர்பிறையில் நடை திறக்கப்பட்டு நித்திய வழிபாடுகள் தொடரப்படும். மேலும் பக்ஷ பிரதோஷம், மார்கழி திருவாதிரை, ஆடிப் பெருக்கு போன்ற சிவத்தல விழாக்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை சிறப்புகள் :-

கருவறையின் பிரநாளம், அரைத்தூண், போதிகை, தேவகோட்டம், மீன் சின்னம் ஆகியவை பாண்டியர் கட்டடக் கலையை காட்டுகின்றன. சிற்பக்கலை மிகுந்துள்ள இத்திருக்கோயிலில் கருவறை மற்றும் அர்த்த மண்டப வெளிச்சுவரில் சிவபெருமானின் மகேஷ மூர்த்தங்களான சந்திரசேகரர், கங்காளர், ரிஷபாரூடர், கஜாசுர சம்ஹாரர், காளிகா தாண்டவ மூர்த்தி போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. சிற்பங்களில் காணப்படும் கரமகுடம், கேசபந்தம், அளவான ஆபரணம், சன்னமான முப்புரிநூல் ஆகியவை பிற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் அமைந்துள்ளன. பேச்சியம்மனின் சிரசில் “ஜ்வால கேசம்” (கதிர் மகுடம்) காணப்படுவதால் அவள் தீமைகளை அழித்து மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுக்கும் சக்தி உடையவள் என அறியப்படுகிறது.

கோயில் கருவறையில் குபேர பீடம் காணப்படுவதால் பூர்வீக சொத்து இழப்பு, தொழில் முடக்கம், கூட்டுத்தொழில் மோசடி இப்படிப்பட்ட ஐஸ்வர்யங்கள் பாதிக்கப்பட்டோர்களுக்கும் ஆசைகளை நீக்கி வேண்டுவோருக்கும் தோஷம் நீக்கி வரமருளும் தலமாக விளங்குகிறது. இங்கு சிவபெருமானுடன் அருளும் சங்கநிதி மற்றும் பத்மநிதி ஆகியோரை வழிபட்டால் கல்வி மற்றும் தன வளர்ச்சி ஏற்படும்.

திருக்கோயில் நடைதிறப்பு விபரங்கள் :-

சாதாரண நாட்கள் : 6am-10am | 5pm-7pm
சிறப்பு நாட்கள்     : 6am-12pm | 4am-7pm 
போக்குவரத்து விபரங்கள் மற்றும் தொடர்புக்கு :-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து காந்திகிராமம் செல்லும் நகரப் பேருந்தில் அல்லது சித்தையன்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி “முத்துலாபுரம் சிவன் கோயில்” என்று கேட்கலாம். வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தாணி (Auto-rickshaw) வசதியும் உள்ளது. அலைபேசி வழி தொடர்புக்கு 07829256213 (விஸ்வநாதன்), 09750120685 (நடராசன்) மற்றும் கோயில் இணையதள முகவரி “http://kchidambara.wix.com/kchidambara”.


**C. விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக